Published:Updated:

பா.ஜ.க-வில் இணைந்த காங்கிரஸ் `கடத்தல்' புள்ளி! -அதிர்ச்சியில் தொண்டர்கள்

`குட்லக்' ராஜேந்திரன்
`குட்லக்' ராஜேந்திரன்

திருவாடானையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது ஆதரவாளர்கள் சிலருடன் `குட்லக்' ராஜேந்திரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பி.ஜே.பி -யில் சேர்ந்தார்.

காங்கிரஸ் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் தலைவர் `குட்லக்' ராஜேந்திரன், பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முன்னிலையில் பி.ஜே.பி-யில் இணைந்தார். தங்கக் கட்டி கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபர் பி.ஜே.பி-யில் சேர்ந்தது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பி.ஜே.பி -யில் இணைந்த குட்லக் ராஜேந்திரன்
பி.ஜே.பி -யில் இணைந்த குட்லக் ராஜேந்திரன்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்தவர் `குட்லக்' ராஜேந்திரன். காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளர் இவர். திருநாவுக்கரசர் எந்தக் கட்சியில் இருக்கிறாறோ அந்தக் கட்சியில் `குட்லக்' ராஜேந்திரனும் இருப்பார். அந்த அளவுக்கு திருநாவுக்கரசருக்கு நெருக்கமாக இருந்து வந்தவர். இதன் பயனாக மாநில காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் இருந்தபோது, ராஜேந்திரனை ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமித்தார். மேலும், திருவாடானை ஒன்றியப் பெருந்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் புதுக்கோட்டை அருகே சுமார் 12 கிலோ கடத்தல் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, `குட்லக்' ராஜேந்திரன் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இதன்பின்னரும் திருநாவுக்கரசரின் ஆதரவாளராக இருந்து வந்த ராஜேந்திரன், மாவட்டத்தில் திருநாவுக்கரசர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் மேடையில் இடம்பிடித்து வந்தார். கடந்த ஆண்டு ராமநாதபுரத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் தற்போதைய மாவட்ட தலைவர் தேவேந்திரன் மீது குற்றம் சுமத்தும் வகையில் ராஜேந்திரன் பேசினார். இதனால் திருநாவுக்கரசர் முன்னிலையிலேயே இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இதன் பின்னர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார்.

உறுப்பினர் அட்டை வழங்கும் ஹெச்.ராஜா
உறுப்பினர் அட்டை வழங்கும் ஹெச்.ராஜா

இந்த நிலையில் இன்று திருவாடானையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது ஆதரவாளர்கள் சிலருடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பி.ஜே.பி-யில் சேர்ந்தார். பி.ஜே.பி மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நடந்த இந்த விழாவில் மாநில துணைத் தலைவர் குப்புராமு முன்னிலை வகித்தார். பி.ஜே.பி தேசிய செயலாளர் ஹெச். ராஜா, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குட்லக் ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பி.ஜே.பி உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். தங்கக் கட்டி கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபர் தங்கள் கட்சியில் சேர்ந்தது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு