Published:Updated:

`ஈரேழு லோகத்திலும் ஒரே கம்பெனின்னா, அது நம்ம முரசொலிதான்!'- ஸ்டாலினை மீண்டும் சீண்டிய ராமதாஸ்

ராமதாஸ், ஸ்டாலின்
ராமதாஸ், ஸ்டாலின்

`அந்த நிலத்தை முறையாக நில உரிமையாளர்களிடமிருந்து, அஞ்சுகம் பதிப்பகம் வாங்கியுள்ளது. அஞ்சுகம் பதிப்பகம் பெயருக்குப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.'

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு மத்தியில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த `அசுரன்' படத்தைப் பார்த்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். படத்தைப் பார்த்ததோடு நிற்காமல் பஞ்சமி நிலம் தொடர்பாகப் படம் பேசியதைப் பாராட்டி ட்வீட்டும் செய்தார். இதைத் தொடர்ந்து பா.ம.க தலைவர் ராமதாஸ், `முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம். உடனடியாக ஸ்டாலின் உரியவர்களிடம் இடத்தை ஒப்படைக்க வேண்டும்’ எனக் கொளுத்திபோட பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

முரசொலி நாளேடு
முரசொலி நாளேடு

இதுதொடர்பாக, ராமதாஸுக்குப் பதில் அளித்த ஸ்டாலின், `முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பட்டா இடம்' என்றும் அதற்கான ஆதாரமாகச் சில அரசு ஆவணங்களையும் வெளியிட்டார். ஆனால் ராமதாஸ், `வெளியிட வேண்டியது மூலப் பத்திரம். அதை ஏன் வெளியிடவில்லை’ எனக் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், `முரசொலி அலுவலக இடத்தை மீட்டு உரியவர்களிடம் வழங்க வேண்டும்' என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பா.ஜ.க சார்பாக புகார் அளிக்கப்பட்டது.

``அப்போதைய சூழல்... அப்படி பேசியிருக்கலாம்..!” - முரசொலி நில விவகாரத்தில் வைகோ

இந்த விவகாரத்தில் ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஸ்டாலின் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி தி.மு.க சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கின் விசாரணையில், ``இந்த இடம் அஞ்சுகம் பதிப்பகத்துக்குச் சொந்தமானது. அதில், முரசொலி அறக்கட்டளை வாடகைக்குதான் இயங்கி வருகிறது. அந்த நிலத்தை முறையாக நில உரிமையாளர்களிடமிருந்து அஞ்சுகம் பதிப்பகம் வாங்கியுள்ளது. அஞ்சுகம் பதிப்பகம் பெயருக்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதுதொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தற்போது ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார். அதில், `முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறதாமே.... அப்படியானால், அந்தப் பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா?. அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன.

``முரசொலி அலுவலகம் மட்டுமல்ல; எல்.ஐ.சி பில்டிங்கூட பஞ்சமி நிலம்தான்.. நிரூபிக்கவா?”-'தடா' பெரியசாமி

ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி... முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீரவசனம் பேசிவிட்டு, இப்போது நாங்களே வாடகைக்குதான் இருக்கிறோம் என்று சரணடைந்ததுதான்?

ராமதாஸ்
ராமதாஸ்

முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டடத்தில்தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா. மூலப் பத்திரத்தைத்தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா.. கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா.. அகில இந்தியாவில் மட்டுமல்ல.... ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டடத்தில் இருந்து கொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி.... நம்ம முரசொலி கம்பெனிதான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது" எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

பின் செல்ல