ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் முன் தி.மு.க சார்பில் நீர்,மோர்ப் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் நகர் மன்றத் தலைவர் கார்மேகம் தலைமைத் தாங்கினார். மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், ராமநாதபுரம் எம்.எல்.ஏ-வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு நீர், மோர்ப் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணிகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,
``தமிழக முதலமைச்சர் எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், தி.மு.க நிர்வாகிகளிடம் கோடை வெயில் தாக்கத்தில் தவிக்கும் பொதுமக்களைக் காக்கும் விதமாக ஆங்காங்கே நீர்,மோர்ப் பந்தல் மற்றும் பழங்களை வழங்கச் சொல்லியிருக்கிறார்.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம் முன் நீர், மோர்ப் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராமநாதபுரத்தில் 143 இடங்களில் நீர், மோர்ப் பந்தல் திறக்கப்பட உள்ளது" என்று கூறினார்.
`வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக அளித்த புகாரின் பின்னணியில் நீங்கள் இருப்பதாக உங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரே சமூக வலைதளங்களில் எதிர்ப்பு பிரசாரம் செய்து வருகிறார்களே' என எம்.எல்.ஏ-விடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், ``சமூக வலைதளத்தில் பரவுவது பொய்யான குற்றச்சாட்டு, அதைப் பரப்புபவர்கள் அரசியல் விரோதிகள் எனச் சொல்லமுடியாது. அவர்கள் சமூக விரோதிகள். மாவட்டப் பொறுப்பாளர் என்ற முறையில் மக்கள் பணியை மட்டும் மேலோங்கி செய்துவரும் சாதாரண தொண்டன் நான்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`உட்கட்சிப் பூசல் காரணமாகத்தான் அமைச்சர் பதவி மாற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகி வருகிறதே?' எனக் கேட்டதற்கு,
``தவறான தகவல், ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் உட்கட்சி பூசல் கிடையாது. உதாரணத்துக்கு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைமையின் சார்பில் தேர்தலை களம் கண்டோம். இதுவரை வரலாறு காணாத வெற்றியை ராமநாதபுரம் மாவட்டம் பெற்றிருக்கிறது. நான்கு நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகளையும் கைப்பற்றியுள்ளோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலிலும் நூறு சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது, உள்ளாட்சித் தேர்தலிலும் நூறு சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது. இங்கு உட்கட்சிப் பூசல் கிடையாது. அனைவரும் ஒருமித்த கருத்துடன் முதல்வர் ஆணைக்கு அடிபணிந்து மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்" எனக் கூறினார்.