Published:Updated:

ரஜினி முதல்வர்; அன்புமணி மத்திய அமைச்சர்! - பா.ஜ.க. புதுக்கணக்கு!

அன்புமணி, ரஜினி

பெர்முடா முக்கோண மர்மத்தையும் தூக்கிச் சாப்பிடும் தைலாபுரம் - டெல்லி - போயஸ்கார்டன் முக்கோணத் தொடர்புக்குள் என்ன நடக்கிறது?

ரஜினி முதல்வர்; அன்புமணி மத்திய அமைச்சர்! - பா.ஜ.க. புதுக்கணக்கு!

பெர்முடா முக்கோண மர்மத்தையும் தூக்கிச் சாப்பிடும் தைலாபுரம் - டெல்லி - போயஸ்கார்டன் முக்கோணத் தொடர்புக்குள் என்ன நடக்கிறது?

Published:Updated:
அன்புமணி, ரஜினி

``ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை. அவர் கட்சி தொடங்கிய பின், எங்களுடைய கருத்தைச் சொல்கிறேன். அவருடன் கூட்டணி அமைப்பது குறித்து இப்போதைக்கு எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை", சமீபத்தில் நடைபெற்ற பா.ம.க நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு விழாவில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை.

அன்று ரஜினியைக் கூத்தாடி என்று விமர்சித்த மருத்துவர், `கட்சியே ஆரம்பிக்காதவருடன் நாங்கள் எதற்கு கூட்டணி அமைக்க வேண்டும்?' என்று இன்று கொதித்தெழவில்லை. பெர்முடா முக்கோண மர்மத்தையும் தூக்கிச் சாப்பிடும் தைலாபுரம் - டெல்லி - போயஸ்கார்டன் முக்கோணத் தொடர்புக்குள் என்ன நடக்கிறது?

2016 சட்டமன்றத் தேர்தல் பா.ம.கவுக்கு மிகத் திருப்பமான தேர்தல். அதுவரை வடக்கு அடையாளத்தோடு மட்டுமே அறியப்பட்டு வந்த கட்சியை, `மாற்றம், முன்னேற்றம் அன்புமணி' என்கிற அடையாளத்தில், அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி தனியாகத் தேர்தலை எதிர்கொண்டது. இதற்கான வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் தேர்தல் வல்லுநரான ஜான் ஆரோக்கியசாமி. துறை வாரியாக தங்களின் செயல்திட்டங்களைப் பட்டியலிட்டு, கருணாநிதி, ஜெயலலிதா என்கிற மிகப்பெரும் பிம்பத்துக்கு மாற்றாக அன்புமணியை முன்னிறுத்தினர்.

ஜான் ஆரோக்கியசாமி
ஜான் ஆரோக்கியசாமி

அ.தி.மு.கவுக்கு அடுத்தபடியாக தமிழகம் முழுவதும் 230 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய பா.ம.க., 5.4 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இந்தத் தேர்தலில் எந்த வெற்றியையும் பா.ம.க பெறவில்லை என்றாலும், இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக தங்களை முன்னிறுத்திக்கொண்டதிலும் தங்களது ஜாதி அடையாளத்தைத் துடைத்தெறிந்ததிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டனர். பா.ம.கவின் இந்த மாற்றத்தை டெல்லியும் கவனிக்கத் தவறவில்லை. இந்தக் கவனம்தான், இன்று அரசியல் சதுரங்கத்தில் பா.ம.கவை மிக முக்கிய இடத்தில் நிறுத்தியிருக்கிறது.

பி.ஜே.பி இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் பேசினோம். ``கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இன்றைய அரசியல் சூழலில், தமிழகத்தின் மூத்த தலைவர் ராமதாஸ்தான். பிரதமர் மோடியே ராமதாஸின் சீனியாரிட்டியை அங்கீகரித்துள்ளார். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், ஏறத்தாழ 120 தொகுதிகள் வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகின்றன. வடக்கில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர்களிடம் 5.5 சதவிகித வாக்கு வங்கியை வைத்திருக்கும் ராமதாஸின் அனுசரணை 2021 தேர்தலில் எங்களுக்குத் தேவைப்படுகிறது. தி.மு.க.வை ஆக்ரோஷமாக எதிர்கொள்வதற்கும் ராமதாஸின் தயவு அவசியம். ரஜினி என்கிற பிம்பம்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலை எதிர்கொள்ள முடியாது. இதற்காக ஒரு பார்முலாவை முன்னெடுத்துள்ளோம்.

மோடி, ராமதாஸ்
மோடி, ராமதாஸ்

2021 சட்டமன்றத் தேர்தலில் ரஜினி, பி.ஜே.பி., பா.ம.க கூட்டணியை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். முதல்வர் வேட்பாளர் ரஜினிதான். மாநிலங்களவை எம்.பியான அன்புமணிக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படும். இந்த பார்முலாவுக்கு மருத்துவர் சம்மதித்தால், தமிழக அரசியல் சூழல் பெரிய மாறுதலைச் சந்திக்கும். `மாற்றத்துக்கு ரஜினி, முன்னேற்றத்துக்கு அன்புமணி' என்பதுதான் நாங்கள் பா.ம.கவுக்கு அனுப்பியுள்ள மெசேஜ்" என்றனர். பி.ஜே.பியின் மெசேஜுக்கு வழக்கம் போல் ராமதாஸ் எந்தப் பதிலையும் அளிக்கவில்லையாம். அதேவேளையில் உதறித்தள்ளவும் இல்லை எனக் கூறப்படுகிறது.

2016 சட்டமன்றத் தேர்தலின் போது தனித்துப் போட்டியிட்ட பா.ம.க., ஆறு தொகுதிகளில் 20 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 31 தொகுதிகளில் 10 சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளது. ராமதாஸைக் கூட்டணிக்குள் கொண்டுவர பி.ஜே.பி துடிப்பதற்கு இந்த வாக்கு சதவிகிதம்தான் பிரதானக் காரணம். கடந்த ஆண்டின் இறுதியில், ரஜினியும் அன்புமணி ராமதாஸும் சென்னை கேளம்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் பங்களாவில் தனியே சந்தித்துப் பேசிக்கொண்டதாக பி.ஜே.பி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாப்பூர் ஆடிட்டர் அறிவுறுத்தலின் பெயரில்தான் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

பா.ம.க மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம். ``ரஜினியும் அன்புமணியும் சந்தித்துக் கொண்டது குறித்து எங்களுக்குத் தெரியாது. ஆனால், பா.ம.கவுடன் அணிசேர பி.ஜே.பியும், ரஜினியும் தூதுவிடுவது மட்டும் உண்மை. எங்களுக்கு என்று குறைந்தபட்ச செயல்திட்டங்கள் உள்ளன. துறைவாரியாகச் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை வகுத்துள்ளோம். இதற்கெல்லாம் ரஜினி சம்மதித்து, அவருடன் கூட்டணி அமைந்து ரஜினி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் பட்சத்தில், கண்டிப்பாக ஒரு துணை முதல்வர் பொறுப்பை பா.ம.கவுக்கு ஒதுக்கக் கோருவோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைந்தால், கூட்டணி அமைச்சரவையும் கண்டிப்பாக அமையும்" என்றனர்.

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றிபெற்று அ.தி.மு.க ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டதில், பா.ம.கவுக்கு முக்கியப் பங்களிப்பு உள்ளது. விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில், பேரூராட்சி தேர்தலோடு ஊரக உள்ளாட்சித் தேர்தலையும் இணைத்து ஏப்ரலில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்தச்சூழலில், ராமதாஸைக் கழற்றிவிட அ.தி.மு.க தயாராக இல்லை. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ராமதாஸ் காய் நகர்த்துகிறார். ஊரக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் ஏழு மாவட்டங்களில், நான்கு மாவட்டப் பஞ்சாயத்து தலைவர் பதவியை பா.ம.க எதிர்பார்க்கிறதாம். இதுபோக மாநகராட்சிகளுக்கான தேர்தலில் ஓசூர், வேலூர் மாநகராட்சிகளைக் குறிவைத்துள்ளனராம்.

ராமதாஸ்
ராமதாஸ்

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருவருடம் இருக்கும் நிலையில், அதற்குள்ளாக பல அதிரடிகள் தமிழக அரசியலில் அரங்கேறப் போவதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் கை தேர்ந்தவரான ராமதாஸ், இந்த முறை எவ்வளவு மீன்களை அள்ளுகிறார் என்பது போக போகத் தெரிந்துவிடும்.