Published:Updated:

ரஜினி : இப்போ கட்சி இல்லை... அப்போ வாய்ஸ் உண்டா?

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

ஓவியம்: கோபி ஓவியன்

ரஜினி : இப்போ கட்சி இல்லை... அப்போ வாய்ஸ் உண்டா?

ஓவியம்: கோபி ஓவியன்

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி
ரசியலில் நிச்சயமற்ற முடிவுகளை எடுப்பதில் ரஜினிக்கு நிகராக ஒருவரை தமிழகத்தில் சொல்ல முடியாது. ‘வரவே மாட்டார்’ என அரசியல் வல்லுநர்கள் பலரும் கணிப்புகள் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில், ‘அரசியலுக்கு வருவேன்’ என்று அறிவித்தார். கட்சி ஆரம்பிக்கப்போவதாக அவரே உறுதி செய்திருந்த தருணத்தில், ‘நான்‌ கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன்‌ தெரிவித்துக்‌கொள்கிறேன்‌‘ என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில்‌ தனக்கு நேர்ந்த உடல்நலக் குறைவைக் காரணம் காட்டிய அவர், ‘இதை ஆண்டவன்‌ எனக்குக் கொடுத்த எச்சரிக்கையாகத் தான்‌ பார்க்கிறேன்’ என்றிருக்கிறார்‌.

இத்துடன் ரஜினி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியுமா? ‘`இல்லை’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். நெருக்கமான பலரும் ரஜினியைச் சந்தித்து, ‘நீங்கள் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்கிறார்கள். பொங்கல் நேரத்தில் சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரஜினியைச் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. அது வெறும் சம்பிரதாய விசாரிப்பாக இருக்காது. தேர்தல் நேரத்தில் எந்த அஸ்திரத்தையும் அம்பறாத் தூணியில் சும்மா வைத்திருக்க பா.ஜ.க விரும்புவதில்லை.

ரஜினி
ரஜினி

ரஜினியின் அரசியல் ஆலோசகராகக் கருதப்படும் ஆடிட்டர் குருமூர்த்தி, ‘`தமிழகத்தில் 1996-ல் செய்தது போன்றே ரஜினிகாந்த் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துவார். அரசியல் கட்சி தொடங்குவதில்லை என்று கூறியிருக்கிறாரே தவிர, அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் விலகுவதாக அவர் கூறவில்லை. அரசியலில் தனது நிலைப்பாடு குறித்துக் கருத்து கூறுவார் என்றே நினைக்கிறேன்’’ என்கிறார்.

‘`ரஜினி ஒருபோதும் தி.மு.க-விற்கு ஆதரவு அளிக்க மாட்டார். மக்களுக்கு நல்லது செய்யும் அ.தி.மு.க-விற்கு மட்டுமே ஆதரவளிப்பார்’’ என அமைச்சர் ஜெயக்குமார் தன் எதிர்பார்ப்பைச் சொல்கிறார். ‘`என் நண்பர் ரஜினியிடம் நேரில் சென்று ஆதரவு கேட்பேன்’’ என்கிறார் கமல்ஹாசன்.

இத்தனைக்கும் காரணம், ரஜினி தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த இரண்டு வரிகள். ‘தேர்தல்‌ அரசியலுக்கு வராமல்‌ மக்களுக்கு என்னால்‌ என்ன சேவை செய்ய முடியுமோ அதைச்‌ செய்வேன்‌. நான்‌ உண்மையைப் பேச என்றுமே தயங்கியதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார் ரஜினி.

அதை வைத்தே, ‘தேர்தல் நேரத்தில் ரஜினி வாய்ஸ் கொடுப்பார்’ என்று பலர் நம்புகிறார்கள். தன் உடல்நிலையைக் காரணம் காட்டி பிரசாரத்துக்குப் போக முடியாத நிலை உள்ளதைக் குறிப்பிட்டிருந்த ரஜினி, ‘கட்சி‌ ஆரம்பித்த பிறகு ஊடகங்கள்‌, சமூக வலைதளங்கள்‌ மூலமாக மட்டும்‌ பிரசாரம்‌ செய்தால்‌ மக்கள்‌ மத்தியில்‌ நான்‌ நினைக்கும்‌ அரசியல்‌ எழுச்சியை உண்டாக்கி,‌ தேர்தலில்‌ பெரிய வெற்றியைப் பெற முடியாது’ என்று அறிக்கையில் கூறியிருந்தார். எனில், ரஜினி வாய்ஸ் கொடுப்பதால் மட்டும் வெற்றி வந்துவிடுமா?

தமிழகத் தேர்தல் களத்தில் ரஜினி மூன்று முறை வாய்ஸ் கொடுத்தார். காங்கிரஸிலிருந்து பிரிந்து மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸை ஆரம்பித்து, தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தார். 96 தேர்தலில் இந்தக் கூட்டணியை ரஜினி ஆதரித்தார். ‘`ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’’ என்றார். அந்தத் தேர்தலில் இந்தக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. 98 நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி இதே கூட்டணியை ஆதரித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 இடங்களில் மட்டுமே இந்தக் கூட்டணி ஜெயித்தது. 30 தொகுதிகளில் தோற்றது. மூன்றாவதாக ரஜினி வாய்ஸ் கொடுத்தது, 2004 நாடாளுமன்றத் தேர்தலில். ‘பாபா’ பட வெளியீட்டின்போது பா.ம.க-வுக்கும் ரஜினிக்கும் உரசல் எழுந்தது. எனவே, அந்தத் தேர்தலில் ‘பா.ம.க போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் அந்தக் கட்சியைத் தோற்கடிக்க வேண்டும்’ என்று ரஜினி கேட்டுக்கொண்டார். ஆனால், ஆறு தொகுதிகளிலும் பா.ம.க ஜெயித்தது.

‘ரஜினி வாய்ஸ்’ என்ற விஷயம் விவாதத்துக்கு வரும்போது, பலரும் 96 தேர்தலை மட்டுமே ஞாபகப்படுத்துகின்றனர். ஏனெனில், அந்த ஒரு தேர்தலில் மட்டுமே அவரின் வாய்ஸ் எடுபட்டது.

அப்போதெல்லாம், அரசியலுக்கு வெளியில் நின்று தேர்தல் நேரத்தில் மட்டும் கருத்து சொல்பவராக மட்டுமே ரஜினி இருந்தார். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் அவரது இடம் மாறியிருக்கிறது. தூத்துக்குடித் துப்பாக்கிச்சூடு முதல் சாத்தான்குளம் லாக்கப் கொலை வரை பல விஷயங்கள் குறித்துக் கருத்து சொல்பவராக ரஜினி உருமாறியிருக்கிறார். பல கருத்துகள் சர்ச்சைகளின் மையப்புள்ளியாகவும் ஆகியுள்ளன. இந்தச் சூழலில், ‘ரஜினி வாய்ஸ் கொடுக்க வேண்டும்’ என்று பல கட்சிகள் எதிர்பார்ப்பதில் ஆச்சர்யம் இல்லை.

ஆனால், ‘எதிர்காலத்தில் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்’ என்ற எதிர்பார்ப்பில் இருந்த பழைய ரஜினி வாய்ஸ் கொடுக்கலாம். ‘இனி கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை’ என்று சொல்லிவிட்ட புது ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா? ‘`அவர் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடும்’’ என்பதே தமிழக அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், தேர்தலில் அவர் வாய்ஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற சூழல் 1996 போல இப்போது இல்லை.

சினிமாவில் உறுதியான முடிவுகள் எடுக்கத் தயங்காதவரான ரஜினி, அரசியலை ஒருவிதத் தயக்கத்துடனேயே அணுகினார். ‘சரியாக ஓடாது’ என்று தெரிந்தும் தன் நூறாவது படமாக ‘ஸ்ரீராகவேந்திரா’ படத்தை எடுக்க வைத்தார் அவர். ஆனால், அரசியலில் இப்படிப்பட்ட ரிஸ்க்கை எடுக்க அவர் தயாராக இல்லை. ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, தமிழகம் முழுக்க நிர்வாகிகளை நியமித்து, பல்வேறு அணிகளையும் உருவாக்கி, பெரும்பாலான இடங்களில் பூத் கமிட்டிகளையும் ஏற்படுத்திய சூழலிலும் அவருக்குத் தயக்கம் இருந்தது.

ரஜினி : இப்போ கட்சி இல்லை... அப்போ வாய்ஸ் உண்டா?

சாக்கடையைச் சுத்தம் செய்ய அதில் இறங்கித்தான் ஆக வேண்டும். விளிம்புக்கு வெளியில் நின்றபடியே அதைச் சுத்தம் செய்ய முடியும் என்பது போன்ற ஒரு ‘எலைட்’ மனநிலையில்தான் அவரின் அரசியல் அணுகுமுறை இருந்தது. இதுவே தமிழக அரசியல் சூழலிலிருந்து அவரை அந்நியமாக்கி வைத்தது. தான் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்ததும், தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்படும் என்று அவர் நினைத்திருந்தார். அது நடக்காதது அவருக்கு ஏமாற்றம் தந்திருக்கக்கூடும். அரசியல் கணக்குகள் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி விடை தருவதில்லை.

‘ரஜினி மக்கள்‌ மன்றம்‌ எப்போதும்‌ போலச் செயல்படும்’ என்று ‌அவர் சொல்லியிருப்பது ரசிகர்களுக்கு ஆறுதல். ஆனால், அந்த மன்றம் எப்படிச் செயல்படும்?

ரஜினி தனது சினிமா வாழ்வில், கன்னட நடிகர் ராஜ்குமார் பற்றிப் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். இளவயது ரஜினிக்கு ஆதர்சமாக இருந்தவர் ராஜ்குமார். அரசியலுக்கு வருவதற்குத் தேவையான சகல அம்சங்களும் நிறைந்ததாக இருந்தது ராஜ்குமாரின் சினிமா வாழ்க்கை. ஆனால், ராஜ்குமார் அரசியல் களத்தில் இறங்கவே இல்லை. ஆனால், அவரின் ரசிகர் மன்றங்கள் வலுவாக இருந்தன. கன்னட மக்களின் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்க அந்த மன்றங்கள் வீதிக்கு வந்தன. உணர்வுரீதியான இந்த எதிர்ப்புகளுக்கு அரசுகள் பணிந்தன. அரசியலுக்கு வராமலே கர்நாடக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக தன் வாழ்நாள் முழுக்க இருந்தார் ராஜ்குமார்.

ரஜினி மக்கள் மன்றம் களத்தில் இறங்கத் தயார் என்றால், தமிழகத்தில் அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. கொரோனாச் சூழலால் வீடுகளில் முடங்கியிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கற்றல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் ஆரம்பித்து, தமிழக நீராதாரங்களைச் சீரமைப்பது வரை எத்தனையோ மக்கள்நலப் பணிகளைச் செய்யலாம். ரஜினிக்கும் மன்றங்களுக்கும் ஓர் உன்னதமான அடையாளத்தை ஏற்படுத்தித் தருவதாக இந்தச் செயல்பாடு இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism