Published:Updated:

சூடுபிடிக்கும் மாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க. - தி.மு.க வேட்பாளர்கள் யார்?

தி.மு.க, அ.தி.மு.க தலைவர்கள்
தி.மு.க, அ.தி.மு.க தலைவர்கள்

இரண்டு சீட் கட்சிக்கு, ஒரு சீட் `அன்பு'க்கு எனப் புதிய பார்முலாவை இரண்டு திராவிட கட்சிகளும் கையில் எடுத்துள்ளன.

தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கான தேர்தல், வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற எம்.எல்.ஏ-க்கள் பலத்தின் அடிப்படையில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள் தலா மூன்று எம்.பி-க்களை பிரித்துக்கொள்ள முடியும். மாநிலங்களவை எம்.பி-க்கான ரேஸ் இரண்டு கட்சிகளிலும் தொடங்கிவிட்டதுதான் அரசியல் 'ஹாட்'.

மாநிலங்களவை எம்.பி-க்களாக உள்ள முத்துகருப்பன், சசிகலா புஷ்பா, டி.கே.ரங்கராஜன், திருச்சி சிவா, ஏ.கே.செல்வராஜ், விஜிலா சத்யநாத் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. காலியாகவுள்ள இந்த ஆறு இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அட்டவணையைத்தான் தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அ.தி.மு.க, தி.மு.க இரண்டு கட்சிகளிலும் யார் யாரெல்லாம் எம்.பி பதவிக்கு முட்டி மோதுகிறார்கள்? விவரமறிய ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்துக்கும், அறிவாலயத்துக்கும் ரவுண்ட் அடித்தோம்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்
`யோசனை சொன்ன பிரஷாந்த்; நிராகரித்த ஸ்டாலின்!' -அறிவாலயத்தைத் தயார்படுத்தும் `மார்ச் அறிக்கை'

அ.தி.மு.க-வில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரது பெயர்கள் டாப் லிஸ்ட்டில் உள்ளன. மறைந்த அ.தி.மு.க நிர்வாகி பி.ஹெச்.பாண்டியனின் மூத்த மகன் அரவிந்த் பாண்டியன், முன்னாள் எம்.பி செளந்தரராஜன் ஆகியோரும் எம்.பி பதவிக்கு முட்டி மோதுகிறார்கள். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது, மத்திய சென்னை தொகுதிக்கு குறிவைத்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா காய் நகர்த்தினார். அப்போது இத்தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால், மாநிலங்களவை எம்.பி சீட் தருவதாகத் தலைமை உத்தரவாதம் அளித்திருந்தது. இப்போது அவரும் எம்.பி பதவிக்காக நெருக்கடி கொடுக்கிறார்.

(கடிகார சுற்றில்) 
ஏ.சி.சண்முகம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, அரவிந்த் பாண்டியன், செளந்தரராஜன்
(கடிகார சுற்றில்) ஏ.சி.சண்முகம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, அரவிந்த் பாண்டியன், செளந்தரராஜன்

இவர்கள் போக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரும் எம்.பி பதவிக்காக காய் நகர்த்துகின்றனர். இவர்களுக்கு எம்.பி பதவி தருவதாக எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்பதால், இவர்களின் கோரிக்கையைத் தலைமை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லையாம். ஆனால், புதிய நீதிகட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு, வேலூர் தொகுதியில் ஏகப்பட்ட பணம் செலவாகிவிட்டதைச் சொல்லி புலம்பியுள்ளார்.

"கடைசி நேரத்துல தேர்தல் ரத்தானதால ஏகப்பட்ட பணம் வேஸ்ட். மறுபடியும் தேர்தல் தேதி அறிவிச்சு, அதுலயும் தோற்றுப் போனதால ரொம்ப நொந்துபோயிட்டேன். 1984-89-க்குப் பிறகு நாடாளுமன்றத்துக்குள்ள நான் கால் வைக்கவே இல்ல. ஒருமுறையாவது எம்.பி-யாக போய்விடணும்னு ரொம்ப ஆசை" என்று உருக்கமாகப் பேசியுள்ளார். இதைவிட தலைமையை உருக வைத்த விஷயம், ஒரு எம்.பி சீட்டுக்காக கட்சிக்கு லம்பாக ஒரு நிதி ஒதுக்கவும் பேசியுள்ளாராம். அவர் கொடுத்த உறுதிமொழியில் அ.தி.மு.க வட்டாரம் ஆச்சர்யத்தில் அதிர்ந்து போய் இரண்டு சீட் கட்சிக்கு, ஒரு சீட் அவரின் `அன்புக்கு’ என அ.தி.மு.க தலைமையும் சிந்திக்க தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ
திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ

அப்படியே வண்டியை அறிவாலயம் பக்கம் திருப்பினோம். தி.மு.க கூட்டணியில் வைகோவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி ஒதுக்குவதற்கு முன்னரே, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவுக்கு ஒரு எம்.பி சீட் ஒதுக்கப்பட்டது. பிறகு, அந்த சீட் வைகோவுக்கு தூக்கிக் கொடுக்கப்பட்டது. அப்போதும்கூட மாற்று வேட்பாளராக என்.ஆர்.இளங்கோதான் முன்மொழியப்பட்டார். வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தனது வேட்புமனுவை இளங்கோ வாபஸ் பெற்றார். அப்போதே, ஏப்ரல் மாதம் காலியாகும் எம்.பி பொறுப்பில் ஒரு சீட் ஒதுக்குவதாக என்.ஆர்.இளங்கோவுக்குத் தலைமை உத்தரவாதம் அளித்திருந்ததாம்.

கூவத்தூர் ரிலீஸ்... ஸ்டாலின் சட்டை கிழிப்பு... பன்னீர் பவ்யம்... நான்காம் ஆண்டில் எடப்பாடி ஆட்சி!

இவர் போக, திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள். வன்னியர், முத்தரையர், நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் முட்டி மோதுவதால் அறிவாலயம் களை கட்டுகிறது. ஏற்கெனவே திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் சீட் கேட்டிருந்த தி.மு.க வர்த்தக அணி இணைச் செயலாளர் கிரஹாம் பெல்லும் இம்முறை மாநிலங்களவைக்கு சீட் கேட்கிறார். துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி சீட் கேட்டும் தலைமை பாராமுகம் காட்டுவதால், தற்போது கேட்பதையே நிறுத்திவிட்டாராம்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

அ.தி.மு.க பார்முலா போன்று, இரண்டு சீட்டை கட்சிக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள ஒரு சீட்டை `அன்பு' கோட்டாவுக்கு ஒதுக்கலாம் எனவும் பேச்சு அடிபடுகிறது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு தி.மு.க பிரமுகர் ஸ்டாலின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கம். `அன்பு' கோட்டா அடிப்படையில் இவருக்கு சீட் வழங்கப்படலாம் என தகவல்கள் கசிகின்றன. மார்ச் 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குவதால், அதற்கு முன்னதாகவே வேட்பாளர்களை அறிவிக்கவும் இரு திராவிடக் கட்சிகளும் தயாராகிறதாம்.

அடுத்த கட்டுரைக்கு