Published:Updated:

நீக்கப்பட்டவர்கள் ரீ-என்ட்ரி; திரிசங்கு நிலையில் சுதாகர்?! - அதிரடிக்கு தயாராகும் ரஜினி

ரஜினி பேச்சு
ரஜினி பேச்சு

மாத்துவோம்..எல்லாத்தையும் மாத்துவோம் என்கிற ஹேஷ்டேகை ரஜினி அறிவித்தார் அல்லவா? அதில் இடம்பெற்றிருந்த வார்த்தையான மாத்துவோம் என்பதை ' ஏ ' மாத்துவோம் என்று ஒரு வார்த்தைய மாற்றி யாரோ தகிடுதத்தம் செய்திருக்கிறார்கள்.

கடந்த வாரம் ரஜினி அவரது அரசியல் வருகையை உறுதிப்படுத்தி புதுக்கட்சி அறிவிப்பை அவர் வெளியிட்டதுமே, பனிப்போர் ஆரம்பித்துவிட்டது ரஜினி மக்கள் மன்றத்தில்! கட்சி வேறு ரசிகர் மன்றம் வேறு என்று தனித்தனியாக தற்போது செயல்படவேண்டுமென்று ரஜினி முடிவுக்கு வந்திருக்கிறார்.

பத்திரிகையாளர்களை ரஜினி சந்தித்தபோது, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், பி.ஜே.பி-யின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, இருவரும்தான் இருந்தனர். ரஜினி மக்கள் மன்ற மாநில தலைமை நிர்வாகி சுதாகர் அங்கே இல்லை. அவரை ரஜினி அழைக்கவும் இல்லை. ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும், அர்ஜூனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் அறிவித்தார் ரஜினி.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
தே.அசோக்குமார்
மக்கள் மன்றத்தினர் அடிக்கும் போஸ்டர்களில் சுதாகர் படத்தை போடுவதா? வேண்டாமா? ரஜினி தவிர, தமிழருவி மணியன், அர்ஜூன மூர்த்தி., இருவரின் புகைப்படங்களில் யாருக்கு முக்கியத்துவம் தருவது? என்கிற புதுகுழப்பங்கள் ஆரம்பித்துவிடடன.

கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இயங்கிய ரஜினி மக்கள் மன்ற அலுவலகம் கடந்த ஒரு வருடகாலமாக பூட்டிக்கிடக்கிறது. அதற்கு மாநில நிர்வாகிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. மீண்டும் அழைக்கும்போது வந்தால் போதும் என்று கடைசியாக பதவியில் இருந்தவர்களை வழியனுப்பினார் ரஜினி. இன்றுவரை அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில், சுதாகர் மட்டுமே மன்ற நிர்வாகத்தை கவனித்து வந்தார். ரஜினியின் கட்சி அறிவிப்பின் போது சுதாகரையும் அவர் அருகில் நிற்க வைத்திருந்தால், அது மக்கள் மன்றத்தினருக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால், அதை ரஜினி செய்யவில்லை.

ஏன் செய்யவில்லை?

ஏற்கனவே மன்றத்தில் வயதானவர்கள், நீண்டகாலம் பொறுப்பில் இருந்தவர்கள், வசதி இல்லாதவர்கள் என்கிற பேனர்களில்தான் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் இருந்து வந்தனர். ஒரு வருடம் முன்பு, மக்கள் மன்றத்தை ரஜினி மாற்றியமைத்தபோது, அதன் மாவட்ட செயலாளர்களாக இருந்த பழையவர்களில் பலரையும் மாற்றினார். புதிய வரவாக, ஏரியாவில் செல்வாக்கு உள்ளவர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமித்தார். தி.மு.க, அ.தி.மு.க போன்ற அரசியல் ஜாம்பவான்களை சமாளிக்கவேண்டி சூழ்நிலை வரும் என்பதால், அந்த கட்சிகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய அளவுக்கு வசதி வாய்ப்பு ஆள் பலம் கொண்டவர்களை தேர்தெடுத்து நியமித்தார். அப்போதே இரண்டு கோஷ்டிகள் ஆனது மக்கள் மன்றம். மக்கள் மன்றத்தில் புதியதாக பொறுப்பு வந்தவர்களின் செயல்பாடுகளை கடந்த ஒரு வருடகாலமாக ரஜினி கவனித்து வந்தார். ரஜினி வைத்த டெஸ்ட்டில் பாஸ் செய்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பெரும்பாலனவர்கள் அதிரடி அரசியலுக்கு சரிபட்டு வரமாட்டார்கள் என்பது ரஜினியின் முடிவு. அதனால், மக்கள் மன்ற நிர்வாகிகள் கட்டமைப்பை மீண்டும் சீரமைக்கப்போகிறார்.

நீக்கப்பட்டவர்கள் ரீ-என்ட்ரி; திரிசங்கு நிலையில் சுதாகர்?! - அதிரடிக்கு தயாராகும் ரஜினி

நீக்கப்பட்ட பல ஆயிரம் பேர்களுக்கு மீண்டும் என்ட்ரி?

புதியதாக பதவிக்கு வந்தவர்கள் போட்ட ஆட்டங்கள் பற்றி கேள்விப்பட்டு டென்ஷன் ஆகிவிட்டாராம் ரஜினி. சென்னையில் உள்ள ஒரு மாவட்டத்தில் சுமார் 100 பேர் மன்றத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். போஸ்டரில் பெயர் போடவில்லை, மாவட்டச் செயலாளர் படத்தை சிறியதாக போட்டார், என்றெல்லாம் சாதாரண காரணங்களுக்காக நீக்கியுள்ளாராம் ஒரு மாவட்டச் செயலாளர். சென்னையில் உள்ள இன்னொரு மாவட்டச் செயலாளர் அவரது கோஷ்டியில் சேராதவர்கள் உள்ள பதவியை டம்மி ஆக்கி இணையான இன்னொரு பதவியை உருவாக்கி தனது கோஷ்டிகானத்தை தொடருகிறாராம். இப்படி ஏகப்பட்ட கோஷ்டி பூசல்கள். ரஜினிக்கு விசுவாசமான பல ஆயிரம் பேர் மன்றத்தை விட்டு அற்ப காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளனர். சில ஆயிரம் பேர் ஒரங்கட்டப்பட்டுள்ளனர். பெரிய அளவில் தவறு செய்தவர்கள் ஒரு சிலர்தான். அரசியல்கட்சி ஆரம்பிக்கிற இந்த சூழ்நிலையில் அவர்களை மீண்டும் சேர்க்க நினைக்கிறாராம் ரஜினி.

திரிசங்கு நிலையில் சுதாகர்!

1970 இறுதியில் தமிழ்நாடு ரஜினி மன்றம் என்கிற பெயரில் மயிலாப்பூர் ரசிகர்கள் நடத்தி வந்தனர். தென்னிந்திய ரஜினி மன்றம் பெயரில் வேறு சிலர் நடத்தி வந்தனர். ரஜினியின் பட ரிலீஸின் போது இரண்டு மன்றத்தினரும் மோதிக்கொண்டனர். உடனே, இருவரையும் அழைத்த ரஜினி அகில இந்திய ரஜினி நற்பணி மன்றம் என்கிற பெயரில் இருதரப்பினரையும் இணைந்து செயல்பட வைத்தார். அப்படித்தான் ரஜினி நற்பணி மன்றம் 1980-ல் உருவானது. அப்போது அதன் தலைவராக பூக்கடை நடராஜனை நியமித்தார். கொஞ்சகாலத்துக்குப் பிறகு கருத்து வேற்றுமையால் நடராஜன் விலகினார். அதன் பிறகு, சுமார் 25 ஆண்டுகளாக ரஜினியின் நற்பணி மன்றத்தை கவனித்து வந்தவர் சத்தியநாரயணா. இவருக்குகென்று ஒரு கோஷ்டி செயல்பட்டது. அதன் ஆதிக்கம் அதிகமானதால், சத்தியநாரயணாவை ரஜினி ஒரங்கட்டினார். ரஜினியுடன் நட்பில் மட்டும் இருக்கிறார். ஆன்மீகத்தில் இறங்கி, கும்பகோணத்தில் ஒரு கோவில் சீரமைக்கும் பணியில் பிஸியாகிவிட்டார்.

 ரஜினி மக்கள் மன்றம்
ரஜினி மக்கள் மன்றம்

2010-ல் ரஜினிக்கும் மன்றத்தினருக்கும் இடையே ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார் சுதாகர். முழுக்க முழுக்க நிர்வாக ரீதியான பணிகளைத்தான் கவனித்து வந்தார். 2017-ல் ரஜினி மக்கள் மன்ற உருவானபோது, அதன் மாநில நிர்வாகியாக சுதாகர் ஆக்கப்பட்டார். லைக்கா சினிமா கம்பெனியின் முக்கிய பொறுப்பில் இருந்த ராஜூமகாலிங்கம், மக்கள் மன்ற பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். கோஷ்டி பூசலில் அவர் தூக்கியடிக்கப்பட்டார். அதே காலகடத்தில் அமைப்புச் செயலாளராக டாக்டர் இளவரசனை ரஜினி நியமித்தார். இவர்மீதும் கோஷ்டி ஏவுகணை பாய்ந்ததில், பந்தாடப்பட்டார். இந்த இருவரையும் யார் பாலிடிக்ஸ் செய்தது என்று ரஜினி விசாரித்தபோது, தலையேசுற்றியதாம். எஞ்சி இருந்தவர்களுக்கு ஒரு கும்பிடு போட்டு, போய்வாருங்கள் என்று சொல்லித்தான் மன்ற அலுவலகத்தை பூட்டினார்.

ஆனால், சுதாகர் மட்டும் பதவியில் தொடர்ந்து வந்தார். ரஜினி அரசியலுக்கு போகமாட்டார் என்று தீர்க்கமாக நம்பிகொண்டிருந்தார் சுதாகர். ஆனால், திடீரென்று ரஜினி அவரது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்ததும் அதிர்ந்துபோனார். தமிழருவி மணியனையும், அர்ஜூன மூர்த்தியையும் புதிய பதவிகளில் நியமிப்பதாக ரஜினி தனது லட்டர்பேடில் பத்திரிகை செய்தியை வெளியிட்டிருந்தார். இதற்கு முன்பு வரை, எந்த புது நியமனம், நீக்கம் என்றாலும் ரஜினியின் மக்கள் மன்ற லட்டர்பேடில்தான் வெளியிடப்படும். அதன் கீழே, சுதாகரின் பெயர் இருக்கும். அது இந்த முறை இல்லை என்றவுடன் பதறினார் சுதாகர். மன்றத்தினரும் சுதாகரின் படத்தை போஸ்டரில் போடுவதை தவிர்த்து, புதியவர்களின் படங்களை போஸ்டரில் போட்டனர். தனக்கு எங்கே முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ? என்று மிரண்டுபோனார்.

சில நாட்களுக்கு முன்பு, பெங்களூருவில் உள்ள அண்ணன் வீட்டுக்கு ரஜினி போனார் அல்லவா? அங்கே சுதாகரும் கிளம்பிபோயிருக்கிறார். தனக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறார். ரஜினி அவரை சமாதானப்படுத்தியிருக்கிறார். சுதாகருக்கும் ஏதாவது முக்கிய பதவி கிடைக்கும் என்று பேசிக்கொள்கிறார்கள்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

தமிழருவி மணியனின் ஆரம்பமே சரியில்லை!

ஏற்கனவே திருச்சி, கோவையில் ரஜினியிடம் அனுமதி வாங்கி மன்றத்தினரை சந்தித்து பேசினார் தமிழருவி மணியன். அப்போது, அவர் செயல்பட்ட விதத்தில் ரஜினி அதிருப்தி ஆனார். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் அழைத்தார் ரஜினி. புதுக்கட்சியின் தலைவராக அறிவிப்பார் அல்லது, முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார் என்றுதான் தமிழருவி மணியன் தரப்பினர் எதிர்பார்த்தனர். ஆனால், ரஜினி அப்படி செய்யவில்லை. நம்பர் 3-யாக அறிவித்ததில் தமிழருவி மணியன் தரப்பினருக்கு ஷாக். ரஜினி அறிவித்த மறுநாளே, `தன்னை ரஜினியிடமிருந்து பிரிக்க சதி நடக்கிறது’ என்று திடீரென தமிழருவிமணியன் குண்டைத்தூக்கிப்போட அதிர்ந்துபோனார் ரஜினி. ``இவராக எதையாவது மீடியாவில் அவசரப்பட்டு பேசிவிட்டு, பிறகு மாற்றிப்பேசுவார். இவரை எப்படித்தான் ரஜினி சமாளிக்கப்போகிறாரோ? '' என்று ரஜினி மன்ற நிர்வாகிகள் பேசிக்கொள்ளுகிறார்கள்.

நீறு பூத்த நெருப்பாக இருக்கும் அர்ஜூன மூர்த்தி!

இவர் பி.ஜே.பி-க்காரர் இல்லை, தி.மு.க-வின் அனுதாபி என்றெல்லாம் சர்ச்சை சமூக வளைதளங்களில் ரெக்கை கட்டிப்பறக்கிறது. தி.மு.க முக்கிய தலைவர் முரசொலி மாறனுடன் இருந்தவர் அர்ஜூனமூர்த்தி என்று ஒரு தரப்பினர் சொல்ல, அதை தயாநிதி மாறன் மறுத்தார். ஆனால், சமூக வளைதளங்களில் முரசொலி மாறனுடன் அர்ஜூனமூர்த்தி இருக்கிற புகைப்படம் இதோ, என்று சொல்லி ஒரு புகைப்படத்தை வெளியிட அது அர்ஜூனமூர்த்தி அல்ல.. புதுச்சேரியை சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகர் என்று இன்னொரு தரப்பு சமூக வளைதளங்களில் பதில் போட்டது. இப்படி போய்க்கொண்டிருக்கிறார் அர்ஜூனமூர்த்தி. ரஜினி அறிவித்து ஐந்து நாட்கள் ஆகியும் அவர் இன்னும் ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள மன்ற அலுவலகத்துக்குப் போகவில்லை. அந்த சாவி சுதாகரிடம் இருக்கிறது. சாவியை கேட்டிருக்கிறார் அர்ஜூனமூர்த்தி. ஏதேதோ காரணங்காட்டி இதுவரை கொடுக்கவில்லை என்கிறது அர்ஜூனமூர்த்தி தரப்பினர்.

ரஜினியுடன் அர்ஜூனமூர்த்தி
ரஜினியுடன் அர்ஜூனமூர்த்தி

கட்சி அலுவலகத்துக்கு இடம்தேடுகிறார் ரஜினி!

இதுவரை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில்தான் மக்கள் மன்ற அலுவலகத்தை நடத்தி வந்தார் ரஜினி. வரும் ஜனவரி முதல் புது அரசியல் கட்சி வேலைகள், ஆலோசனை கூட்டங்கள் அடிக்கடி நடக்கும் போது திருமண மண்டபத்தில் கட்சியினர் கூட்டம் அலைமோதும். இது, திருமண நடத்துகிறவர்களுக்கு இடைஞ்சலாக ஆகிவிடும். வாகன நெரிசல் வேறு ஏற்படும். எனவே, வேளாச்சேரியில் உள்ள ரஜினியின் வீட்டில் சில மாறுதல்களை செய்து அங்கே கட்சி அலுவலகத்தை நடத்தலாமா? என்று யோசிக்கிறாராம். ஏற்கனவே, அங்கே கட்டப்பட்ட வீடு ராசி இல்லை என்றுதான் போயஸ்கார்டன் வீட்டுக்கு மாறினார் ரஜினி. எனவே, ராசி இல்லாத இடத்தில் புதிய கட்சியை நடத்துவாரா? என்று வினா எழுப்புகிறார்கள் ரஜினி மன்ற நிர்வாகிகள். தி.நகர் ஏரியாவில் புது பில்டிங்கை வாடகைக்கு பிடிக்க தேடுதல் பணியை முடுக்கிவிட்டிருக்கிறார் ரஜினி.

ரஜினியின் ஐ.டி. விங் விட்ட கோட்டை!

நீக்கப்பட்டவர்கள் ரீ-என்ட்ரி; திரிசங்கு நிலையில் சுதாகர்?! - அதிரடிக்கு தயாராகும் ரஜினி

மாத்துவோம்..எல்லாத்தையும் மாத்துவோம் என்கிற ஹேஷ்டேகை ரஜினி அறிவித்தார் அல்லவா? அதில் இடம்பெற்றிருந்த வார்த்தையான மாத்துவோம் என்பதை ' ஏ ' மாத்துவோம் என்று ஒரு வார்த்தைய மாற்றி யாரோ தகிடுதத்தம் செய்திருக்கிறார்கள். இந்த வரிகளை கவனியாமல், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள், சினிமா பி.ஆர்.ஒ-கள் என்று பலதரப்பட்டவர்களும் பார்வேர்டு செய்ய.. அது வைரலாகிப்போனது. பிறகு லேட்டாகத்தான் ரஜினியின் ஐ.டி விங்கிற்கு தெரியவந்திருக்கிறது. முடிந்த அளவிற்கு ரஜினிக்கு வேண்டப்பட்டவர்கள் தவறுதலாக பதியவிட்ட தகிடுதத்த கோஷத்தை அழிக்கும் பணியில் ஐ.டி. விங் ஆட்கள் மும்முரமாகியுள்ளனர்.

ரஜினியை சுற்றிலும் வண்ணஜால சம்பவங்கள் அரங்கேற ஆரம்பித்துவிட்டன.

அடுத்த கட்டுரைக்கு