Published:Updated:

``அந்த அண்ணாமலையை நம்பிக் காத்திருந்தோம், இப்போ இந்த அண்ணாமலையை!" -பாஜக-வில் இணையும் ரஜினி ரசிகர்கள்

ரஜினி - பாஜக - அண்ணாமலை

அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பா.ஜக-வில் இணைகின்றனர்.

``அந்த அண்ணாமலையை நம்பிக் காத்திருந்தோம், இப்போ இந்த அண்ணாமலையை!" -பாஜக-வில் இணையும் ரஜினி ரசிகர்கள்

அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பா.ஜக-வில் இணைகின்றனர்.

Published:Updated:
ரஜினி - பாஜக - அண்ணாமலை

தஞ்சாவூரில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பா.ஜக-வில் இணைகின்றனர். இந்த நிலையில், ``முன்பு எங்க அண்ணாமலையை நம்பி எதிர்பார்த்து காத்திருந்தோம், இப்போது இந்த அண்ணாமலையை நம்பிக் களமிறங்கியிருக்கிறோம். `ரஜினிகிட்ட என்ன எதிர்பார்த்தீங்களோ அந்த அரசியல் பா.ஜ.க-வில் இருக்கும்' என அண்ணாமலை எங்களிடம் கூறியது உற்சாகத்தை அளித்திருக்கிறது" என ரஜினி ரசிகர்கள் பேசிவருகின்றனர்.

அண்ணாமலை
அண்ணாமலை

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாகவும், 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் கூறி தன் ரசிகர்களை `போர்களத்துக்குத் தயாராகுங்கள்’ என உற்சாகப்படுத்தி... ரஜினி ரசிகர் மன்றமாக இருந்த தன் அமைப்பை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் எனப் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், அவருடைய அந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசியலையும் தாண்டி அனைவராலும் உற்றுநோக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், பா.ஜ.க-வின் `பி டீம்' தான் ரஜினி தொடங்கும் அரசியல் கட்சி என பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை கொண்டவர்களால் விமர்சிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா பரவல், உடல்நிலை எனப் பலவற்றைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை என ரஜினி மன்ற மாவட்டச் செயலாளர்களை அழைத்து அறிவித்தார் ரஜினி. அரசியலிலிருந்து பின்வாங்கிய அறிவிப்பு அவரின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது, மன உளைச்சலுக்கும் ஆளானார்கள்.

ரஜினியுடன் ரஜினி.கணேசன்
ரஜினியுடன் ரஜினி.கணேசன்

சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகும்... அதைத் தொடர்ந்தும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அமைதியாக இருந்துவந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் தஞ்சாவூர் மாவட்டச் செயலாலர் ரஜினி.கணேசன் தலைமையில், அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் இணையவிருக்கின்றனர். பா.ஜ.க-வில் இணைவதற்கு ரஜினி ரசிகர்கள் அவரிடம் ஒப்புதல் கேட்டிருந்த நிலையில், ரஜினியும் பச்சைக்கொடி காட்டிவிட்டார் எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே பல மாவட்ட நிர்வாகிகள் பா.ஜ.க-வில் இணைவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``ரஜினி அரசியலுக்கு வருவார் என எங்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு தூபம் போடும்விதமாக 2017-ல், `நான் அரசியலுக்கு வருவது உறுதி... 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்' என அறிவித்தார். மேலும் பூத் கமிட்டிகளை அமைக்கவும் மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. நாங்களும் தலைவர் ரஜினி சொன்னதுபோலவே போருக்குத் தயாராவதுபோல் தேர்தலுக்குத் தயாராகிவந்தோம்.

பா.ஜ.க-வில் இணையும் ரஜினி ரசிகர்கள்
பா.ஜ.க-வில் இணையும் ரஜினி ரசிகர்கள்

ஆனால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்த சூழலில் உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசியல் கட்சி தொடங்கவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை என ரஜினி அறிவித்தார். அத்துடன் மக்கள் மன்றமாக இருந்த தனது ரசிகர்கள் அமைப்பை மீண்டும் ரசிகர் மன்றமாக மாற்றினார். வழக்கம்போல் ரஜினி சொன்னதை ஏற்றுக்கொண்ட நாங்கள் அதன் பிறகு அரசியலில் தலையிடாமல் அமைதியாகவே இருந்தோம்.

`ரஜினி அரசியல் கட்சி தொடங்குகிறேன்' எனக் கூறுவதற்கு முன்பு அவரின் ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள் அனைவரும் அவரவர்களுக்கு பிடித்த கட்சிகளிலில் இருந்து செயல்பட்டனர். ஆனால் கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு எல்லோரும் அந்தந்தக் கட்சியிலிருந்து விலகிவிட்டனர். `உங்க தலைவர் அரசியலுக்கு வர மாட்டேனு சொல்லிட்டார்... அடுத்து என்ன செய்யப்போறீங்க' என்று பலரும் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

ரஜினி
ரஜினி

இந்த நிலையில், பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு. முருகானந்தம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரிடம், `உங்களுக்கான அங்கீகாரம் கொடுக்கப்படும். பா.ஜ.க-வுக்கு வாங்க சிறப்பாக செயல்படலாம்' எனத் தொடர்ந்து பேசிவந்தார். தேசியக் கட்சி, தேசப்பற்றுகொண்ட கட்சி, இந்தியர்கள் அனைவரும் இந்துக்களே என்ற பா.ஜ.க-வின் கொள்கை வரவேற்கக்கூடியது.

திராவிடம் என்ற சொல்லை வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் அரசியல் செய்வதால் மாநிலத்துக்கு பின்னடைவு என்பதையும் உணர்ந்திருக்கிறோம். பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் ஆளுமை சிறப்பாக இருக்கிறது. இதையெல்லாம் மனதில்வைத்து பா.ஜ.க-வில் இணைகிறோம். இது குறித்த தகவல் ரஜினி தரப்புக்கும் தெரிவிக்கப்பட்டது. ரசிகர் மன்றமாக இருந்தபோது எப்படிப் பல அரசியல் கட்சிகளில் இருந்தோமோ, அதேபோல் இப்போது பா.ஜ.க-வில் இணைகிறோம். முன்பு எங்க அண்ணாமலையை நம்பி காத்திருந்தோம். இப்போது இந்த அண்ணாமலையை நம்பி அரசியலில் களமிறங்குகிறோம்" என்றனர்.

தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ரஜினி.கணேசன்
தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ரஜினி.கணேசன்

தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ரஜினி.கணேசனிடம் இது தொடர்பாகப் பேசினோம். ``தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 14 ஒன்றியங்கள், இரண்டு மாநகரங்கள், ஒரு நகரம் என மொத்தம் 1,000 பேர் பா.ஜ.க-வில் இணையவிருக்கிறார்கள். மேலும் கோவை, கடலூர், விருதுநகர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் என் தலைமையில் நாளை தஞ்சாவூரில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் இணையவிருக்கிறார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

அரசியல் என்பது வேறு, ரசிகர் மன்றம் என்பது வேறு. தலைவர் ரஜினிமீது நாங்கள் வைத்திருக்கும் பற்று, பாசம் எப்போதும் துளிகூடக் குறையாது. `ரஜினி கிட்ட என்ன எதிர்பார்த்தீங்களோ அந்த அரசியல் பா.ஜ.க-வில் இருக்கும், வாங்க சேர்ந்து செயல்படலாம்' என அண்ணாமலை கூறியிருக்கிறார். அதேநேரத்தில் நிர்வாகிகளுக்கு சுயமரியாதை, தன்மானம், சுதந்திரம் போன்றவற்றைக் கொடுக்கும் கட்சியாகவும் திகழ்ந்துவரும் பா.ஜ.க-வுடன் எங்களுக்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், பா.ஜ.க-வில் இணையும் நாங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்போம். எப்போதும்போல் ரசிகர் மன்றச் செயல்பாடுகளையும் மேற்கொள்வோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism