Published:Updated:

''இரவெல்லாம் தூக்கமில்லை!" எதிர்க்கட்சிகள் அமளியால் கண்ணீர்விட்டு அழுத வெங்கைய நாயுடு!

வெங்கைய நாயுடு
வெங்கைய நாயுடு

நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு, நேற்று அரங்கேறிய சம்பவங்களால் தான் மிகவும் வேதனை அடைந்தாகக் கண்ணீர்மல்கத் தெரிவித்திருக்கிறார்.

``ஜனநாயகத்தின் கோயிலாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தில் இப்படியொரு சம்பவம் நடப்பது வேதனையளிக்கிறது. மாநிலங்களவையின் மாண்பைக் காப்பதிலிருந்து எம்.பி-க்கள் தவறிவிட்டனர். இதனால் நான் அடைந்த வேதனையை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகள் இல்லை. இரவெல்லாம் தூக்கம் இல்லை!" எனக் கண்ணீரோடு தெரிவித்திருக்கிறார் வெங்கைய நாயுடு.

கடந்த ஜூலை 19 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது. தொடக்கம் முதலே பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் குறித்தான பிரச்னைகள் போன்றவற்றை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அனைவரும் கடும் அமளியில் ஈடுபட்டுவந்தனர். உச்சபட்சமாக, நேற்றைய தினம் மாநிலங்களவைக் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மேசைகள் மீது ஏறியும், புத்தகங்கள், அறிக்கைகளைக் கிழித்து எறிந்தும் கடுமையாக நடந்துகொண்டனர்.

`டெல்லியில் பற்றவைத்த நெருப்பு’ - செந்தில் பாலாஜி டார்கெட்டான பின்னணி!
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்தநிலையில், இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு, நேற்று அரங்கேறிய சம்பவங்களால் தான் மிகவும் வேதனை அடைந்தாகக் கண்ணீர்மல்கத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர், ``நேற்று சில எம்.பி-க்கள் மேசையில் ஏறி நின்று போராட்டம் நடத்தினார்கள். இது போன்ற செயல்பாட்டால் நாடாளுமன்றத்தின் புனிதத்தன்மையே சிதைக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் கோயிலாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தில் இப்படியொரு சம்பவம் நடப்பது வேதனையைக் கொடுக்கிறது. மாநிலங்களவையின் மாண்பைக் காப்பதிலிருந்து எம்.பி-க்கள் தவறிவிட்டனர்" என்று குற்றம்சாட்டினார். மேலும் தொடர்ந்தவர், `` சட்ட மசோதாக்கள் குறித்து நீங்கள் உங்களின் எதிர்க் கருத்தைப் பதிவு செய்யலாம். இல்லையெனில், எதிர்த்து வாக்களிக்கலாம். ஆனால், `இதைத்தான் செய்ய வேண்டும், அதைத்தான் செய்ய வேண்டும்’ என அரசாங்கத்தை ஒருபோதும் கட்டாயப்படுத்தக் கூடாது. நேற்று நடந்த சம்பவத்தால் நான் அடைந்த வேதனையைச் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை. இரவெல்லாம் நான் தூங்கவில்லை" எனக் கண்ணீரோடு பேசியிருக்கிறார்.

வெங்கைய நாயுடு
வெங்கைய நாயுடு

நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டுவந்தனர். இதற்கு முன்னதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடுவை இன்று காலை உள்துறை அமைச்சர் அமித் ஷா, பியூஷ் கோயல், பா.ஜ.க எம்.பி-க்கள் ஆகியோர் சந்தித்துப் பேசியிருந்தனர். அதேபோல் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவையும் பிரதமர் மோடி, அமித் ஷா சந்தித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு