Published:Updated:

பெரியாரின் கொள்கைகளில் பிடித்தது என்ன? - கருணாநிதி முன்னிலையில் மனம் திறந்த ரஜினிகாந்த் #Rewind

துக்ளக் விழாவில் ரஜினி
துக்ளக் விழாவில் ரஜினி ( http://www.pictureperfect.studio )

'பெரியாரை ரஜினிகாந்த் விமர்சித்துவிட்டார்' எனக் கொதிக்கிறார்கள் திராவிட இயக்கத்தினர். பெரியாரை ரஜினி பாராட்டிய நிகழ்வுகளும் பெரியாருக்காக மன்னிப்புக் கேட்ட சம்பவமும் வரலாற்றில் உண்டு. அந்த ஃப்ளாஷ்பேக் என்ன?

2007 அக்டோபர் 17-ம் தேதி.

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம் நிரம்பி வழிந்தது. அரங்கத்தில் இருந்தவர்களைவிட நான்கு மடங்கு கூட்டம் வெளியே காத்திருந்தது. 2005 மற்றும் 2006-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அது. திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் விழா என்பதற்காக மட்டுமல்ல... ரஜினியும் மேடையேறுகிறார் என்பதால் விழாவுக்கு ஏக எதிர்பார்ப்பு. நிகழ்ச்சியைக் காண சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தை முண்டியடித்தது கூட்டம்.

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம்
சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம்

2005-ம் ஆண்டு வெளியான 'சந்திரமுகி' படத்துக்காகச் சிறந்த நடிகர் விருதை ரஜினிகாந்த்துக்கு அறிவித்தது அப்போது, ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு. நடிகர்கள் அஜித், விக்ரம், ஜோதிகா, பிரியா மணி, பிரகாஷ் ராஜ், விவேக், விஜய், சூர்யா, மீரா ஜாஸ்மின், வடிவேலு, நாசர், பசுபதி, கார்த்தி, சந்தியா, ராஜ்கிரண், இயக்குநர் ஷங்கர், ராம நாராயணன், தங்கர் பச்சான். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, கவிஞர்கள் தாமரை, பா.விஜய் ஆகியோருக்கும் பல பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்பட்டன. அதோடு கலைத்துறை வித்தகர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

விருது விழாவில் ரஜினியும் அஜித்தும்
விருது விழாவில் ரஜினியும் அஜித்தும்
விகடன்

கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை ஏற்று நடத்திய அந்த விழாவில் முதல்வர் கருணாநிதிதான் விருதுகளை வழங்கினார். ஆட்டம், பாட்டம் எனக் கலை நிகழ்ச்சிகள் வேறு விழாவைக் களைகட்ட வைத்தது. சிறந்த நடிகருக்கான விருதை ரஜினிக்குக் கருணாநிதி வழங்கினார்.

ரஜினிக்குக் கருணாநிதி வழங்குகிறார்...
ரஜினிக்குக் கருணாநிதி வழங்குகிறார்...

விழாக்களில் கலந்துகொள்ளும் ரஜினி 'விக்' அணிய மாட்டார். வெள்ளை முடி மற்றும் தாடியோடுதான் பங்கேற்பார். ஆனால், இந்த விழாவுக்கு வந்தபோது ரஜினியின் தலைமுடியும் மீசையும் கறுப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. தாடியும் மிஸ்சிங். அதற்கான காரணத்தை விழாவிலே சொன்னார் ரஜினி.

ரஜினியின் தாடி மிஸ்சிங். தலைக்கு டை...
ரஜினியின் தாடி மிஸ்சிங். தலைக்கு டை...

''பகல் 12 மணி வரையில் வெள்ளை தாடி, தலைமுடியுடன்தான் இருந்தேன். மகள்கள் ஐஸ்வர்யாவும் சௌந்தர்யாவும் 'இப்படியே நீங்கள் விழாவுக்கு வந்தால், வீட்டில் ஏதோ பிரச்னை அதனால்தான் ரஜினி இப்படி வெள்ளை தாடியுடன் இருக்கிறார் எனப் பேசுவார்கள். வெள்ளை தாடியை எடுத்துவிட்டு, மீசைக்கும் தலைக்கும் டை அடித்துக்கொண்டால்தான் விழாவுக்கு வருவோம்' எனச் சொன்னார்கள். இதை யார் சொல்லியிருப்பார்கள்... எங்கிருந்து வந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். மகள்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் வெள்ளை தாடியை எடுத்துவிட்டு தலைக்கு டை அடித்துக்கொண்டேன்'' என முன்னோட்டம் கொடுத்தார் ரஜினி. ரஜினியின் எதார்த்தமான இந்தப் பேச்சை மேடையின் கீழே அமர்ந்திருந்த ரஜினியின் மனைவி லதாவும் மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யாவும் சிரித்தபடியே ரசித்தார்கள்.

ரஜினியின் பேச்சை கேட்கும் லதா, ஐஸ்வர்யா, சௌந்தர்யா...
ரஜினியின் பேச்சை கேட்கும் லதா, ஐஸ்வர்யா, சௌந்தர்யா...

''32 ஆண்டுகளுக்குப் பிறகு, சிறந்த நடிகர் விருது எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. சந்திரமுகியில் சரவணனாக நடித்த ரஜினிக்கு இந்த விருது கொடுக்கவில்லை. வேட்டையனாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது, கலைஞருக்கும் தெரியும். சந்திரமுகியில் வேட்டையன் பாத்திரம். எல்லோருக்கும் பிடித்திருந்தது. விஜய்க்குக் காதலுக்கு மரியாதை, குஷி. அஜித்துக்குக் காதல் கோட்டை, வாலி. விக்ரமுக்கு சேது, அந்நியன். இத்தனை சாதனைகள் புரிந்த ஜாம்பவான்கள் இங்கே இருக்கிறார்கள்'' எனப் பேசிவிட்டு, பெரியாரைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் ரஜினி.

பெரியார் திரைப்படம்
பெரியார் திரைப்படம்

இந்தத் திரைப்பட விருது வழங்கும் விழா நடந்த நேரத்தில் 'பெரியார்' திரைப்படம் வெளியாகியிருந்தது. அந்தப் படத்துக்குத் தமிழக அரசு 95 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருந்தது. விழாவில் பேசிய ரஜினி, ''பெரியார் படம் பார்த்த பிறகுதான் தெரியாத விஷயங்கள் சிலவற்றைத் தெரிந்துகொண்டேன். உடனே கி.வீரமணிக்குக் கடிதம் எழுதினேன். சிலர் என்னிடம், 'பெரியார் படத்தை நீங்கள் வரவேற்கலாமா?' என்று கேட்டார்கள். அவர்களின் பெயர்களை இங்கே நான் சொல்ல விரும்பவில்லை'' எனப் பீடிகை போட்ட ரஜினி, ''பெரியார் ஒரு விருந்து மாதிரி. அந்த விருந்தில் பலவிதமான பண்டங்கள் இருக்கும். அவரிடம் கடவுள் எதிர்ப்பு கொள்கை மட்டுமா இருக்கிறது? தீண்டாமை, சாதி ஒழிப்பு என எத்தனையோ நல்ல கொள்கைகள் இருக்கிறதே. நான் கடவுள் எதிர்ப்பு கொள்கையை எடுத்துக்கொள்ளாமல் நல்ல கொள்கைகளை எடுத்துக்கொண்டேன். பத்துவிதமான பண்டங்களில், எனக்குப் பிடித்த பண்டங்களை எடுத்துக் கொண்டேன்'' எனப் பெரியாரைப் பாராட்டிப் பேசினார் ரஜினி.

பெரியார் திரைப்படம்
பெரியார் திரைப்படம்

அதோடு, ரஜினியின் பேச்சு முடியவில்லை. அடுத்து சேது சமுத்திர திட்டத்தைக் கையில் எடுத்தார். அப்போது, மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க அங்கம் வகித்தது. அதனால், நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்த கனவுத் திட்டமான சேது கால்வாய் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள். அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். சேது சமுத்திரத் திட்டத்தின் வேலைகள் பாதி முடிந்த நிலையில், ராமர் பாலம் பிரச்னை எழுந்தது. இத்தகையச் சூழலில், ரஜினி சேது கால்வாய்த் திட்டத்தைப் பற்றி திரைப்பட விருது விழாவில் பேசினார்.

சினிமா விருது விழாவில் பேசும் ரஜினி
சினிமா விருது விழாவில் பேசும் ரஜினி

''இந்தியக் குடிமகன் என்ற முறையில் ஒரு விஷயத்தை இங்கே பேச விரும்புகிறேன். யாரும் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சேது சமுத்திரத் திட்டம் பற்றி பலவிதமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அந்தத் திட்டத்தால் லாபம் கிடைக்குமா, ஆழம் இருக்குமா என்றெல்லாம் கேட்கிறார்கள். சென்டிமென்டாக ஒரு விஷயம் பூதாகரமாகப் பேசப்படுகிறது. அதன் சீரியஸ்னஸ் இன்னும் தமிழ்நாட்டுக்குத் தெரியவில்லை. வட மாநிலங்களில் உள்ளவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தை ஊதி, நெருப்பு மூட்டி, குளிர்காயப் பார்க்கிறார்கள். நமக்குக் காரியம் நடக்கணும். வட இந்தியாவில் உள்ள தலைவர்கள் எல்லோரும் கலைஞரின் நண்பர்கள்தான். அவர்களிடம் பேசி, கலைஞர் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும்'' என்றார் ரஜினி.

சினிமா விருது விழாவில் கருணாநிதியும் ரஜினியும்...
சினிமா விருது விழாவில் கருணாநிதியும் ரஜினியும்...

இறுதியாகப் பேசிய கருணாநிதி, தன் பேச்சில் ரஜினியின் பேச்சுக்குப் பதில் சொன்னார். ''ராமர் பற்றி எனக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் விரோதமும் இல்லை. ராமரை ஒரு மனித குல இளவரசராகத்தான் பார்க்கிறேன். ராஜாஜி எழுதியிருக்கும் சக்கரவர்த்தி திருமகன் நூலில், 'ராமாயணம் ஒரு புராணம். அது வரலாறு இல்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார். ராமரை இளவரசராகத்தான் சொல்லியிருக்கிறார் ராஜாஜி. அவரிடம் எந்த இறையம்சமும் இல்லை என்றும் கூறியிருக்கிறார். மனிதர்களுக்கு அறிவுரை கூறவும், மனமகிழ்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்டவை புராணங்கள். அந்த வகையில், ராமாயணம் ஒரு புராணம். இந்த அடிப்படையில்தான் ராமனை ஒரு இளவரசர் என ராஜாஜி சொல்லியிருக்கிறார். 'சமுதாயத்துக்கு நல்லது செய்த இளவரசர்' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சினிமா விழாவில்...
சினிமா விழாவில்...

ராமர் செய்த நல்ல விஷயங்களை நான் வரவேற்கிறேன். சேது சமுத்திரத் திட்டத்தை ராமர் பெயரில் கொண்டு வந்தாலும்கூட நான் அதை எதிர்க்க மாட்டேன். கிருஷ்ணா நதி நீர்த் திட்டத்தில் 'கிருஷ்ணர்' பெயர் இருக்கிறதே என்பதற்காக அதை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சாய்பாபாவின் உதவியை நாடினோம். 'சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்ற உதவ வேண்டும்' எனத் தம்பி ரஜினிகாந்த் சொன்னார். அதே போல அவரும் இதற்கு உதவ வேண்டும்.

சூர்யாவுக்கு விருது
சூர்யாவுக்கு விருது

இது அண்ணன், தம்பிகளுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றம். தமிழக மக்களின் சார்பில் ரஜினிக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். வட இந்தியத் தலைவர்கள், சாதுக்களிடம், நான் ராமருக்கு எதிரானவன் அல்ல. இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிரானவன் அல்ல என்பதை எடுத்துச் சொல்லி, அறிவுரை கூறி, இந்தத் திட்டம் நிறைவேற உதவ வேண்டும். முடிந்தால், எனது தலைவர் பெயரும்கூட ராமசாமி (பெரியார்) என்றும் சொல்லுங்கள். நல்ல திட்டம் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், மத வெறியின் பெயரால் தடுக்கப்பட்டுவிடக் கூடாது என்பது எனது விருப்பம்'' என முடித்தார் கருணாநிதி.

பெரியார் திரைப்படத்தில்
பெரியார் திரைப்படத்தில்

''பெரியாரின் கடவுள் எதிர்ப்பு கொள்கையை எடுத்துக் கொள்ளாமல் தனக்குப் பிடித்த கொள்கைகளை எடுத்துக் கொண்டேன்'' என அன்றைக்கு ரஜினி சொன்ன நிலைப்பாட்டில் இன்று வரையில் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் துக்ளக் விழாவில் சேலம் ஊர்வலம் பற்றிப் பேசியிருக்கிறார் ரஜினி. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஆரம்பித்தபோது ராமர் பாலம் பிரச்னையைக் கிளப்பியது, இந்துத்துவா தரப்பினரும் பி.ஜே.பி-யும்தான். ஆனாலும்கூட அன்றைக்கு, ''சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக நிலவும் பிரச்னைகளை சரி செய்து, அது நிறைவேற முதல்வர் கலைஞர் உதவ வேண்டும். சேது திட்டத்துக்கான தீர்வு கலைஞர் கையில்'' எனச் சொன்னார் ரஜினி.

சேது சமுத்திரம்
சேது சமுத்திரம்

மதத்தின் பெயரில் சேது கால்வாய் திட்டத்தை முடக்குவதில் ரஜினிக்கு விருப்பம் இல்லை என்பதே அன்றைய பேச்சின் வெளிப்பாடு. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருந்திருக்கிறார். அதாவது, பி.ஜே.பி-க்கு எதிரான மனநிலை இது. இதில் இப்போதும் ரஜினி உறுதியாக இருக்கிறாரா என்பது தெரியவில்லை. சேது தொடர்பான பிரச்னை மீண்டும் பேசப்பட்டு, அதுதொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தால் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பது தெரிய வரும்.

பெரியார் படத்தில்
பெரியார் படத்தில்

அந்தத் திரைப்பட விழாவில், ''சிலர் என்னிடம், 'பெரியார் படத்தை நீங்கள் வரவேற்கலாமா?' எனக் கேட்டார்கள். அவர்களின் பெயர்களை இங்கே நான் சொல்ல விரும்பவில்லை'' என்றும் ரஜினி சொன்னார். அந்த 'சிலர்' யாராக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.

இந்த சினிமா விருது விழாவுக்கு முன்பே 'பெரியார்' படம் ரிலீஸான நேரத்தில், ''பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே'' எனச் சொல்லியிருக்கிறார் ரஜினி. 'பெரியார்’ படத்தின் சிறப்புக் காட்சி ரஜினிக்காகத் திரையிட்டார்கள் படக் குழுவினர். படத்தைத் தயாரித்தது திராவிடர் கழகம்தான். படத்தைப் பார்த்துவிட்டு, 2007 மே 3-ம் தேதி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்குக் கடிதம் எழுதினார் ரஜினி.

ரஜினி, வீரமணி
ரஜினி, வீரமணி

`` `பெரியார்’ படத்தைப் பார்த்து பிரமிப்பு அடைந்தேன். பெரியாருடைய கொள்கைகளை அறிந்திருக்கிறேன். ஆனால், அவருடைய வாழ்க்கை வரலாறு எனக்கு அவ்வளவாகத் தெரியாது. 'பெரியார்' திரைப்படத்தின் மூலம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்த பிறகு, பெரியார் மேல் எனக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் ஆயிரம் மடங்கு அதிகரித்திருக்கிறது. சமூக நலனுக்காகப் போராடிய காலங்களில் அவருடன் நாம் இல்லையே என்ற ஏக்கம் திரைப்படம் பார்த்தபோது ஏற்பட்டது. இருந்தாலும் அவருடன் நெருங்கிப் பழகிய முதல்வர் கலைஞர், கி.வீரமணி ஆகியோரோடு எனக்குப் பழகுகின்ற வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். 'பெரியார்' திரைப்படம் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும் பெரியாராகவே வாழ்ந்துகாட்டிய நடிகர் சத்யராஜுக்கும் அருமையாக இயக்கிய ஞானராஜசேகரனுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என அந்தப் பாராட்டுக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ரஜினி.

ரஜினியின் பாராட்டு... பெரியார் பட விளம்பரத்தில்
ரஜினியின் பாராட்டு... பெரியார் பட விளம்பரத்தில்

'பெரியார்' படத்தின் விளம்பரங்களில் ரஜினியின் இந்தப் பாராட்டும் இடம்பெற்றிருந்தது. அன்றைக்கு ரஜினியின் பாராட்டைப் பெற்றுக்கொண்ட பெரியார் இயக்கத்தினர், இப்போது பெரியார் நடத்திய ஊர்வலம் தொடர்பான ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அன்றைக்குப் பெரியாரைப் பாராட்டிய ரஜினிதான், இன்றைக்கு அவருக்கு எதிராக ஒரு விஷயத்தைப் பதிவு செய்கிறார். யூகிக்கவே முடியாத இந்த மாற்றத்தின் பின்னணியாக அரசியலைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?

துக்ளக் விழாவில்...
துக்ளக் விழாவில்...
http://www.pictureperfect.studio

'மன்னிப்பு கேட்க முடியாது' எனப் பிடிவாதமாக இருக்கும் ரஜினி, பெரியாருக்காக மன்னிப்பு கேட்ட வரலாறும் உண்டு. 'பாபா' படத்தில் நாத்திகனாக இருக்கும் ரஜினி கேரக்டர் ஆத்திகனாக மாறும் சூழலில் 'ராஜ்யமா... இமயமா' என ஒரு பாடல் படத்தில் இடம் பெறும். அந்தப் பாடலில் 'திருமகன் வருகிற திருநீரை நெற்றி மீது தினம் பூசி, அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி' எனச் சரணம் இடம்பெற்றிருக்கும். இதற்கு எதிர்ப்புகள் கிளம்ப... திராவிடர் கழக வீரமணியிடம் பேசிய ரஜினி, ''கேசட்டில் இந்த வரிகளை நீக்க முடியாது. ஆனால், படத்தில் இந்த வரிகள் வராமல் பார்த்துக்கொள்கிறேன்'' எனச் சொன்னார். அன்றைக்குத் தன் சொந்த செலவில் எடுக்கப்பட்ட 'பாபா' திரைப்படத்துக்கு பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பெரியார் சம்பந்தமான வரிகளை நீக்க ஒப்புக் கொண்ட ரஜினி... வருத்தம் தெரிவித்த ரஜினி, இன்றைக்கு 'மன்னிப்பு கேட்க முடியாது' என்கிறார். காலங்கள் மாறிவிட்டன. அரசியல் மேகங்கள் சூழ்ந்துவிட்டன எனச் சொல்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

பாபா படத்தில்
பாபா படத்தில்

''எனக்குக் காவி சாயம் பூச முடியாது'' எனச் சமீபத்தில் ரஜினி சொன்னார். ஆனால், துக்ளக் விழாவில் ரஜினி பேசிய பிறகு, அவர் மீது காவி சாயத்தை அதிகமாகப் பூச ஆரம்பித்திருக்கிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு ரஜினி பேசிய பெரியார் தொடர்பான பேச்சுகளுக்கும் இப்போதும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கெல்லாம் ரஜினிதான் விடை தர வேண்டும். அடுத்தடுத்த நிகழ்வுகளில் ரஜினியின் செயல்பாடுகளைப் பார்க்கும் போதும் கருத்துக்களை வெளிப்படுத்தும் போதும் நம் கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம்.

ரஜினி அமைக்கப் போவது ராஜ்ஜியமா... மீண்டும் பனிமலையா?

அடுத்த கட்டுரைக்கு