Published:Updated:

``என்னை விமர்சனம் செய்பவர்கள் கங்காணிகள்..!” - குரு மணிமண்டபம் திறப்பு விழாவில் கொதித்த ராமதாஸ்

``குரு இல்லாததது பா.ம.க-வுக்குப் பேரிழப்பு. எனது மூத்தமகனான குரு இருந்திருந்தால் வன்னியர் சங்கம் எப்படி இருந்திருக்கும் தெரியுமா..?”

Ramdoss
Ramdoss

``தமிழ்நாட்டை பா.ம.க ஆண்டுவிடக் கூடாது என்பதற்காக என்னை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். என்னை விமர்சிப்பவர்கள் துரோகிகள், கங்காணிகள்'' என்று தி.மு.க-வையும், வேல்முருகனையும் கடுமையாக விமர்சனம் செய்தார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

மணிமண்டபம் திறப்பு
மணிமண்டபம் திறப்பு

வன்னியர் சங்கத் தலைவராகவும் பா.ம.க-வில் முன்னணித் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் காடுவெட்டி குரு. உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

குருவின் மரணம் குறித்துப் பேசிய மருத்துவர் ராமதாஸ், ``எனது மூத்த மகனாக நினைத்த குருவின் குடும்பத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை நானும் எனது கட்சியும் செய்யும்’’ என்று அறிவித்திருந்தார். இந்தநிலையில், கட்சி நிதியிலிருந்து குருவுக்கு அவரது சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்தில் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை மருத்துவர் ராமதாஸ், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொண்டர்கள் கூட்டம்
தொண்டர்கள் கூட்டம்

இந்த நிகழ்ச்சியில் குருவின் மகன் கனலரசன் கலந்துகொண்டார். மண்டபத்தைத் திறந்து வைத்துவிட்டுப் பேசத் தொடங்கினார் ராமதாஸ். ``குரு இல்லாததது பா.ம.க-வுக்குப் பேரிழப்பு. எனது மூத்தமகனான குரு இருந்திருந்தால் வன்னியர் சங்கம் எப்படி இருந்திருக்கும் தெரியுமா.. இந்த இயக்கத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றிருப்பார்.

நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் அவர் வைத்திருப்பார். ஆனால், அவர் இல்லாததை தெரிந்துகொண்ட சிலர் தொண்டர்களை மாற்றுக்கட்சிகளுக்கு இழுக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இது அசிங்கமாக இல்லையா.. குரு கடந்து வந்த பாதைகளை தத்ரூபமாக மணிமண்டபத்தில் வடிவமைத்திருக்கிறார்கள். அவசியம் இம்மணிமண்டபத்தைப் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை. அத்தோடு நாங்கள் நாட்டை ஆண்டுவிடக் கூடாது என்பதற்காக என்னை ஒருசிலர் இணையதளத்தில் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மணிமண்டபம்
மணிமண்டபம்

அதற்கெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை. என்னை விமர்சனம் செய்பவர்கள் கங்காணிகள். அவர்களை நாம் கண்டுகொள்ள வேண்டாம். அவர்களுக்குப் பதில் கொடுக்கவேண்டிய அவசியமும் இல்லை. குருவை அழிக்க நினைத்த கொடிய சக்தி தி.மு.க” எனக் கொதித்தவர்,

``இந்த மேடையில் பேசிய டாக்டர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கம் மாநாடு நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை நான் ஏற்றுக்கொண்டு பூம்புகாரில் நடத்தலாம் என்று முடிவுசெய்து அறிவிப்பை வெளியிடுகிறேன்.

அதேபோன்று எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நம் கட்சியினர் விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என்று நான் முன்னரே கோரிக்கை வைத்திருந்தேன். இருப்பினும் தற்போது உங்களிடத்தில் மீண்டும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அதேபோன்று சுவர் விளம்பரமும் எழுதக் கூடாது என்று நம் கட்சி சார்பில் பொதுநல வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம்.

ராமதாஸ்
ராமதாஸ்

காடுவெட்டி கிராமத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளைச் செய்வதற்கு அன்புமணி ஏற்பாடு செய்வார்” என்றார்.

நிகழ்ச்சியில் பா.ம.க தலைவர் ஜி.கே. மணி, தமிழக அரசின் தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அ.தி.மு.க எம்.எல்.ஏ குன்னம் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்