Published:Updated:

``எனக்குக் கவலைதான் பிறந்தது - ராணி அண்ணாதுரை பேட்டி!

Annadurai.C.N., Rani Annadurai
பிரீமியம் ஸ்டோரி
Annadurai.C.N., Rani Annadurai

ஒரு முதல்வரின் மனைவியோட மனநிலை இப்படிதான் இருக்குமோ!!!

``எனக்குக் கவலைதான் பிறந்தது - ராணி அண்ணாதுரை பேட்டி!

ஒரு முதல்வரின் மனைவியோட மனநிலை இப்படிதான் இருக்குமோ!!!

Published:Updated:
Annadurai.C.N., Rani Annadurai
பிரீமியம் ஸ்டோரி
Annadurai.C.N., Rani Annadurai

நுங்கம்பாக்கம் அவின்யூ ரோடில் உள்ள முதலமைச்சர் அண்ணாதுரை அவர்களின் வீடு. 'அண்ணா கண்ணுக்குத் தெரிவாரா' என்று தெருவிலிருந்து சில இளைஞர்கள் வீட்டை எட்டிப் பார்த்தபடி நிற்கிறார்கள். முதலமைச்சரின் பேரன் 'மலர்', குட்டி சைக்கிளில் ஏறி, ரவுண்டடித்துக் கொண்டிருக்கிறான்.

வீட்டில் நுழைந்தவுடன் உள்ள ஹாலைத் தாண்டி, மாடிப் படிகளைக் கடந்து மேலே செல்கிறோம். மாடியிலும் ஒரு ஹால் இருக்கிறது. அங்கே...முதலமைச்சரின் துணைவியாரான திருமதி ராணி அண்ணாதுரை அவர்கள், மும்முரமான வேலையில் ஈடுபட் டிருப்பதைப் பார்க்கிறோம். நாற்காலிகளை ஒழுங்குபடுத்துகிறார்; டெலிபோன் தூசியைத் தட்டுகிறார்; எங்கோ ஒரு மூலையில் படிந்த தூசும் அவர் கண்களில் படுகிறது.

அதைக் கையால் துடைக்கிறார்... எதுவும் அழகாக இருப்பதுதான் இவருக்குப் பிடிக்கும் என்பது, வீட்டைப் பிரமாதமாக அழகுபடுத்தியிருப்பதிலிருந்து நமக்குத் தெரிகிறது!அண்ணாதுரை - ராணி திருமணம் 1930-ல் காஞ்சிபுரத்தில் நடந்தது. அப்போது அண்ணாதுரை, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். திருமணமான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே அவர் எம்.ஏ. பட்டம் பெற்றார். திருமதி ராணி சென்னையில் பிறந்தவர். இவருடைய குடும்பம் அண்ணா துரையின் குடும்பத்திற்குத் தூரத்து உறவுதான்.``ஆனால், திருமணத்திற்கு முன்பு என் கணவரை நான் சந்தித்ததில்லை. பெரியவர்களாகப் பார்த்து நிச்சயித்து நடத்தியது எங்கள் திருமணம்" என்று முதல் கேள்விக்குப் பதில் அளித்தவாறு பேட்டியைத் துவக்கினார் திருமதி ராணி அண்ணாதுரை.

``சீர்திருத்தக் கருத்துக்களுடைய ஒரு தலைவருடன் வாழ்க்கையைத் துவக்குவதில் ஆரம்பத்தில் கஷ்டங்கள் ஏற்படவில்லையா?"

இதற்கு அவர் அளித்த பதில் :``அவர் பெரும் சீர்திருத்தக் கருத்துக்களை உடையவர் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். கணவருடைய கருத்துக்கு மாறாக நடக்கக் கூடாது என்ற மனப் பக்குவம் பெற்ற பிறகு, அவரை மணப்பதற்கு எனக்கு எந்தவிதத் தயக்கமும் ஏற்படவில்லை. எங்கள் குடும்ப வாழ்க்கையின் ஆரம்ப நாட்களிலிருந்தே அவர் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்ததால், நான் அவருடைய தேவைக்கேற்ப நடப்பதற்குப் பழகிக் கொண்டேன். எனவே, எனக்கு ஆரம்ப கால குடும்ப வாழ்க்கை அப்படியொன்றும் கடினமாகத் தெரியவில்லை. தவிர, அவர் எப்போதும் சொந்தக் கருத்துக்கு முழுச் சுதந்திரம் அளிப்பவர்."

Annadurai, Rani Annadurai
Annadurai, Rani Annadurai

நீங்கள் கோயிலுக்குச் செல்லும் வழக்கம் உண்டா? வீட்டில் வழிபாடு செய்வீர்களா?

கோயிலுக்குச் செல்வதும் வழிபாடு செய்வதும்தான் தெய்வ நம்பிக்கை இருப்பதற்கான அடையாளம் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்பவள் இல்லை நான்.

குடும்ப வரவு-செலவுத் திட்டங்களை யார் கவனிப்பது வழக்கம்? பண விஷயத்தில் சிக்கனம் உங்களுக்குப் பிடிக்குமா?

நான்தான் கவனிப்பேன். என் கணவருக்கு வீட்டு விஷயங்களைக் கவனிப்பதற்கு நேரமேது? ஆனால், ஒன்று. அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, குடும்ப நிலையைச் சமாளிக்கும்  திறமையை நான் பெற்றிருப்பது - அவரிடத்தில் நான் கற்ற பாடங்களில் ஒன்றாகும். சிக்கனமாக வாழ வேண்டிய சூழ்நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம். அதனால் எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை சிக்கனம் என்பது பிடித்தமானது மட்டுமல்ல; சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.கிழ்ச்சி மிகுந்த இந்த வாழ்க்கையில் அவர்களைக் கண்கலங்க வைத்த நிகழ்ச்சியும் ஒருநாள் நடந்தது.``அதுதான், என்னுடைய சிறிய மாமியார், அதாவது `அவ'ரது தொத்தா அவர்கள் இறந்தது. இந்த நிகழ்ச்சி எங்கள் குடும்பத்திற்கே பேரிழப்பாகும். அந்த நாளில் அவர் (அண்ணாதுரை) இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காகச் சிறை சென்று பரோலில் வந்திருந்தார். நான்கு, ஐந்து நாட்கள் `அவர்' சாப்பிடாமலே இருந்தார். நானும் என் குடும்பத்தாரும் வற்புறுத்திய பிறகுதான் சாப்பிட்டார்" என்று, அந்த உருக்கமான நிகழ்ச்சியை நினைவிற்குக் கொண்டு வந்தவராகச் சொன்னார் திருமதி ராணி அண்ணாதுரை. திரு அண்ணாதுரையும் இவரும் மகிழ்ச்சியிலேயே மூழ்கியிருந்த நாட்கள் - பிள்ளைகளின் திருமண நாட்களாகும்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அண்ணாவுக்குக் கோபம் வருமா?

அவர் என்னிடம் கோபப்படும் அளவிற்கு நான் நடந்து கொள்வதில்லை.

வீட்டுச் சமையலை நீங்களே செய்கிறீர்களா? உங்கள் இருவருக்கும் பிடித்தமான உணவு எது?

ஆமாம். நான்தான் செய்கிறேன். பிடித்தமானது என்று எதையும் அதிகமாகச் சாப்பிட மாட்டோம்.

சென்ற (1962) தேர்தலில் `அண்ணா' தோற்றபோது, அந்தத் தோல்வியைப் பற்றி என்ன நினைத்தீர்கள்? உங்கள் ஆறுதலை அவர் அப்போது பெற்றாரா?

அவர் தேர்தலில் தோல்வியுற்றதைத் தமது பொது வாழ்க்கைக்கு ஒரு தடைக் கல்லாகவோ அல்லது வருத்தப்பட வேண்டிய நிகழ்ச்சியாகவோ கருதவில்லை. நான்தான் சிறிதளவு வருத்தப்பட்டேன். எனக்கு அவர் ஆறுதல் கூறினார்.

அரசியல் விஷயங்களைப் பற்றி அவர் உங்களுடன் பேசுவது உண்டா?

அரசியல் விஷயங்களைப் பற்றி அவர் என்னுடனோ அல்லது என் குடும்பத்தாருடனோ பேசுவது கிடையாது. ஆனால், சென்னையில் குடிசைகள் தீப்பற்றி எரிந்த போது, வீட்டில் அவர் மிகவும் பரபரப்புடன் இருந்ததைப் பார்த்தேன். அவருடைய பொறுப்புகளை உணர்ந்து எனக்குக் கவலைதான் பிறந்தது.

Rani Annadurai
Rani Annadurai

அவர் முதலமைச்சரான அன்று என்ன நினைத்தீர்கள்?

அவருக்குப் பொறுப்புக்கள் அதிகமாவது பற்றியும், கடமையாற்ற இவருக்கு நேரம் எங்கே இருக்கிறது என்றும் ஆச்சர்யத்துடன் எண்ணினேன்.

சிபாரிசுக்காகத் தங்களை நாடி நிறையப் பேர் இப்போது வருவார்களே? அதை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

சமாளித்துத்தானே ஆக வேண்டும்! அவர்களுடைய தேவை நியாயமானதாக இருந்தால், அவர்களுக்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்து வருகிறேன்.

அண்ணா எப்போது சாப்பிடுவார்? எப்போது படுக்கச் செல்வார்?

அவர் எப்போது சாப்பிடுவார், எப்போது தூங்குவார் என்று கூற முடியாது. காலையில் டிபன் சாப்பிடுவது அரிது. பகலில் இரண்டு அல்லது மூன்று மணிக்குச் சாப்பிடுவார். தினமும் இரவில் மூன்று மணிக்குதான் படுக்கச் செல்கிறார். இரண்டு மணிக்கு முன்பு அவர் படுத்து நான் பார்த்ததில்லை.

அண்ணா கர்னாடக சங்கீதத்தை ரசிப்பது உண்டா? கச்சேரிகளுக்குப் போவது உண்டா?

உண்டு! கர்னாடக சங்கீதம் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நான் எப்பொழுதாவது வெளியே போவதுண்டு. சினிமாக்களுக்கும் போவேன். அவருக்கு ஆங்கில சினிமாக்கள்தான் அதிகம் பிடிக்கும்.

தங்களுக்குப் பிடித்தமான நாவல் ஆசிரியர் யார்?

`அவர்' எழுதிய புத்தகங்களைத்தான் நான் விரும்பிப் படிப்பேன். கல்கியும் எனக்கு மிகப் பிடித்தமான நாவல் ஆசிரியர்.ராணி அண்ணாதுரைக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு விஷயம் - நடைபெற இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டில் தோழமைக் குழுவில் துணைத் தலைவராக இருப்பது.

- நிருபர்

(30.07.1967 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)