Published:Updated:

``தமிழக அரசு இடம் கொடுத்தால் நவோதயா பள்ளிகள்!''- மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால்

மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால்
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் ( உ.பாண்டி )

தமிழக அரசு இடம் கொடுத்தால் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் விரைவில் தொடங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் நிசான் பொக்கிரியால் தெரிவித்தார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் நிசான் பொக்கிரியால் ராமேஸ்வரத்திற்குக் குடும்பத்துடன் வந்திருந்தார். ராமேஸ்வரம் வருகை தந்த அமைச்சரை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் வரவேற்றார். பின்னர், அமைச்சர் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்குச் சென்று வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்.

 நவோதயா பள்ளிகள் குறித்து மத்திய அமைச்சர் தகவல்
நவோதயா பள்ளிகள் குறித்து மத்திய அமைச்சர் தகவல்
உ.பாண்டி

இதன்பின்னர் ராமேஸ்வரத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி கட்டுவதற்காக நிலம் வாங்கப்பட்ட நிலையில் அங்கு கட்டடம் கட்டப்படாமல் பல ஆண்டுகளாக அப்பணி கிடப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அமைச்சரிடம் எடுத்துரைத்தார். இதையடுத்து அந்த இடத்தினை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் உடனடியாக அந்த இடத்தில் பள்ளிக் கட்டடம் கட்ட கேந்திர வித்யாலயா ஆணையருக்குத் தொலைபேசி வாயிலாக உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மண்டபத்தில் இயங்கி வரும் கேந்திர வித்யாலயா பள்ளிக்குச் சென்று அங்கிருந்த மாணவ-மாணவிகளிடம் இந்தியில் உரையாடினார். அங்கு மாணவர்களிடம் கேள்விகள் கேட்டபோது மாணவிகளும் இந்தியில் பதில் கூறினர். இங்குள்ள பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்ட அமைச்சரிடம் கோரிக்கை விடப்பட்டது. கூடுதல் கட்டடம் கட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால்
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால்
உ.பாண்டி

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொக்கிரியால், ``அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றக்கூடிய வகையிலும், முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியின் முயற்சியாலும் ராமேஸ்வரத்தில் ஆரம்பிக்கப்பட்ட கேந்திர வித்யாலயா பள்ளிக்கு உடனடியாக வாங்கப்பட்ட இடத்தில் கட்டடம் கட்ட அப்பள்ளியின் இயக்குநருக்கு ஆணையிட்டுள்ளேன். விரைவில் பள்ளிக் கட்டடம் கட்டப்படும். அந்தப் பள்ளிக் கட்டடத்தின் திறப்பு விழாவிற்கு நானே நேரில் வருவேன். தமிழக அரசு நவோதயா பள்ளிகள் அமைக்க இடம் வழங்கினால் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும்'' என்றார். அமைச்சருடன் பா.ஜ.க மாவட்ட தலைவர் கே.முரளிதரன் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்

அடுத்த கட்டுரைக்கு