Published:Updated:

`ரஜினிகாந்த் சோல்ஜர்ஸ்!’ - சமூக வலைதளங்களை டார்கெட் செய்யும் மக்கள் மன்றத்தின்`டிஜிட்டல்’ டீம்

லோகேஸ்வரன்.கோ

பிரதமர் மோடி, ட்விட்டரில் தனக்கென ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியதைப் போல், இணையதளங்களில் ரஜினிக்கும் தனி பிம்பத்தை உருவாக்க ரஜினி மக்கள் மன்றத்தின் ‘டிஜிட்டல்’ படை களமிறங்கியிருக்கிறது.

ரஜினி
ரஜினி

ரஜினியின் அரசியல் பிரவேசம், 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தைத் தெறிக்கவிடும் என்று கருதுகிறார்கள் அவரது ரசிகர்கள். சினிமா படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த், அவ்வப்போது தமிழகத்தைக் கடந்து இந்திய அரசியல்குறித்தும் கருத்துகளைக் கூறி அதிரவைக்கிறார். சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ``மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கையை மனதார வரவேற்பதாகவும், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கிருஷ்ணர்-அர்ஜுனர் போன்றவர்கள்’’ என்றும் ரஜினிகாந்த் புகழ்ந்தார்.

மோடி
மோடி

இந்த நிலையில், சோசியல் மீடியாவின் வளர்ச்சி மற்றும் அதன் தாக்கத்தை உலகின் அத்தனை அரசியல் பிரபலங்களும் உணர்ந்திருப்பதைப் போன்று ரஜினியும் உணர்ந்திருக்கிறார். உதாரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி போன்ற அரசியல் தலைவர்களும் சோசியல் மீடியாவில் தங்களுக்கென நேர்மறையான பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ட்விட்டரில் மோடி தனக்கென ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டார். 

அதைப் போல, ரஜினிகாந்த்தும் தனி பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார். இதற்காக ரஜினி மக்கள் மன்றத்தில், ‘டிஜிட்டல்’ இணையப் படை தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட நேரத்தில் ஆளும்கட்சி யாகம் வளர்த்தது. எதிர்க்கட்சியான தி.மு.க ஆர்ப்பாட்டம் செய்தது. இவர்களுக்கு நடுவில் ரஜினி மக்கள் மன்றத்தினர், தண்ணீர் பஞ்சம் நிலவிய பகுதிகளில் டிராக்டர்கள், லாரிகள் மூலம் இலவசமாகத் தண்ணீர் வழங்கினர்.

இலவசமாகத் தண்ணீர் வழங்கிய ரஜினி மக்கள் மன்றத்தினர்
இலவசமாகத் தண்ணீர் வழங்கிய ரஜினி மக்கள் மன்றத்தினர்

குறிப்பாக, வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த சுமார் 1000 நிர்வாகிகள், தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க களமிறங்கினர். மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல், நதிகள் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தி, சோளிங்கர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபிலின் சொந்தத் தொகுதியான வாணியம்பாடியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் நடத்திய பிரமாண்ட பேரணி, பிரதான அரசியல் கட்சிகளையே அதிரவைத்தது.

இந்த நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு முன்பாக மக்கள் மன்றத்தைப் பலப்படுத்துவதற்கான முயற்சி நடந்துவருகிறது. முதல்கட்டமாக, சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வேலையை மக்கள் மன்றத்தினர் தொடங்கியிருக்கிறார்கள். இதுபற்றி ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் ரவி கூறுகையில், ‘‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'சோல்ஜர்ஸ்' என்னும் டிஜிட்டல் குழுவை உருவாக்கி ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற இணைய தளங்களில் ரஜினி குறித்த பதிவுகளை ‘டிரெண்டிங்’ செய்யும் வேலையைத் தொடங்கியிருக்கிறோம்.

இணைய டிஜிட்டல் படை
இணைய டிஜிட்டல் படை

இந்த இணைய டிஜிட்டல் படையில் உள்ள டெக்னிக்கல் குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம், சோளிங்கரில் நடைபெற்றது. ரஜினி குறித்த நேர்மறையான பதிவுகளை இணையத்தில் ‘மீம்ஸ்’களாக வைரலாக்குவது, எதிர்மறையான கருத்துகளை ஓரங்கட்டுவது, இணையத்தில் பார்வையாளர்களை அதிகப்படுத்துவது பற்றி தீவிரமாக ஆலோசித்தோம். இனிமேல், ரஜினி குறித்த நல்ல செய்திகள், மக்கள் மன்றத்தின் நற்பணிகள் போன்ற தகவல்கள், சமூக வலைதளங்களின்மூலம் மக்களிடம் விரைவில் சென்றடையும்’’ என்றார்.