Published:Updated:

ஆகஸ்ட் மாநாடு... டிஜிட்டல் பிரசாரம்... ரஜினி என்ட்ரி! - ரஜினியின் தேர்தல் ப்ளான்

ரஜினிகாந்த்

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருவருடமே இருக்கிறது. 'போர் வரும்போது வருவேன்' என்று சொன்ன ரஜினி, என்ன செய்யப்போகிறார்? அவரது வியூகம்தான் என்ன? விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

ஆகஸ்ட் மாநாடு... டிஜிட்டல் பிரசாரம்... ரஜினி என்ட்ரி! - ரஜினியின் தேர்தல் ப்ளான்

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருவருடமே இருக்கிறது. 'போர் வரும்போது வருவேன்' என்று சொன்ன ரஜினி, என்ன செய்யப்போகிறார்? அவரது வியூகம்தான் என்ன? விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

Published:Updated:
ரஜினிகாந்த்

“தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டிருக்கு. நடிக்கும் வேலையை நான் சரியாத்தான் செஞ்சிட்டு இருக்கேன். அரசியல்வாதிங்க, அவங்க வேலையைச் சரியா செய்யாததால தான், நான் அரசியலுக்கு வரவேண்டிய சூழல் உருவாகிடுச்சு. நான் அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன். எம்.ஜி.ஆர் கொடுத்த நல்லாட்சியை என்னாலும் கொடுக்க முடியும். சாதி, மத, சமயமற்ற அரசியலை தமிழக மக்கள் இனிமேல்தான் பார்க்கப்போகிறார்கள்...” நடிகர் ரஜினிகாந்த் இப்படிப் பேசி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவர் சொன்ன தேர்தல் போர் வருவதற்கு இன்னும் ஒருவருடமே எஞ்சியிருக்கும் நிலையில், என்ன செய்கிறார் ரஜினி... அவருடைய வியூகம்தான் என்ன?

கேள்விகளுடன் ராகவேந்திரா மண்டம், போயஸ் கார்டன் ஏரியாக்களை ரவுண்டு அடித்தோம்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ஏப்ரலில் கட்சி

“தலைவர் ரஜினிகாந்த், கட்சி ஆரம்பிக்கப்போவது உறுதிங்க”, நம்மிடம் உற்சாகம் குலையாமல் பேச்சைத் தொடங்கினார், மேற்கு மண்டல ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் ஒருவர். “சித்திரை 1-ம் தேதி தமிழ் வருடப் பிறப்பு அன்று, புதிய கட்சியைத் தொடங்கும் பணி நடைபெறுகிறது. ஆன்மிகம், மக்களின் வாழ்வியலோடு கலந்த ஒரு வார்த்தை. நிச்சயமாக கட்சியின் பெயரில் அது இடம்பெறும். ரஜினி ரசிகர் மன்றத்தின் கொடியில் நீலம், வெள்ளை, சிவப்பு, நடுவில் நட்சத்திரத்தில் ரஜினிகாந்த் இருப்பார். புதிய கட்சியின் கொடியிலும் இதே வண்ணங்கள் இடம்பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழக மக்கள், ஓர் அரசியல் மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள். அவர்களை ரஜினி பக்கம் திருப்புவதுதான் எங்கள் வேலை. கட்சியின் கொள்கைகள், சட்டதிட்டங்கள், அணிகள் உள்ளிட்டவற்றை வகைப்படுத்த, ஓய்வுபெற்ற சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு டீம் உருவாக்கப்பட்டு, கடந்த ஒருவருடமாகப் பணிகள் நடைபெற்றுள்ளன. மொத்தமுள்ள 67 ஆயிரம் பூத்துகளில், 57 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுவிட்டன. ஒரு பூத் கமிட்டிக்கு தலா 30 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். கட்டமைப்பு ரீதியாக நாங்கள் வலுவாக உள்ளோம். எல்லாம் ரெடி, ரஜினிகாந்த் ‘என்ட்ரி’ ஆகவேண்டியதுதான் பாக்கி” என்றார்.

 ரஜினி மக்கள் மன்றம்
ரஜினி மக்கள் மன்றம்

மதுரை மாநாடு

“கட்சி ஆரம்பித்தவுடனேயே தலைவரோட மாநாடு இருக்காது. அது ‘ஸ்பெஷல் ஷோ’! ” கண்சிமிட்டலுடன் பேச ஆரம்பித்தார், திருச்சி மாவட்ட நிர்வாகி ஒருவர். “மதுரையில் தனது முதல் மாநாட்டை பிரமாண்டமாகக் கூட்டுவதற்கு ரஜினி ஆயத்தமாகிறார். ஆகஸ்ட் மாதம் இம்மாநாடு நடைபெறும். ஊர் ஊராகச் சென்று வாக்கு சேகரிக்கும் திட்டம் எல்லாம் இல்லை. ஜெயலலிதா போன்று, மூன்று நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு ஒரு பொதுக்கூட்டம் போடுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இங்கு, அ.தி.மு.க அல்லது தி.மு.க கட்சிகளில் ஏதாவது ஒன்று உடைந்து, அதன் ஒருபகுதி ரஜினியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே ரஜினியால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இங்கு தான் ‘பி.ஜே.பி’ ரஜினிக்குக் கைகொடுக்கிறது.

டிஜிட்டல் பிரசாரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப் போகிறார்கள். இதற்காக, 2014ல் மோடியின் டிஜிட்டல் பிரசாரத்துக்கு உதவிய சிலரும் ரஜினிக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இன்று, ரஜினி தும்மினால்கூட முக்கியத்துவம் அளிக்கும் மீடியாக்கள், தேர்தல் நேரத்தில் ஒதுங்கக்கூடும். டி.டி.வி.தினகரனுக்கும் இப்படித்தான் நடந்தது. ஆகவே, நாங்கள் மீடியாக்களை முழுவதுமாக நம்பாமல், டிஜிட்டல் பிரசாரத்தை கையில் எடுக்கிறோம். மொபைல் எல்.இ.டி. வேன்கள் மூலமாக ஒவ்வொரு கிராமத்திலும் மாலை 6 மணிக்கு மேல், ரஜினியின் பேச்சை திரையிடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இது, நிச்சயமாக வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

சிரஞ்சீவி
சிரஞ்சீவி

கூட்டணி வியூகம்

முதலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்த ரஜினி, தற்போது தன் முடிவில் இறங்கி வந்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். “ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது என்பதில் ரஜினி தெளிவாக இருக்கிறார்” என்று பேச்சைத் தொடங்கினார் ரஜினியின் ஆலோசகர் வட்டத்திலுள்ள தொழிலதிபர் ஒருவர்.

“2008-ல் பிரஜா ராஜ்ஜியம் கட்சியைத் தொடங்கிய நடிகர் சிரஞ்சீவி, கூட்டணி இல்லாமலேயே தன்னால் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று நம்பினார். ஆனால், எதிர்பார்த்த எண்ணிக்கையைத் தொடுவது கடினம் என்பது தேர்தல் நெருக்கத்தில்தான் அவருக்குப் புரிந்தது. அதற்குள்ளாக மற்ற சிறு கட்சிகள், காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணிகளில் அடைக்கலமாகிவிட்டன. இறுதியில், 2009 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 68 லட்சம் வாக்குகளோடு மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தும், 18 இடங்களில் மட்டுமே சிரஞ்சீவியால் வெற்றிபெற முடிந்தது. இந்த நிலை தனக்கு ஏற்படக்கூடாது என்பதில் ரஜினி தெளிவாக இருக்கிறார்.

ரஜினி - மோடி
ரஜினி - மோடி

ஆந்திராவில் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி தலைமையிலான காங்கிரஸ், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிகளை எதிர்த்து, ஒருவலுவான கூட்டணி அமைத்திருந்தாலும் சிரஞ்சீவியால் வெற்றியைத் தொட்டிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். முதலிடம் பிடித்திருந்த காங்கிரஸ் 36.6 சதவிகிதமும், தெலுங்கு தேசம் 28.1 சதவிகிதமும் வாக்குகளைப் பெற்றிருந்தன. இவ்விரு கட்சிகளில் ஏதாவது ஒன்று உடைந்து, அது சிரஞ்சீவியுடன் இணைந்திருந்தால் மட்டுமே, அவரால் ஆட்சியைப் பிடித்திருக்க முடியும். அதேநிலைதான் தமிழகத்திலும் ஏற்பட்டுள்ளது. இங்கு, அ.தி.மு.க அல்லது தி.மு.க கட்சிகளில் ஏதாவது ஒன்று உடைந்து, அதன் ஒரு பகுதி ரஜினியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே ரஜினியால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இங்குதான் ‘பி.ஜே.பி’ ரஜினிக்குக் கைகொடுக்கிறது” என்றவர்,

ஆபரேஷன் அ.தி.மு.க

“ரஜினி, தனது கட்சியைத் தொடங்கிய பிறகு, இங்கு பல அரசியல் மாற்றங்கள் நிகழப்போகின்றன. அ.தி.மு.க தலைவர்கள்மீது அடுத்தடுத்து வழக்குகளைத் தொடுக்கவும் அ.தி.மு.க-வுக்குள் தலைமைக் குழப்பங்களை விளைவிக்கவும் பி.ஜே.பி திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த அரசின்மீது பல்வேறு ஊழல் புகார்கள் ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ளதால், அதையெல்லாம் தூசுதட்டி எடுக்கப்போகிறார்கள். இதில், அமைச்சர்கள் சிலரும் கைதாக வாய்ப்புள்ளது. முடிவாக, அ.தி.மு.க உடையலாம், ஆட்சி கவிழலாம். இது தானாகக் கவிழ்கிறதா அல்லது மத்திய அரசு கவிழ்க்கிறதா என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும்.

ரஜினியைக் கொண்டுவந்தாலும் ஆட்சியைப் பிடிக்க முடியுமா என்கிற சந்தேகம் பி.ஜே.பி தலைமைக்கும் ஏற்படாமல் இல்லை. இதற்கும் ஒரு பிளான் வைத்துள்ளார்களாம்.
ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி

டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் உள்ளது. அதன் மூலமாக மீண்டும் சின்னம் முடக்கப்படலாம். இதற்கிடையே, பா.ம.க, த.மா.கா, புதிய தமிழகம், பி.ஜே.பி, தே.மு.தி.க ஆகிய கட்சிகளைக் கொண்ட வலுவான கூட்டணியை ரஜினி கட்டமைப்பார். இக்கூட்டணியில், டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க, அ.தி.மு.கவில் இருந்து உடையும் ஒரு பிரிவை இணைத்து, மெகா கூட்டணியை உருவாக்க பி.ஜே.பி திட்டமிட்டுள்ளது" என்றவரிடம், "இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கிறது? எடப்பாடி அவ்வளவு லேசாக அதிகாரத்தை விட்டுவிடுவாரா?" என்றோம்.

"அவருக்கு வேறு என்ன வழி இருக்கிறது? டெல்லியில் பவர்ஃபுல்லான மத்திய அமைச்சர் ஒருவரிடமும், தனது உதவியாளர் ஒருவர் மூலமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்புடனும் நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டு, டெல்லியின் கோபப் பார்வையிலிருந்து தப்பித்துவருகிறார். தனது 'சுமை'யை எல்லாம் அந்த மத்திய அமைச்சரிடம் இறக்கிவைத்துள்ளார். தற்போது, அந்த அமைச்சருக்கு உடல்நலம் குன்றிவிட்டது. இனி எவ்வளவு காலம் அவரால் எடப்பாடியைக் காப்பாற்ற முடியும்?” என்றபடி பேச்சை முடித்தார்.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

ப்ளான் பி

பி.ஜே.பி இவ்வளவு கஷ்டப்பட்டு ரஜினியை வலுப்படுத்துவதற்கு என்ன காரணம்? வரும் தேர்தலில் ஜெயித்து, எப்படியாவது தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்தே ஆகவேண்டுமென்று பி.ஜே.பி தீர்மானமாக இருக்கிறது. 2026-ல் எதிர்க்கட்சி, 2031-ல் ஆளுங்கட்சி என்பதுதான் அவர்களது திட்டம். இதற்கு, ரஜினியை ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். ரஜினியைக் கொண்டுவந்தாலும் ஆட்சியைப் பிடிக்க முடியுமா என்கிற சந்தேகம் பி.ஜே.பி தலைமைக்கும் ஏற்படாமல் இல்லை. இதற்கும் ஒரு பிளான்'பி' வைத்துள்ளார்களாம்.

ராஜ்பவனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் நம்மிடையே பேசுகையில், "தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் திரட்டுவது, நிதி திரட்டுவது சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது. இதுபற்றிய ரிப்போர்ட் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க இரண்டாக உடைந்து ஆட்சி கவிழ்ந்தால், அசாதாரண சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி, இங்கு கவர்னர் ஆட்சி அமலாகும்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ரஜினியின் அரசியல் பிரவேசம் எதிர்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை, தி.மு.க-வின் வாக்குவங்கியைச் சரிக்க முடியவில்லை என்றால், ஆளுநர் ஆட்சியை மேலும் ஒருவருடத்திற்கு நீட்டித்து, 2022-ல் சட்டமன்றத் தேர்தலை நடத்திடவும் பி.ஜே.பி திட்டமிட்டுள்ளது. இந்த காலக்கட்டத்திற்குள் தி.மு.க தலைவர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளைத் தட்டியெடுத்து நடவடிக்கையைப் பாய்ச்சுவார்கள். இதனால் தி.மு.க மீதான ஆதரவு நிலை நீர்த்துப்போய்விடும் என்பது பி.ஜே.பி-யின் கணக்கு" என்றனர்.

தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

பி.ஜே.பி-யின் ஒவ்வொரு நகர்வையும் தி.மு.க உன்னிப்பாக கவனிக்கிறது. சமீபத்தில், ராஜகண்ணப்பன் தி.மு.க-வில் இணையும் விழாவிற்காக மதுரை சென்றிருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சீனியர்களிடம் மனம்விட்டு பேசியுள்ளார். "ரஜினியை வைச்சு பி.ஜே.பி பெரிய ப்ளான் போட்டுட்டு இருக்காங்க. நாம கடுமையா உழைச்சா மட்டும்தான் இந்தத் தேர்தல்ல வெற்றி கிடைக்கும். தலைவர் கருணாநிதியின் நினைவு நாளுக்கு அப்புறமா, தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிங்க. இது நமக்கு, வாழ்வா சாவா தேர்தல்" என்றுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கூட்டணிக் கட்சிகளையெல்லாம் ரஜினி கட்டி இழுத்தாலும், தி.மு.க-விடம் இருப்பதுபோன்ற வலுவான கட்டமைப்பும் தொண்டர்கள் பலமும் ரஜினியிடம் இருக்காது என்பது ஸ்டாலினின் கணக்கு. "இத்தனை வருடங்களாக மக்களுக்காக வீதியில் நின்ற நம்மை ஒதுக்கிவிட்டு, புதிதாக வந்த ரஜினியை யாரும் நம்ப மாட்டார்கள். அதுவும், அவர் பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேர்ந்தால், கண்டிப்பாக அவருக்கு சறுக்கல்தான்" என்று தி.மு.க மூத்த தலைவர் ஒருவரிடம் ஸ்டாலின் கமென்ட் அடித்தாராம்.

போரில் தன்னை எதிர்க்கும் இரு எதிரிப்படைகளில் ஒன்றை சிதறடித்து, அவ்வீரர்களைத் தனது வீரர்களாகவோ, அடிமைகளாகவோ மாற்றிக்கொண்டு, மீதமுள்ள ஒரு எதிரிப்படையை எதிர்த்து வீழ்த்துவது ஒரு போர் வியூகம். இதைத்தான் பி.ஜே.பி ஒவ்வொரு மாநிலத்திலும் செய்தது, இங்கும் செய்யப்போகிறது. மோடியும் அமித் ஷா-வும் கிருஷ்ணர் அர்ஜுனர் போன்றவர்கள் என ரஜினி கூறியுள்ளார். இவர்களை நம்பி சக்கர வியூகத்தில் நுழையப்போகிறார். அபிமன்யுவாக போர்க்களத்தில் ரஜினி சிக்கிக்கொள்வாரா அல்லது மீண்டுவந்து வெற்றியைக் காண்பாரா என்பது, அவர் வாளெடுத்துப் போர் புரியும்போது தெரிந்துவிடும்.