Published:Updated:

`டி.ஆர்.பாலு பேசியது சரிதான்' - எஸ்.பி.ஜி பாதுகாப்பு குறித்து திருநாவுக்கரசர்!

தமிழகத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அதிசயம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதைத்தான் அதிசயம் நடக்கப்போகிறது என்று ரஜினி கூறியிருக்கலாம்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

புதுக்கோட்டையில், நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பி-யுமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, "வடமாநிலங்களில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பா.ஜ.க சட்ட விரோதமாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. தற்போது மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க அமைத்துள்ள ஆட்சியே இதற்கு ஒரு சான்று. விடுதலைப் புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து எனத் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசியது சரிதான்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

ஏனென்றால், விடுதலைப் புலிகளால்தான் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். அதனால் பாதிக்கப்பட்டது சோனியா காந்தியின் குடும்பம். ராஜீவ் காந்தியைப் பிரபாகரன் நேரடியாக வந்து கொலை செய்யவில்லை என்றாலும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் கொலை செய்தார்கள் என்பது கண்டறியப்பட்டு நீதிமன்றத்தால் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியை நாங்கள் கொலை செய்யவில்லை என அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறினாலும், இங்கு உள்ள சிலர் நாங்கள்தான் அவரைக் கொலை செய்தோம் என்று பகிரங்கமாகக் கூறி வருகின்றனர்.

அதனால், சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து எனவும் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு பேசி உள்ளார். பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காகப் பல கோடி ரூபாய் செலவு செய்யும் மத்திய அரசு சோனியா காந்திக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை விலக்கியது கண்டனத்துக்குரியது. உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தலைக் கொண்டு வந்திருப்பதால் தி.மு.க கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படாது. அ.தி.மு.க-வில் உள்ள குழப்பத்தால்தான் மறைமுகத் தேர்தலை அ.தி.மு.க அறிவித்துள்ளது. சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்களைப் பணம் கொடுத்து வாங்கி வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க செயல்பட்டு வருகிறது.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

தமிழகத்தில் ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இணைந்தும் செயல்படலாம். யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அதிசயம் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதைத்தான் ரஜினி அதிசயம் நடக்கப்போகிறது என்று கூறியிருக்கலாம். ரஜினிகாந்த் எனது நீண்ட கால நண்பர்தான் அவர் அரசியலுக்கு வரட்டும் அப்போது, பார்த்துக்கொள்வோம்" என்றார்.