Published:Updated:

ராஜ்ய சபா தேர்தல்: 5 நட்சத்திர ஹோட்டலில் மகாராஷ்டிரா எம்.எல்.ஏ-க்கள்; பாடம் எடுக்கும் கட்சிகள்!

எம்.எல்.ஏ-க்கள் இடமாற்றம்

மகாராஷ்டிரா ராஜ்ய சபா தேர்தலுக்காக எம்.எல்.ஏ-க்கள் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ராஜ்ய சபா தேர்தல்: 5 நட்சத்திர ஹோட்டலில் மகாராஷ்டிரா எம்.எல்.ஏ-க்கள்; பாடம் எடுக்கும் கட்சிகள்!

மகாராஷ்டிரா ராஜ்ய சபா தேர்தலுக்காக எம்.எல்.ஏ-க்கள் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Published:Updated:
எம்.எல்.ஏ-க்கள் இடமாற்றம்

மகாராஷ்டிராவில் காலியாகும் ஆறு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு, வரும் 10-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதுவரை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எத்தனை காலியிடங்கள் இருக்கின்றனவோ அத்தனை வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டுவந்தனர். 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மகாராஷ்டிராவில் ராஜ்ய சபா தேர்தல் நடக்கிறது.

இந்தத் தேர்தலில் ஒருமித்த கருத்தை எட்ட சிவசேனா கூட்டணித் தலைவர்கள் பாஜக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்தத் தேர்தல் சிவசேனா மற்றும் பாஜக-வுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. சிவசேனா கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக பல முறை முயன்று தோல்வியைத் தழுவியது. எனவே இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம் தங்களது செல்வாக்கை நிரூபிக்க இரு கட்சிகளுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

எனவே, சுயேச்சை எம்.எம்.ஏ-க்கள், சிறிய கட்சி எம்.எல்.ஏ-க்கள் விலைபோய்விடக் கூடாது என்பதற்காக சிவசேனா தன் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களை மும்பை மலாடில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைத்திருந்தது. சிறிய கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு அவர்களது தொகுதிக்குத் தேவையான நிதி ஒதுக்குவதாக சிவசேனா கூட்டணி வாக்குறுதியளித்திருக்கிறது. சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் தொகுதிக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை என்ற புகார் நீண்ட நாள்களாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர ஹோட்டலுக்கு வரும் எம்.எல்.ஏ-க்கள்
நட்சத்திர ஹோட்டலுக்கு வரும் எம்.எல்.ஏ-க்கள்

அதோடு முதல்வரைச் சந்திக்க அனுமதிப்பதில்லை என்று சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இந்தப் பிரச்னைகள் உடனடியாகச் சரிசெய்யப்படும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. பா.ஜ.க சிறிய கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் அமலாக்கப் பிரிவு ரெய்டு நடத்தாமல் இருக்க வேண்டுமானால் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டல் தொனியில் கூறிவருகிறதாம். தற்போது சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் தென்மும்பையில் உள்ள டிரிடெண்ட் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

கடந்த வாரமே அனைத்து எம்.எல்.ஏ-க்களும் மும்பை வரும்படி சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கேட்டுக்கொண்டன. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வெஸ்ட் இன் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஹோட்டலில் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதோடு ராஜ்ய சபா தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று பாடமும் நடத்தப்பட்டுவருகிறது. வாக்குகள் செல்லாமல் போய்விடக் கூடாது என்பற்காக இந்தப் பாடம் நடத்தப்படுகிறதாம். பாஜக எம்.எல்.ஏ-க்கள் அருகிலுள்ள தாஜ் மஹால் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

ராஜ்ய சபா தேர்தலில் பாஜக-வால் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற ஒரு சூழ்நிலையில், கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது. ஒரு வேட்பாளர் வெற்றிபெற 42 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. பாஜக-வுக்கு 105 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். சிவசேனா இரண்டு வேட்பாளர்களையும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலா ஒரு வேட்பாளரையும் நிறுத்தியிருக்கின்றன. சிவசேனா கூட்டணியால் நான்கு இடங்களிலும் வெற்றிபெற முடியும் என்றாலும், எம்.எல்.-.க்கள் விலைபோய்விட்டால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. எனவேதான் சிவசேனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.எல்.ஏ-க்களை ஹோட்டலில் தங்கவைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism