Published:Updated:

`எதிர்ப்பு கருத்துகள் நீக்கப்பட்டதா?!'- தி.மு.க-வை பதறவைக்கும் ராமதாஸின் `வீரபாண்டியார்' ஆயுதம்

வீரபாண்டி ஆறுமுகம்
வீரபாண்டி ஆறுமுகம்

2012-ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தமக்கு எதிராக ஸ்டாலின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை குறித்தும் வாழ்க்கை வரலாற்று நூலில் வீரபாண்டி ஆறுமுகம் விரிவாகப் பதிவு செய்திருந்தார்.

முரசொலி நில விவகாரம் தொடர்பாக ராமதாஸ் பதிவிட்ட ட்வீட்டுகள், அரசியல் வட்டாரத்தில் அனல்பரப்பி வரும் சூழலில், வீரபாண்டி ஆறுமுகம் தொடர்பாக அடுத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.

ராமதாஸ்
ராமதாஸ்

``பஞ்சமி நிலம், மூலப்பத்திரம், முரசொலி என இந்தப் பெயர்கள் தமிழக அரசியல் களத்தில் விவாதத்திற்குரிய பொருளாக மாறியிருக்கிறது. இந்தச் சூழலில், `வீரபாண்டி ஆறுமுகத்தை ஒதுக்கியவர் இந்த ஸ்டாலின்' என்று முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் ராமதாஸ்.

அதில், `சேலத்துச் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் எழுதிய `திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்’’ என்ற தலைப்பிலான அவரது வாழ்க்கை வரலாற்று நூலைக் கடந்த 17.11.2019 அன்று நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதில் மாவட்டச் செயலாளரும் அமைச்சர்களும் இந்த நிகழ்ச்சியில் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாற்று நூல் 7 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரது ஏழாவது நினைவுநாள் வரும் 23-ம் தேதி கடைப்பிடிக்கப்படவிருக்கும் நிலையில், மிகவும் தாமதமாக இப்போதுதான் வெளியிடப்படுகிறது.

7 ஆண்டுகள் தாமதம் ஆனாலும், வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாறு நூல் வெளிவருவதற்கு யாரெல்லாம் முட்டுக்கட்டை போட்டார்களோ, அவர்களாலேயே இப்போது அந்த நூல் வெளியிடப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. ஆனால், 7 ஆண்டுகளுக்கு முன் சிங்கத்தின் சீற்றத்துடன் எழுதப்பட்டிருந்த அந்த நூல், இப்போது வீரபாண்டியாரின் அடையாளங்கள் எதுவும் இல்லாத மிகச் சாதாரண நூலாக வெளியிடப்பட்டிருப்பதுதான் மிகவும் வருத்தமளிக்கிறது.

கருணாநிதி
கருணாநிதி

வீரபாண்டி ஆறுமுகம் அவரது வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியது எனக்குத் தொடக்கத்திலிருந்தே தெரியும். அவருக்கு அப்படியொரு எண்ணம் ஏற்படுவதற்குக் காரணமே 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் அவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதைதான். தி.மு.க-வில் ஸ்டாலினின் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்கத் தாம் புறக்கணிக்கப்படுவதாக அவர் உணர்ந்தார். இதனால் அழகிரியுடன் நெருக்கம் காட்டத் தொடங்கினார். அத்தகைய சூழலில்தான் 2012-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

``கலைஞர் இருக்கும்போது அடுத்த தலைவர் தேவையில்லை. கலைஞரின் பிள்ளைகளான மு.க.அழகிரியும் மு.க.ஸ்டாலினும் நமக்கு ஒன்றுதான். சிலர் கலைஞரை தங்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்க நிர்பந்திக்கின்றனர். ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதை நாம் அனுமதிக்கக் கூடாது’’ என்று ஸ்டாலினை முன்னிறுத்துவதற்கு வீரபாண்டி ஆறுமுகம் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் ஆத்திரமடைந்த ஸ்டாலின் ஆதரவாளர்கள் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். அங்கு நடந்த அநாகரிகமான நிகழ்வுகளைக் கண்டு கலைஞர் கண்ணீர் வடித்தார். அதுமட்டுமின்றி, அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளைக் கண்டித்த அவர், பேச மறுத்துவிட்டார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அப்போது ஏற்பட்ட காயத்துக்குப் பிறகுதான், அரசியலிலிருந்து ஒதுங்கத் தொடங்கிய வீரபாண்டியார், தமது வாழ்க்கை வரலாற்று நூலை எழுதத் தொடங்கினார். நூலின் பெரும்பகுதியைப் பெங்களூரில் உள்ள விடுதியில் அறை எடுத்துத் தங்கித்தான் வீரபாண்டியார் எழுதினார். பல அத்தியாயங்கள் பெங்களூரில்தான் எழுதப்பட்டன. ஒரு சில அத்தியாயங்கள் மட்டும்தான் பூலாவரியில் உள்ள அவரது வீட்டில் எழுதப்பட்டன. அவரது உதவியாளர்களில் ஒருவர்தான் இதற்கு உதவியாக இருந்தார்.

அண்ணா காலத்திலேயே வீரபாண்டியார் அரசியலுக்கு வந்த போதிலும், கலைஞரைத்தான் தமது வாழ்நாள் முழுவதும் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால், தமது அரசியல் வளர்ச்சி பிடிக்காமல் அதற்கு முடிவு கட்ட 1977-78-ம் ஆண்டிலேயே கலைஞர் முயற்சி செய்ததாக வீரபாண்டியாருக்கு வருத்தம் உண்டு. அதுகுறித்து இந்த நூலில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி.ஆர்
நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி.ஆர்

1957-ம் ஆண்டில் தி.மு.க-வுக்கு வந்த வீரபாண்டியார் அடுத்த 5 ஆண்டுகளில் தி.மு.க சந்தித்த இரண்டாவது பொதுத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன்பின் அடுத்தடுத்து 1967, 1971 ஆகிய தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். அந்த 3 தேர்தல்களிலும் வீரபாண்டி தொகுதியில் பதிவான வாக்குகளில் மூன்றில் இரு பங்கு வாக்குகளை ஆறுமுகம்தான் பெற்றார். இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளர்களால் இவரை நெருங்கிக்கூட வர முடியவில்லை. இதனால் சேலம் மாவட்டத்தில் அசைக்க முடியாத தலைவராக வீரபாண்டியார் உருவெடுத்தார்.

1977-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட்டால், தி.மு.க ஆட்சிக்குவரும் பட்சத்தில் ஆறுமுகத்துக்கு அமைச்சர் பதவி தர வேண்டியிருக்கும்; அதன்பின் அவரது வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது என்று கலைஞர் கருதினாராம். அதனால் 1977-ம் ஆண்டு தேர்தலில் அவருக்கு வாய்ப்பளிக்கக் கலைஞர் மறுத்துவிட்டாராம். அதுபற்றி வீரபாண்டியார் ஆவேசமாகக் கேட்டதற்கு, உனக்கு அடுத்து வரும் மேலவைத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் என்று கூறினாராம். வீரபாண்டியாரும் சமாதானம் அடைய, அந்தத் தேர்தலில் தி.மு.க தோற்றது.

வீரபாண்டி ஆறுமுகம்
வீரபாண்டி ஆறுமுகம்

1978-ம் ஆண்டில் சட்ட மேலவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் வீரபாண்டியாரின் பெயர் இல்லை. கலைஞரை அவர் நேரில் சந்தித்து முறையிட்டாராம். அப்போது, ஏதேதோ கூறிய கலைஞர், `இப்போது முடியாது; அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்' என்று கூறிவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த வீரபாண்டியார், கலைஞரிடம் கடுமையாகச் சண்டையிட்டாராம்; அதன்பிறகுதான் கலைஞர் வீரபாண்டியாருக்கும் வேண்டா வெறுப்பாக வாய்ப்பளித்தாராம். தமது அரசியல் எதிர்காலத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கலைஞர் அவ்வாறெல்லாம் செய்தார் என்பது வீரபாண்டியாரின் வருத்தம் ஆகும்.

வேறு சில தருணங்களிலும் கலைஞர் தம்மைக் கைவிட்டதாக வீரபாண்டியாருக்கு வருத்தம் உண்டு. அந்த வருத்தங்களையெல்லாம் தமது வாழ்க்கை வரலாற்று நூலின் ஓர் அத்தியாயமாகப் பதிவு செய்திருந்தார் வீரபாண்டியார். இந்தத் தகவல்களை ஒரு கட்டத்தில் என்னிடமும் அவர் பகிர்ந்து கொண்டிருந்தார். வீரபாண்டியார் உயிருடன் இருந்து அவரது வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டிருந்தால், இந்த விஷயம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும். ஆனால், இப்போது இந்தத் தகவல்கள் அடங்கிய அத்தியாயமே புத்தகத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது.

ராமதாஸ்
ராமதாஸ்

சேலம் மாவட்டத்தில் தமக்குக்கீழ் பணி செய்த ஒருவர் துரோகம் செய்ததால் அவரை வீரபாண்டியார் விரட்டியடித்துள்ளார். அப்படிப்பட்டவரையே தமக்கு எதிராகச் சேலம் மாவட்டத்தில் அரசியல் செய்ய வைத்து ஸ்டாலின் அவமதித்தார் என்ற தமது வருத்தத்தையும் அந்த நூலில் வீரபாண்டியார் விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பகுதியும் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் நூலில் இல்லை.

2012-ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தமக்கு எதிராக ஸ்டாலின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை குறித்தும் வாழ்க்கை வரலாற்று நூலில் வீரபாண்டியார் விரிவாகப் பதிவு செய்திருந்தார். இதுகுறித்த விவரங்களையும் ஒரு தருணத்தில் அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டிருந்தார். ஆனால், இந்த விவரங்களும் வீரபாண்டியாரின் நூலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞர்
கலைஞர்

சுயசரிதைப் புத்தகத்துக்கு இறுதி வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கும்போதுதான் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தும் பயனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது மறைவுக்குப் பிறகு அந்த நூலை வெளியிடுவதற்காக முயற்சிகளில் அவரின் மகன் வீரபாண்டி ராஜா முயன்றார். ஆனால், அதில் மு.க.ஸ்டாலின் பற்றிய விமர்சனங்கள் இடம் பெற்றிருப்பதை அறிந்த தி.மு.க தலைமை அந்தப் புத்தகத்தை வெளியிடக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது. இதுகுறித்து மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போதே நான் குற்றம்சாட்டியிருக்கிறேன்.

இப்போதும் வீரபாண்டியார் மீதான அன்பு காரணமாக இந்த நூல் வெளியிடப்படவில்லை. அந்த நூலின் மூலப்பிரதி கடந்த 7 ஆண்டுகளாக வீரபாண்டியாரின் உதவியாளரான செங்கோட்டையன் என்பவர் வீட்டில்தான் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. இப்போது வேறு சில நெருக்கடிகள் காரணமாகத்தான், தி.மு.க தலைமை மீதான சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டு, இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. வீரபாண்டியார் எழுதிய கருத்துகள் அனைத்தும் இடம் பெற்றிருந்தால் இந்த நூல் சிங்கத்தின் வரலாறாக இருந்திருக்கும். ஆனால், அந்த நூலிலிருந்த பல முக்கிய கருத்துகள் இப்போது சிதைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அந்த நூல் அதற்குரிய மதிப்பை இழந்துவிட்டது என்பதே உண்மை" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இச்சம்பவம் குறித்து தி.மு.க முக்கியப் புள்ளிகளிடம் பேசினோம். ``தி.மு.க தலைவர் கலைஞருக்கே சவால்விடும் அளவுக்கு வளர்ந்தவர் வீரபாண்டியார். இதில் எந்த மாற்றமில்லை. ராமதாஸ் சொல்லும் செய்தியில் உண்மை இருக்கலாம். ஆனால், எங்களால் பொது வெளியில் பேசமுடியாது. அப்படிப் பேசினால் எங்கள் பதவிகளுக்குத்தான் ஆபத்து" என்றனர்.

மேலும், ``இது தொடர்பாக எங்களிடம் பேசுவதைவிட வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனான ராஜாவிடம் பேசுங்கள். அவர் பேசுவார். அவரும் தற்போது பேசுவாரா என்று தெரியவில்லை. காரணம் அவரது பதவி பறிக்கப்பட்டிருக்கிறது" என்றனர்.

ராஜா
ராஜா

வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவிடம் தகவலைச் சொல்லிப் பேசினோம். முழுமையாகக் கேட்டுக்கொண்டவர், ``கொஞ்சம் நேரம் கழித்துப் பேசுங்கள்" என்றதோடு போனைத் துண்டித்தார். அதன் பிறகு பலமுறை முயற்சி செய்தும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

பின் செல்ல