Published:Updated:

ரஜினி அரசியல்: மார்ச் வரை குழப்புவார் Vs நிச்சயம் வருவார்! - என்ன நடக்கிறது மக்கள் மன்றத்தில்?

ரஜினி
ரஜினி

`நவம்பர் 30-ம் தேதி ரஜினி நடத்திய கூட்டத்துக்குப் பிறகு, பி.ஜே.பி-யின் நிலைப்பாட்டில் மாற்றம் தெரிகிறது. ஒருவேளை ரஜினி அரசியலுக்கு குட்பை சொல்லிவிடுவாரோ என்று மிரண்டுபோய்விட்டார்கள்.’

`மார்ச் வரை ரஜினி குழப்புவார். அதன் பிறகு, அவர் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்’ என்றுதான் அவரைச் சுற்றியிருப்பவர்கள் சொல்கிறார்கள். `அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். ஆண்டவன் கட்டளை’ என்பதெல்லாம் ரஜினியின் பழைய பன்ச் டயாலாக்குகள்; காலவதி ஆகிவிட்டன. `அரசியலுக்கு வருவேன்... வருவேன்...’ என்று சொல்லி இழுத்துக்கொண்டேயிருப்பார். `வளர்த்துவிட்ட தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும்’ என்று ரஜினி சொன்னது வெறும் சினிமா டயலாக்தான்’ என்று ரசிகர்கள் அரசியல் ஆருடம் சொல்கிறார்கள்.

நவம்பர் 29-ம் தேதி இரவு வரை அரசியலுக்கு வருவது உறுதி என்றுதான் முடிவுசெய்திருந்தார். அன்று இரவு, ரஜினியை குழப்பியது யார் என்றுதான் ரசிகர் மன்றத்தினர் மத்தியில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது. குழப்பியவர்கள் சென்னையிலுள்ள கணக்கு தெரிந்த பிரமுகரும், மீடியாவிலுள்ள இன்னொரு பிரமுகரும்தான் என்கிறார்கள். இருவரும் பி.ஜே.பி-யின் தூதுவர்கள். அவர்கள் ரஜினியிடம்,``தனிக்கட்சி ஆரம்பித்து நீங்கள் நின்றால், ஓட்டை மட்டும் பிரிக்கலாம்; ஆட்சி அமைக்க முடியாது. நீங்கள் பிரிக்கும் ஓட்டு, பி.ஜே.பி-க்கு பாதகத்தை ஏற்படுத்தும். எனவே, எங்களுடன் கூட்டணி வைக்க நீங்கள் சம்மதிக்க வேண்டும் அல்லது தேர்தலில் நிற்காமல் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்'' என்று பேசியிருக்கிறார்கள்.

ரஜினி
ரஜினி

நவம்பர் 30-ம் தேதியன்று ரஜினி அவரது மன்ற நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார் அல்லவா... அப்போதுகூட, ``பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தால் நீங்கள், தமிழக மக்கள் விரும்ப மாட்டீர்கள்'' என்று ரஜினி தனது பேச்சில் குறிப்பட்டதை மன்றத்தினர் கவனிக்கத் தவறவில்லை. அப்படியென்றால், பி.ஜே.பி-யின் இரண்டாவது யோசனை - அரசியலுக்கு வராமல் இருப்பது. இந்த முடிவைத்தான் ரஜினி எடுப்பார் என்று மன்றத்தினர் கணித்தனர். ஆனால், ரஜினி தனது முடிவை அன்று மாலையோ அல்லது இன்றோ (டிசம்பர் 1) அறிக்கையாக வெளியிடுவார் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அப்படி எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

`நான் அரசியலுக்கு வரமாட்டேன்னு ஒதுங்கிட்டீங்களா..!’ - ஆலோசனைக் கூட்டத்தில் கொதித்தாரா ரஜினி?

இப்போதைக்கு அரசியலுக்கு வரவில்லை என்று உடனே அறிக்கை வெளியிடும்படி ரஜினியின் நெருக்கமானவர்களில் ஒரு கோஷ்டியினர் ஆலோசனை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இன்னொரு கோஷ்டியினர், `கொஞ்ச நாள்கள் வெயிட் பண்ணுவோம். புது அரசியல் கட்சி ஆரம்பித்தால் என்ன?' என்று ரஜினியிடம் பேசிவருகிறார்கள். `அரசியல் வேண்டாம்’ என்று ரஜினியிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் குழப்பிவரும் கோஷ்டியினரில் முக்கியமானவர் மன்றத்தின மாநில நிர்வாகி சுதாகர் என்று மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் பலரும் குற்றம்சாட்டுகிறார்கள்.

ரஜினி ஆலோசனைக் கூட்டம்
ரஜினி ஆலோசனைக் கூட்டம்

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பிக்கொண்டிருக்கும் கோஷ்டியினரில் ஒருவரிடம் பேசினோம். ``பி.ஜே.பி அதிகார தோரணையில் சில விஷயங்களை ரஜினியிடம் முன்வைத்தது. வருகிற தேர்தலில் ரஜினி தலைமையிலான கூட்டணியில் பி.ஜே.பி-க்கு 40 சீட்டுகள் கேட்கிறார்கள். `அ.தி.மு.க-வை உடைத்து ஒரு பிரிவை அழைத்துவருகிறோம். எஞ்சியிருப்பவர்கள் மீது ரெய்டு நடக்கும். ஏன்... இரட்டை இலை சின்னமே முடக்கப்படலாம். தினகரன், வைகோ, பா.ம.க., கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரை இந்தக் கூட்டணிக்கு அழைத்து வருவது எங்கள் பொறுப்பு. தேர்தல் செலவுகளைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

உடனே ரஜினி இது குறித்து, தனது நட்பு வட்டாரத்தினருடன் பேசியிருக்கிறார். அவர்கள் `நோ’ சொல்லிவிட்டனர். `பி.ஜே.பி-க்கு 20 சீட்டுகளை ஒதுக்கினாலே பெரிய விஷயம். பா.ம.க கட்சியினர் 35 - 42 சீட்டுகள் எதிர்பார்க்கிறார்கள். வைகோ தரப்பினர் 12 - 15 எதிர்பார்க்கிறார்கள். பிரிந்து வரும் அ.தி.மு.க-வுக்கு 50 - 60. இன்னும் கட்சிகளைச் சேர்த்தால், மொத்த சீட்டுகளில் 100-ல் நம்ம ஆட்கள் நிற்பதே கஷ்டமாகிவிடும். தேர்தலில் ஜெயிக்கும் எம்.எல்.ஏ-க்கள் அடிப்படையில் புதுக் கூட்டணி போடுவார்கள். அப்போது நம்மை பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள். நமது திட்டப்படி ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமில்லை. எனவே, இந்த பி.ஜே.பி-யின் கூட்டணி டீலுக்கு `நோ’ சொல்லிவிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

ரஜினி
ரஜினி

அதைக் கேட்டுக்கொண்ட ரஜினி, பதில் ஏதும் பேசவில்லை. நவம்பர் 30-ம் தேதி ரஜினி நடத்திய கூட்டத்துக்குப் பிறகு, பி.ஜே.பி-யின் நிலைப்பாட்டில் மாற்றம் தெரிகிறது. ஒருவேளை ரஜினி அரசியலுக்கு குட்பை சொல்லிவிடுவாரோ என்று மிரண்டுபோய்விட்டார்கள். ரஜினியுடன் கூட்டணிவைத்தால் மட்டுமே பி.ஜே.பி-க்கு லாபம். இல்லாவிட்டால், நஷ்டம். முன்பு அவர்கள் கேட்ட சீட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ள முன்வந்திருக்கிறார்கள்'' என்கிறார்.

`ஆக, ரஜினியின் கை இப்போது ஒங்கிவிட்டது. பி.ஜே.பி-யின் அதிகார தோரணை அடங்கிவிட்டது. இனி ரஜினி சொல்வதுதான் அரசியலில் நடக்கும் என்கிறார்கள்' அவரை அரசியலுக்கு இழுக்கப் போராடி வரும் கோஷ்டியினர். ஆனால், ரஜினியை குட்பை சொல்லவைக்க இன்னொரு கோஷ்டி காய்நகர்த்தி வருகிறது. இதில், யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

அடுத்த கட்டுரைக்கு