Published:Updated:

``ரஜினிகாந்த் 71 வயசுல பொழச்சு வந்திருக்கேன்... இப்ப இல்லேன்னா..!?'' - நடிகர் ரஜினிகாந்த் #LiveUpdates #Rajinikanth

ரஜினி
ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான தகவல்களின் முழுத் தொகுப்பு..!

12 Mar 2020 11 AM

``இளைஞர்கள் மத்தியில் அரசியல் அலை வர வேண்டும். அப்போது அசுர பல கொண்ட கட்சிகள் தோற்கும். நான் முதல்வராக வரவில்லை. வாக்குகளைப் பிரிக்க நான் வரவில்லை. எனக்கு என்ன 50 வயசா ஆகுது. இப்போ விட்டா அப்புறம் பாக்கலாம் என்று சொல்ல... எனக்கு 71 வயசு ஆகுது. ரஜினிகாந்த் 71 வயசுல பொழச்சு வந்திருக்கேன். கட்சி வேறு ஆட்சி வேறு என்ற புரட்சி நடக்கணும். அப்புறம் நான் வர்றேன். இதை நீங்கள் மக்களிடம் சொல்லுங்க.. ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது நடக்கவில்லை என்றால் எப்போதும் நடக்காது. " என்றார்.

12 Mar 2020 10 AM

``அரசியலுக்கு நிறையபேரை அழைத்துவர வேண்டும். அரசியலில் எனக்குப் பிடித்த தலைவர் அண்ணா.. அவர் எத்தனை பேரை அழைத்து வந்தார்.. அவர் அழைத்து வந்தவர்கள்தான் ஆட்சி செய்தார்கள். இப்போ யார் இருக்கிறார்கள். அரசியல் வெற்றிடம் இருக்கு. இதைப் பயன்படுத்துக்கொள்ள வேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வர வேணடும். தி.மு.க வுக்கு 30 % வாக்குகள் கிடைத்தால் கலைஞருக்காக 70% வாக்குகள் கிடைத்தது. அ.தி.மு.க வில் அப்படிதான். 70% வாக்குகள் ஜெயலலிதாவுக்காகக் கிடைத்தது"

12 Mar 2020 10 AM

ரஜினி, ``கட்சிக்குத் தனியாக ஆட்சிக்குத் தனியாக ஆள்களைக் கொண்டு வரும் எனது திட்டத்தை நிறையபேரிடம் சொன்னேன். ஆனால் யாரும் ஏத்துக்கலை. இதை நான் இன்று சொல்ல வில்லை. 2017 டிசம்பர் மாதம் பேசினப்பவே சொன்னேன்'' என்றவர் அரங்கில் இருந்த டிவி-யில் அன்றைய காட்சிகளை ஓடவிட்டார்.

12 Mar 2020 10 AM

``முதல்வர் பதவியை நான் விரும்பியது கிடையாது. 1996 -ம் ஆண்டில் தேடி வந்த பதவியை வேண்டாம் என்றேன். நான் என்றைக்குமே முதல்வராக என்னை நினைத்துப் பார்த்தது கிடையாது. ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள் நல்லவர்கள் பதவிக்கு வர வேண்டும். அரசியலில் எனக்கு பிடிக்காத வார்த்தை அழகு பார்ப்பது. எனக்கு அவரை முதல்வராக்க ஆசை, எம்.பி ஆக்கி அழகு பார்க்க ஆசைனு சொல்றாங்க.. அரசியலில் அழகு பார்க்கக் கூடாது வேலை பார்க்க வேண்டும்" என்றார்.

12 Mar 2020 10 AM

தொடர்ந்து பேசிய ரஜினி, ``சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் வயதான பலர் இருக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். மக்களுக்காக நல்ல எண்ணங்கள் கொண்ட இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வருவதே என் விருப்பம். அதற்கு ரஜினி பாலமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.

12 Mar 2020 10 AM

தொடர்ந்து பேசிய ரஜினி, ``கட்சிப் பதவிகள் தேர்தல் நேரத்தில் முக்கியம். ஆனால் தேர்தல் நேரத்துக்குப் பின்னர் பலரும் நான் ஆளும் கட்சி எனச் சொல்லிக்கொண்டு முறைகேடாகச் செயல்படுகிறார்கள். அதனால் தேர்தல் முடிந்த பின்னர் தேவையான அளவில் மட்டுமே கட்சிப் பதவிகள் இருக்கும்" என்றார்.

12 Mar 2020 10 AM

ரஜினி, ``தொடர்ச்சியாக நான் 25 வருடங்களாக அரசியலுக்கு வருவதாகச் சொல்கிறேன் என்று சொல்கிறார்கள். இனி அப்படிச் சொல்லாதீர்கள். 2017 டிசம்பரில்தான் அரசியலுக்கு வருவேன் எனத் தெரிவித்தேன். 1996 -க்குப் பிறகு கலைஞர், சோ அவர்களுடன் விவாதித்துள்ளேன். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர் நான் அரசியலுக்கு வருவேன்னு சொன்னேன். அப்போது சிஸ்டம் சரி செய்யணும்னு சொன்னேன். சிஸ்டம் சரி செய்யாம அரசிலுக்கு வரக்கூடாது. அப்படி வந்தால் மீன் குழம்பு வைத்த பாத்திரத்தில் கழுவாமல் சக்கரப் பொங்கல் வைப்பது போல் ஆகிவிடும்." என்றார்.

12 Mar 2020 10 AM

நடிகர் ரஜினி, ``என்னுடைய அழைப்பை ஏற்று வந்த ஊடக நண்பர்களுக்கு நன்று. இந்தச் சந்திப்பு எதுக்குன்னு உங்களுக்கே தெரியும். சில நாள்களுக்கு முன்னர் மா.செ சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் எனக்கு சில விஷயங்களில் ஏமாற்றம் எனச் சொல்லி இருந்தேன். ஊடகங்களில் செய்திகள் வெளியானது. சில விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்தச் சந்திப்பு" என்றார்.

12 Mar 2020 10 AM

இன்னும் சில நிமிடங்களில் செய்தியாளர் சந்திப்பு!

செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் லீலா பேலஸ் ஓட்டலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்துவிட்டார். இன்னும் சில நிமிடங்களில் செய்தியாளர் சந்திப்பு தொடங்கவுள்ளது.

12 Mar 2020 10 AM

அரசியல் ஆட்டம் ஆரம்பம்...?

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாள்களாகவே அரசியல் தொடர்பான விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். ஒரு வார இடைவெளியில் இன்று இரண்டாவது முறையாக மன்ற மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்தார். ரஜினியின் செயல்பாடுகள் அவரது அரசியல் வருகையை உறுதி செய்வதாக அமைந்தது. இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று தனது அரசியல் கட்சி அறிவிப்பு தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு