Published:Updated:

அ.தி.மு.க: `அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் வைத்திலிங்கம்!’ - உற்சாகத்தில் ஆதரவாளர்கள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் வைத்திலிங்கம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் வைத்திலிங்கம் ( ம.அரவிந்த் )

``எங்களைப் பொறுத்தவரை கொஞ்சம் அமைதியாக இருந்த வைத்திலிங்கம், தற்போது அடுத்த ராவுண்டுக்குத் தயாராகிவிட்டார்’’ என்கிறார்கள் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள்.

அ.தி.மு.க கட்சி தலைமை தமிழகம் முவதையும் 4 அல்லது 5 மண்டலங்களாகப் பிரித்து மண்டல செயலாளர் பதவிக்கு நிர்வாவிகளை அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் மத்திய மண்டலச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நியமிக்கப்பட இருப்பதாக எழுந்துள்ள பேச்சுகள் அவரின் ஆதரவாளர்களை உற்சாகமடைய வைத்துள்ளதாக தஞ்சாவூரில் அ.தி.மு.க-வினரால் பேசப்பட்டு வருகிறது.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் பல மாதங்களாக மன வருத்தத்தில் இருப்பதால், கட்சிப் பணிகளில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. இதனால், அவருடைய நெருங்கிய ஆதரவாளர்கள் சிலரே, `இவர் அமைதியாக இருப்பதால் தங்களால் கட்சிப் பணிகளை செய்ய முடியவில்லை கொரோனா லாக்டெளனில் செய்த நிவாரண பணிகளையும் வெளியே சொல்ல முடியவில்லை’ எனப் புலம்பி வந்தனர்.

அத்துடன் கட்சியில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு வளர்ச்சியடைவதற்கும், ஒப்பந்தப் பணிகள் உள்ளிட்டவற்றை பெறுவதற்கும் மற்ற மாவட்ட அமைச்சர்களைத் தேடி செல்வதுடன் அவர்களின் ஆதரவாளர்களாகவும் மாறி வருகின்றனர்.

முதல்வர் Vs வைத்திலிங்கம்... ஜல்லிக்கட்டு அறிக்கை Vs மல்லுக்கட்டும் அரசு! கழுகார் அப்டேட்ஸ்!

`சோழ மண்டலத் தளபதி என பெயரெடுத்த அண்ணன் வைத்திலிங்கம் ஏன் சுனக்கமாக இருக்கிறார்?’ என்பது அவருடைய நல விரும்பிகள் சிலருக்கே புரியாமல் தவித்து வந்ததாகத் தஞ்சை அ.தி.மு.க-வினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், வைத்திலிங்கம் விரைவில் மத்திய மண்டலச் செயலாளராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று வெளியாகியுள்ள தகவல் அவருடைய ஆதரவாளர்களை உற்சாகப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். ``அ.தி.மு.க வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலை வலுவோடு எதிர்கொள்ளும் வகையில் கட்சியினை பலப்படுத்துவதற்காக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகியோர் கட்சியில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றனர். அதன்படி, தமிழகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு ஒன்றியங்களும் பிரிக்கப்பட்டதுடன், அந்த பதவிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டும் வருகின்றனர்.

அ.தி.மு.க
அ.தி.மு.க

சிறிய ஒன்றியங்களாக இருந்தால் வடக்கு, தெற்கு என இரண்டாகவும், பெரிய ஒன்றியங்களை மூன்றாகவும் பிரித்துள்ளனர். இதேபோல் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்டம் என்கிற வகையில் பிரித்து அதற்கு மாவட்டச் செயலாலர் நியமிக்கும் பணியும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தமிழகம் முழுவதையும், வடக்கு, தெற்கு, மத்திய உள்ளிட்ட 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அதற்கு மண்டலச் செயலாளர்களையும் கட்சித் தலைமை நியமிக்க உள்ளனர்.

இதற்கான பணிகள் முடிந்து விட்ட நிலையில், மாவட்டச் செயலாளர் பதவியை பிரிப்பதில், ஒரு சில எதிர்ப்புகள் கிளம்பியதால் மண்டலச் செயலாளர் அறிவிப்பு தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. கட்சித் தலைமை கொரோனா பரவுதலைக் காரணம் காட்டி மண்டலங்கள் பிரிக்கப்பட்டதை இன்னும் அறிவிக்காமல் உள்ளது. இதில், மத்திய மண்டலச் செயலாளர் பதவி வைத்திலிங்கத்துக்கு வழங்க்கப்பட உள்ளது. அவர் விரைவில் மத்திய மண்டலச் செயலாளராகப் பொறுப்பேற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வரை சந்தித்த வினுபாலன்
முதல்வரை சந்தித்த வினுபாலன்

2016 சட்டமன்றத் தேர்தலில் வைத்திலிங்கம் தோல்வியடைந்த சில தினங்களிலேயே அப்போதைய முதல்வரான மறைந்த ஜெயலலிதா, அவருக்கு உடனடியாக ராஜ்யசபா எம்.பி பதவியை வழங்கினார். இது ஜெயலலிதாவிடம் வைத்திலிங்கம் விசுவாசமாக இருந்ததற்கு கிடைத்த பரிசு என்றே சொல்லலாம்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு,`நீங்கள் எல்லாம் அமைச்சர்களாக நல்ல பவரில் இருக்கிறீர்கள். நான் அமைச்சர் இல்லை என்பதால், தொகுதியில் எனக்கு சரியான மதிப்பு இல்லை. எனவே, தனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அழுத்தம் கொடுத்தார்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

ஆனால், ஓ.பி.எஸ், `என் மகன் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி-யாக ஆகியிருக்கிறான். அவனுக்கு மத்திய மமைச்சர் பதவி வேண்டும். பி.ஜே.பி அரசும், என் மகனுக்கு அமைச்சர் பதவி தர தயாராக இருக்கிறது’ எனக் கூறியுள்ளார். இரண்டு தரப்பும் முட்டி கொள்வதைப் பார்த்த பி.ஜே.பி, யாருக்கும் மத்திய அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. சரி பிரச்னையில்லாமல் இருந்தால் சரி என முதல்வரும் அதனைக் கண்டு கொள்ளவில்லை. அப்போது ஓ.பி.எஸ்ஸுக்கும் வைத்திலிங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பு இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்தநிலையில், `கட்சியில் ஐவர் குழுவில் இருக்கும் தனக்கு எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் உரிய முக்கியத்துவத்தை தருவதில்லை. கிட்டத்தட்ட 10 எம்.எல்.ஏ-க்களுக்கும் மேல் தன் கையில் வைத்துக் கொண்டு ஆட்சி நிலைப்பதற்கு பெரும் காரணமாக இருந்த என்னையே கறிவேப்பிலைபோல் தூக்கி எறிகின்றனரே?’ என்ற கோபம் அவருக்கு ஏற்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

அதேநேரத்தில் மத்திய மண்டலம், தன் பவருக்குள் இருக்க வேண்டும் என நினைத்ததுடன், அதற்கான செயல்களிலும் இறங்கினார். கோவை மண்டல ஐ.டி விங் பிரிவு எனச் சொல்லப்படுகிற தகவல் தொழில்நுட்பப் பிரிவில் திருச்சி மண்டலமும் இருந்தது. இது அமைச்சர் வேலுமணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் சிலர் இதனை நேரடியாகவே எதிர்த்து வந்தனர்.

45,000 பேர் நியமனம்... 25,000 ஸ்மார்ட் போன்கள்! - உற்சாகத்தில் அ.தி.மு.க ஐ.டி விங்

இதுகுறித்து முதல்வரிடம் முறையிட்ட வைத்திலிங்கம், திருச்சி மண்டல தலைமையில் தனியாக தகவல் தொழில்நுட்பப் பிரிவை பிரிக்க வைத்தார். இதற்கு பல அமைச்சர்களின் வாரிசுகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் போட்டிபோட்ட நிலையில் வைத்திலிங்கம் கட்சியில் தன்னுடைய அரசியல் வாரிசாக வளர்த்து வரும் வினுபாலன் என்ற இளைஞரை மத்திய மண்டலத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளர் பதவியில் நியமனம் செய்ய வைத்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ம.அரவிந்த்

இதேபோல் தமிழகம் முழுவது 5 மண்டலங்களாகப் பிரித்து தலைமை அறிவிக்க இருக்கிறது. இதில், மத்திய மண்டல செயலாளராக வைத்திலிங்கம் பொறுப்பேற்க உள்ளார். தலைமையின் செயல்பாட்டில் அதிருப்தியிலிருந்த வைத்திலிங்கம், தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், சோழ மண்டலம் என அழைக்கப்படுகிற மத்திய மண்டலம் தன் கட்டுப் பாட்டுக்குள் இருக்க வேண்டும் என நினைத்து செயல்பட தொடங்கி விட்டார். மீண்டும் பழையபடி களத்தில் இறங்கி, கட்சிப் பணிகளை செய்யத் தயாராகி வருகிறார்’’ என்று தெரிவித்தனர்.

வைத்திலிங்கம் ஆதரவாளர்களிடம் பேசினோம். ``கொரோனா பரவத் தொடங்கியதை அடுத்தே வெளி நிகழ்ச்சிகளுக்கு வருவதை வைத்திலிங்கம் தவிர்த்துக் கொண்டுள்ளார். கட்சிப் பணிகளை எந்தவிதத்திலும் எப்போதும் அவர் குறைத்துக்கொண்டதே இல்லை. தலைமை இவரைக் கண்டுகொள்வதில்லை எனச் சொல்வதும் தவறு.

`சறுக்கிய ஆல் இன் ஆல்; வருத்தத்தில் வைத்திலிங்கம்!' - புலம்பும் தஞ்சை அ.தி.மு.கவினர்

ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டபோதும் அதற்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட பணிகளிலும், தலைமை வைத்திலிங்கத்தின் ஆலோசனையையும் கேட்டே செயல்படுத்தியது. எங்களைப் பொறுத்தவரை கொஞ்சம் அமைதியாக இருந்த வைத்திலிங்கம், தற்போது அடுத்த ரவுண்டுக்குத் தயாராகிவிட்டார்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு