Published:Updated:

``அந்த உயிர்த்தியாகத்துக்கு நான் தகுதியானவன் அல்லன்!"- செங்கொடியின் நினைவால் கலங்கிய ரவிச்சந்திரன்

ரவிச்சந்திரன்

"நீங்க கேட்குற அரசியலுங்குறது அதிகாரத்தை, புகழை, சொகுசான வாழ்க்கையை மையமா வச்சுப் பேசுறது. அதை நான் பேச வரல.அது அரசியலே கிடையாது. என்னைப் பொறுத்தவரை வீட்டுக்குள் நாம் ஒருவருக்கொருவர் உதவிசெய்வதுகூட சேவையின் வகைதான்." - ரவிச்சந்திரன்

``அந்த உயிர்த்தியாகத்துக்கு நான் தகுதியானவன் அல்லன்!"- செங்கொடியின் நினைவால் கலங்கிய ரவிச்சந்திரன்

"நீங்க கேட்குற அரசியலுங்குறது அதிகாரத்தை, புகழை, சொகுசான வாழ்க்கையை மையமா வச்சுப் பேசுறது. அதை நான் பேச வரல.அது அரசியலே கிடையாது. என்னைப் பொறுத்தவரை வீட்டுக்குள் நாம் ஒருவருக்கொருவர் உதவிசெய்வதுகூட சேவையின் வகைதான்." - ரவிச்சந்திரன்

Published:Updated:
ரவிச்சந்திரன்
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகிச் சிறையிலிருந்தவர்களில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன் உட்பட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து அதிரடியாக சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து விடுதலை நடைமுறைகளை முடித்துக்கொண்ட ரவிச்சந்திரன், 32 ஆண்டுச் சிறைவாசத்துக்குப் பின் தனது சொந்த ஊரில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக்கொண்டிருந்தார்.‌ கம்மங்காட்டுச் சூழலும், வீட்டுத் தோட்டத்தின் அழகியலுமாய் நிறைந்திருந்த அவரது வீட்டில் பந்தோபஸ்து இல்லாத ரவிச்சந்திரனை மிக எளிதாகப் பார்க்கமுடிந்தது. வழக்கமான சில அறிமுகப் பேச்சுக்குப் பின், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

32 ஆண்டுக்காலச் சிறைவாழ்க்கையில் நீங்கள் என்னவெல்லாம் இழந்தீர்கள்?

"இழப்பென்பதைக் கணக்கிட்டுச் சொல்லமுடியாது. நல்ல தேநீர், காபி, குடும்பத்தோடு இணைந்திருப்பது, குழந்தைகளோடு இணைந்திருப்பது, பசங்களுடன்‌ விளையாடுவது என சின்னச் சின்ன சந்தோஷங்களை நிறைய இழந்திருக்கேன்."

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

நீங்கள் சிறையிலிருந்த நேரம், உங்களது குடும்பம் என்ன மாதிரியான துயரங்களைச் சந்தித்தது?

"எங்களுடைய தண்டனையைக்காட்டிலும் அது கொடுமையானது. எங்களுக்கான தண்டனை சிறையின் 4 சுவருக்குள் முடிஞ்சிடும். ஆனால் அவங்கதான் இந்தச் சமூகத்தை தினம் தினம் எதிர்கொண்டாங்க. அந்தவகையில் அவர்களுக்குத்தான் உண்மையான தண்டனை வழங்கப்பட்டுச்சுன்னு சொல்வேன்."

சிறைவாழ்க்கையை எப்படிப் பயன்படுத்தினீங்க? அந்த வாழ்வு எப்படி நகர்ந்தது?

"முக்கியமா புத்தகங்கள். புத்தகங்கள் இல்லைன்னா நான் இல்லை. அப்படித்தான் சொல்லணும்."

விடுதலை பெற்ற பின்னான மனநிலை எப்படி உள்ளது?

"வித்தியாசமா இருக்கு. சிறைக்குள்ள இருக்கும்போது இருந்த மனநிலைக்கு நேரெதிரா இருக்கு."

இந்த விடுதலையை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

"நிச்சயமா எதிர்பார்த்ததுதான். சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிக்கும்போதே எங்களின் விடுதலை இந்த உலகத்தில் உறுதிசெய்யப்பட்ட ஒன்னுதான். சிறை, தண்டனை, விடுதலை, சீர்திருத்தம் என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது. மத்திய அரசுக்கு இதில் சம்பந்தம் கிடையாது. அரசியல் சாசனப்படியே இது மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டது எனச் சொல்லப்பட்டிருக்கு. இந்த நிலையில தமிழர் உரிமை, தமிழர் நலன் சார்ந்த வழக்கு என்ற ரீதியில் இந்த வழக்கை அணுகியதால் மத்திய அரசு எங்க விடுதலையை வேண்டுமென்றே செயற்கையா தடுத்து நிறுத்தினாங்க. அதுக்கு சட்டப்படியான காரணங்கள் எதுவும் கிடையாது. இதுதொடர்பாக எழுந்த அத்தனை விவாதமும் சட்டப்படியானது இல்லை, செயற்கையானது. இயற்கையான நீதிக்கு ஏற்புகிடையாது. எல்லாமே செயற்கையா உருவாக்கப்பட்ட தடைகள். அந்தச் தடைகளை உடைச்சு வர்றதுக்கு எங்களுக்கு இவ்வளவு காலம் ஆகிட்டு."

இப்போது உங்களின் குடும்பத்தினரின் மனநிலை என்னவாக உள்ளது?

"நிம்மதிதான். இத்தனை ஆண்டுக்காலத் தவிப்பு, காத்திருப்பு, வலிகள் எல்லாம் முடிவுக்கு வந்துடுச்சு. மற்றபடி எந்தக் கொண்டாட்டமும் இல்லை."

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

சிறையில் புத்தகம் எழுதும் வாய்ப்பு எப்படி ஏற்பட்டது? அதற்கான உந்துதல் என்ன?

``ஒரு காலகட்டத்துக்குப் பின் எங்களின் விடுதலை தாமதமானதைத் தொடர்ந்துதான் அந்த வாய்ப்பு ஏற்பட்டுச்சு. 2004-லிருந்தே எங்களின் விடுதலை பற்றிய நடவடிக்கை, பேச்சுகள் ஆரம்பிச்சிடுச்சு. அப்போவரை இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பிலிருந்தும், அரசுத் தரப்பிலும் என்ன சொல்லப்பட்டதோ அது மட்டும்தான் நிலைச்சிருந்துச்சு.அதுக்குப்பிறகு பழ.நெடுமாறனின் தலைமையிலான அமைப்பு, 26 பேரின் தூக்குத் தண்டனைக்கு எதிரான பரப்புரை, வாதங்கள் மூலமாக எங்கள் தரப்பு விஷயங்கள் வெளிவர ஆரம்பிச்சது. இந்த வழக்குல என்னென்ன தவறுகள் நடந்துச்சு? நாங்களெல்லாம் யார்? நாங்க எப்படி இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டோங்கிறது தெரிய ஆரம்பிச்சது. இந்த விஷயம் மக்களுக்குத் தெரியும்போதே அதை மறைக்கிறதுக்கு சி.பி.ஐ அதிகாரிகள் கார்த்திகேயன் மற்றும் சிலர் புத்தகங்கள் எழுதினாங்க. ரகோத்தமன் உள்ளிட்ட அதிகாரிகள் டாக்குமென்ட்ரி தயாரிச்சாங்க. அதில் திரும்ப, திரும்ப நாங்கள்தான் இதைச் செஞ்சோம். விடுதலைப்புலிகள் தான் இதைச் செஞ்சுது, விடுதலைப்புலிகளின் தமிழக ஆதரவாளர்கள்தான் இதைச் செஞ்சாங்க, இருவரும் சேர்ந்துதான் செஞ்சாங்க என்ற விஷயத்தை வலுவாக நிறுவினாங்க. அப்போ 'ஏழை சொல் அம்பலம் ஏறாதுங்குற' பழமொழிக்கேற்ப எங்களைப் பற்றிப் பேசுறவங்க சாதாரண ஏழை ஜனங்களாத்தான் இருந்தாங்க. எதிர்தரப்புல பெரிய பெரிய அதிகாரிகள் பேசினாங்க. மீடியாவும்கூட ஒரு பிரமுகர் அல்லது அதிகாரத்தில் இருப்பவங்க என்ன சொல்றாங்களோ அதைத்தான் பிரதானப்படுத்துவாங்க. இது இயல்பானது. அந்த விதத்துலதான் எங்கள்மீதான குற்றம் திரும்ப திரும்ப நிறுவப்பட்டுச்சு. அப்போ எங்கள்தரப்பு நியாயத்தை மூன்றாம்தர மனிதர்கள்தான் பேசினாங்க.

இந்த விஷயத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டது இரண்டே தரப்புதான். ஒன்று சி.பி.ஐ. மற்றொன்று எங்கள் தரப்பு. சி.பி.ஐ தரப்பிலிருந்து எல்லாமே வெளிவருது, ஆனா எங்கள் தரப்பிலிருந்து எந்த விஷயமும் வெளி வர்றதில்லை. எனவே நம்ம தரப்பு நியாயத்தைப் பேச யாராவது முன்வரணும்னு எனக்கு அப்போ தோனுச்சு. அதுக்காக குறிப்புகள் சேகரிக்க ஆரம்பிச்சேன். சிறைக்குள் இருந்துகொண்டு குறிப்புகள், ஆதாரங்களைச் சேகரிக்கிறது மிகப்பெரிய வேலையா இருந்துச்சு. வெறும் 300 பக்கப் புத்தகத்துக்கான குறிப்புகளை நான் 7 வருஷமா சேகரிச்சேன். 2010-ல் ஓரளவு குறிப்புகள் சேகரிச்ச பின் எங்களது தரப்பு நியாயங்களை எழுத்துவடிவில் கொண்டுவர ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட ஒரு வருஷத்தில் புத்தகத்தை நிறைவு செஞ்சேன்."

பரோலுக்காக/பரோலில் உங்களின் அம்மா ராஜேஸ்வரி அனுபவித்த சிரமங்கள் தெரியுமா?

"காவல்துறையினர் கூடவே இருக்கும்போது உளவியல் ரீதியான சிரமங்களை நிறைய அனுபவிச்சாங்க. நான் அவங்ககூட இருக்குறேங்குற மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், அதை முழுமையான மகிழ்ச்சின்னு சொல்லமுடியாது. எங்கேயும் போகமுடியாது. யார்கிட்டேயும் பேசமுடியாது. திருமண வீடோ, துக்க நிகழ்ச்சிகளுக்கோ போயி ஆத்மார்த்தமா கலந்துக்கமுடியாது. அப்பவும் போலீஸ் கூடவே இருப்பாங்க. போட்டோ பிடிப்பாங்க, வீடியோ எடுப்பாங்க‌. இதெல்லாம் அவங்களுக்கு மனதளவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இருந்தாலும் இதை எல்லாத்தையும் 'நம்ம பையன் நம்மகூட இருக்காங்குற' நினைப்புல மூட்டைகட்டிருவாங்க. எல்லாமே சகிச்சிக்கிறதுதான். இதை வேறெப்படிச் சொல்ல."

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

அம்மா ராஜேஸ்வரியின் நீண்டகால ஏக்கம் உங்களின் திருமணம். அது பற்றிய பதில் என்ன?

"நமக்கு யாருங்க பொண்ணு கொடுப்பா? நமக்கு அது புரியுது. அவங்களுக்குத் தெரியணும்ல. எதையும் பிராக்டிக்கலா யோசிச்சுப் பாக்கணும்ல. இப்பவும் நான் வெட்டி ஆபீஸர்தான்" (சிரிக்கிறார்).

சிறையில் தமிழ்ச் செய்திகளை ஒளிபரப்ப வேண்டுமென நீங்கள் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றீர்களே அதுபற்றிச் சொல்லுங்க?

"என்ன நோக்கத்துக்காக வழக்கு போட்டனோ அதுக்கான‌ முழு வெற்றி எனக்குக் கிடைக்கல. சிறைவாசிகளுக்கு அறிவு வளர்ந்திடக் கூடாதுங்கிறதுல இந்த அரசமைப்பு தெளிவா இருக்கு. நாட்டுநடப்பு, உலகநடப்புகளைத் தெரிஞ்சிக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க. ஒரு கட்டத்தில் அதிகாரிகள் இதுக்கு பதில் சொல்ல மறுக்கும்போது, அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தேன். அப்போ நீதிமன்றமும் எங்க கோரிக்கையின் மீது நியாயம் இருக்குறதைப் புரிஞ்சிக்கிட்டு உத்தரவை வழங்குச்சு. நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த வேண்டிய சிறைத்துறையோ, சிறைக்குள் டி.வி-யில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். ஆனால், செய்தி சேனல் மட்டும் பார்க்கக்கூடாது. செய்தின்னு வந்தாலே நாங்கள் நிறுத்துவோம்னு சொல்றாங்க. எனவே, வழக்குபோட்டதற்கான முழுவெற்றி எனக்குக் கிடைக்கல. இதைத் தனி வழக்காக கோர்ட்டில் தாக்கல் செய்து போராடணும்னு நினைக்கும்போது எனக்கு பரோல் கிடைச்சது. அதேசமயம், நீங்க ஒருத்தர்தான் செய்தி சேனல் பாக்கணும்னு சொல்றீங்க. ஆனால் மற்ற சிறைவாசிகளுக்கு என்டர்டெயின்மென்ட் சேனல்ஸ் மட்டுமே போதும்னு சொல்றாங்கன்னு சொல்லும்போது நம்மால் என்ன சொல்லமுடியும். சுற்றியுள்ள சூழ்நிலைகளும் அப்படித்தான் இருக்கு."

சிறைவாசிகளின் உரிமைகளைப் பற்றிப் பேசும்போது நீங்கள் அனுபவித்தவை என்ன?

"நம்ம உலகம் அப்படி முன்னேறிட்டு, இப்படி முன்னேறிட்டுன்னு சொல்றோம்ல, அதெல்லாம் தப்பு. இன்னமும் நம்ம நாட்டுச் சிறைச்சாலைகள் 200 ஆண்டுகள் பின்தங்கித்தான் இருக்கு. சிறைக்குள் கைதிகளுக்கு சாப்பாடு கொடுக்குறோம், முட்டை, கறி கொடுக்குறோம்னு சில பத்திரிகைகளில் செய்திகள் வந்ததாலும் நாலு சுவருக்குள் அடைந்து கிடப்பவனுக்கு அந்த உணவு எந்தத்தரத்தில் போய்ச் சேர்கிறதென்பதை யாரும் சிந்திப்பதில்லை."

பேரறிவாளன் விடுதலை சமயத்தில் உங்களின் மனநிலை...

"நிச்சயமா மகிழ்ச்சியான செய்தியா இருந்துச்சு. இந்த வழக்கிலிருந்து அவர் ஒருவராவது விடுதலை அடைந்தாரேன்னு நிம்மதி ஏற்பட்டுச்சு. வழக்கிலிருந்து ஒருவர் விடுதலையடைந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்னு என்னுடைய நூல்லயே நான் சொல்லிருப்பேன். எனவே, இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் முதலில் நளினியோ, பேரறிவாளனோ யார் விடுதலையடைந்திருந்தாலும் மகிழ்ச்சிதான்."

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

உங்களின் விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்த செங்கொடி போன்றோரின் உயிர்த்தியாகம் உங்களுக்குள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?

"அந்தச் செய்தி படிச்சப்பவே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சிதான். 3 பேரின் தூக்குத்தண்டனையை எதிர்த்துதான் செங்கொடி தோழர் உயிர்த்தியாகம் செஞ்சது. நாளடைவில் அது எழுவரின் விடுதலைக்காகவும் எனச் சொல்லப்பட்டப்போ உண்மையில் அந்த உயிர்த்தியாகத்துக்கு நான் தகுதியானவன் அல்லன்னுதான் நான் நெனைச்சேன். இது என்னோட தனிப்பட்ட கருத்து. நான் என்னோட மனநிலையை வச்சுதான் பேசமுடியும். அந்தத் தியாகத்தை நினைக்கும்போது..." (தாரை தாரையாக சிந்திய கண்ணீரால் கர்ச்சிப்பை நனைத்துக்கொண்டார்).

விடுதலைக்குப் பின்னர் நீங்கள் யாரைச் சந்திக்க விரும்புகிறீர்கள்?

"கண்டிப்பா நிறைய பேரைச் சந்திக்கனும்னு உந்துதல் இருக்கு. எங்களின் விடுதலைக்காகப் போராடிய தோழர்கள், 'இப்பதான் விடுதலையாகி வெளியே வந்திருக்கீங்க. கொஞ்சம் சுதந்திரக் காற்றை சுவாசிங்க. அதுக்கப்புறம் எல்லாம் பாத்துக்கலாம்னு கேட்டுக்குறாங்க.' ஆகையால அதன்படி செய்யலாம்னு நினைப்பு இருக்கு."

விடுதலைக்குப் பின் பொதுவாழ்விற்குப் பயன்படும்படி வாழ்வதாகக் கூறினீர்கள்... அப்படியெனில் அரசியல் பிரவேசம் உண்டா?

"அரசியல் என்னங்கிறதை நான் என்னோட புத்தகத்துலேயே சொல்லிருக்கேன். ஆனாலும், இந்த இடத்தில் நான்‌ இரண்டு தலைவர்களை மேற்கோள் காட்டிச் சொல்றேன்.‌ முதலாவது லெனின். 'மனிதன் பேசும் ஒவ்வொரு பேச்சிலும் அரசியல் கலந்திருக்கிறது’ என்று சொன்னவர். நான் அரசியலுக்கு வரலன்னு சொல்றதும்கூட ஒருவகை அரசியல்தான். ஏன்னா, நல்லதோ, கெட்டதோ இருக்கிறத நீங்க அப்படியே ஏத்துக்குறீங்க. இங்க எந்தவிதமான மாற்றத்தையும் நீங்க உருவாக்க விரும்பல. அல்லது சகிச்சிக்கத் தயாரா இருக்கீங்க. ஆனாலும் இது அனைத்திலும் உங்களுக்கு ஆதாயம் இருக்கு. எனவே அதுவும் அரசியல்தான்னு லெனின் சொல்றார். புரட்சியின் மூலம் மக்களின் உரிமை, ஆட்சி, அதிகாரத்தை அடையலாம் எனக் கருதியவர் அவர்.

இன்னொருவர் மகாத்மா காந்தி. அரசியல் உணர்வற்றவன் மனிதனே கிடையாதுன்னு சொல்கிறார். அப்படின்னா அரசியல் உணர்வு இல்லாதவன், ஐந்தறிவு ஜீவனாவோ அல்லது ஓரறிவு பிராணியாவோதான் இருக்கணுங்கிறது அவர் கருத்து. இதை வச்சு அரசியல்னா நான் என்ன சொல்லவர்றேன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்.

ஆனா, நீங்க கேட்குற அரசியலுங்குறது அதிகாரத்தை, புகழை, சொகுசான வாழ்க்கையை மையமா வச்சுப் பேசுறது. அதை நான் பேச வரல. அது அரசியலே கிடையாது. என்னைப் பொறுத்தவரை வீட்டுக்குள் நாம் ஒருவருக்கொருவர் உதவிசெய்வதுகூட சேவையின் வகைதான். ஒருத்தர் விழுந்துகிடக்குறார், அவரைத் தூக்கிவிடுறோம். அதுவும் ஒரு சேவை. அதுபோலதான் இதிலிருந்து நான் என்ன புரியவைக்க முயற்சி செய்றேன்னு உங்களுக்குத் தெரியுதுல, அவ்வளவுதான்."

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

விடுதலைக்குப் பின் புத்தகம் எழுதும் எண்ணம் இருக்கிறதா?

"எப்பவோ எழுதுன கவிதைத்தொகுப்பு எங்கிட்ட இருக்கு. காலங்கடந்திருந்தாலும் அந்தத் தொகுப்பை வெளியிடுவதற்கான வாய்ப்பு கிடைச்சா கட்டாயம் வெளியிடுவேன். ஒரே விஷயத்துல என்னால கவனம் செலுத்த முடியாது. நினைச்சா எழுதுவேன், படிப்பேன். நினைச்சா தூங்குவேன். ஏன்னா, சிறை என்னை அப்படித்தான் பழக்கப்படுத்திருக்கு. அதனால இப்படிதான்னு எந்த வரைமுறையும் இல்லை. ஆனா, சிறை மறுசீரமைப்பு, சிறைவாசிகள் உரிமைகள், நடத்தைகள் பற்றி புத்தகமா எழுதவேண்டிய தேவையிருக்கு. ஏன்னா இத்தனை ஆண்டுக்காலம் சிறையிலிருந்த அனுபவத்துக்கு சிறு மதிப்பு கொடுக்கணும்னு நினைக்கிறேன். இப்போ நான் சொல்லி யாரும் காதுகொடுத்துக் கேட்கப்போறதில்ல. ஆனா, அதபற்றி விவாதங்களை எழுப்புவதன் மூலமா சிறைவாசிகளின் அடிப்படைத் தேவைகளில் சின்ன மாற்றம் வந்தால் போதுமானது."

"நீங்கள் உட்பட 6 பேரும் விடுதலை எனத் தீர்ப்பு வந்த தருணத்தை எப்படி உணர்ந்தீர்கள்?"

"விடுதலைத் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான். இத நான் என் புத்தகத்துலேயே எழுவர் விடுதலையா? ஒருவர் விடுதலையா? உண்மையும், உருட்டலுங்குற தலைப்புல ஏற்கெனவே எழுதியிருக்கேன். இந்தச் சட்டப்போராட்டம் இறுதியில் இப்படித்தான் ஆகும்னு முன் கூட்டியே நான் கணித்து எழுதினதுதான் இன்னைக்கு நடந்திருக்கு. அந்தவகையில் மகிழ்ச்சி."

உங்களின்‌ விடுதலையை எதிர்பார்த்து சிறைக்கு வெளியே இவ்வளவு பேர் காத்திருப்பார்கள் என்பதை நீங்கள் யூகித்தீர்களா?

"நிச்சயமா யூகிச்சுப் பார்க்கல. எனக்குக் கொஞ்சம் கூச்சமா இருந்துச்சு. ஏன்னா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இயல்பு இருக்கும். என்னுடைய இயல்பு சாதாரணமாகக் கடந்து போறதுதான். ஆனா, சிறைக்கு வெளியே காத்திருந்தவர்களின் அன்பு, எங்களோட விடுதலையை நோக்கிய அவர்களின் ஏக்கத்தினுடைய வெளிபாடுதான்னு தெரிஞ்சுது. அதையெல்லாம் பார்க்கும்போது... ஹூம்... என்னால சொல்லவே முடியல."

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

இத்தனை ஆண்டுக்காலச் சிறைவாழ்க்கை உங்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தது... இரண்டு வரியில்?

"விடாமுயற்சி, நம்பிக்கை - இந்த இரண்டும்."

சிறைக்கு வெளியே காத்திருந்தவர்களின் கொண்டாட்ட மனநிலையிலிருந்து உங்களுக்குப் புலப்பட்டது என்ன?

"அந்த அளவுக்கெல்லாம் ஆழ்ந்து சிந்திச்சுப் பார்க்கல. நடந்ததையெல்லாம் அசைபோட்டுப் பார்த்தா ஏதாவது தோணலாம்."

உங்களின் விடுதலைமீதான எதிர்ப்புகளுக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

"நாகரிக நாடுகள், ஜனநாயக நாடுகளில் கருத்துச் சுதந்திரம் என்பது இயல்பானதுதான். ஜனநாயகம் என்பது என்ன? ஒரு விஷயம் உண்மையோ, பொய்யோ, பெரும்பான்மை என்ன முடிவு செய்கிறதோ, அதைச் சிறுபான்மை ஏற்றுக்கொள்வது. அந்தவகையில், அவர்கள் பெரும்பான்மையாக இருந்த காலம் மாறி, தற்போது நாங்கள் பெரும்பான்மையாக உள்ளோம். இதில் கிடைத்த ஏமாற்றத்தை அவங்களால் ஏத்துக்க முடியல. எனவே அந்தக்கருத்துகளை, கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையிலும், அவர்களுக்கான மனோநிலை அவ்வளவுதான்னும் எடுத்துக்க வேண்டியதான்."

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

உங்களின் குடும்பம் செல்வச்செழிப்புப் பின்னணிகொண்டது, வழக்குக்காக நிறைய செல்வங்களை இழந்தீர்கள் எனக் கேள்விப்பட்டோமே?

"அப்படியெல்லாம் கிடையாது. கடவுள் சிலபேருக்கு சில கொடுப்பார், சில எடுப்பார். அந்தவகையில் பிரச்னை இல்லாத மிடில்கிளாஸ் குடும்பம்தானே தவிர, செல்வச்செழிப்பு என்பதெல்லாம் இல்லை. அதேசமயம் இழப்பைக் கணக்கிலெடுக்க முடியாது. அதுபற்றிப் பேசவும் விரும்பல. சிம்பிளாகச் சொல்லணும்னா துயரம் எனக்கானது, மகிழ்ச்சி உங்களுக்கானது. இதுவே போதும்."

உங்களின் விடுதலைக்காகக் குரல்கொடுத்த அரசியல் கட்சியினருக்கு நீங்கள் சொல்வது என்ன?

"நன்றி!"