Published:Updated:

ராணிப்பேட்டை: எம்.எல்.ஏ குடும்பத்தில் மல்லுக்கட்டு - வாரிசு அரசியலால் தடுமாறும் தி.மு.க!

ஸ்டாலினுடன் காந்தி, வினோத்
ஸ்டாலினுடன் காந்தி, வினோத்

`காந்தியின் இரு மகன்களும் ராணிப்பேட்டை தி.மு.க-வில் அதிகாரம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். வாரிசு அரசியலால் ஒதுங்கி நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது' என்கிறார்கள், தி.மு.க நிர்வாகிகள்.

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளரும் அத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான ஆர்.காந்தியும், அவரின் மூத்த மகன் வினோத்தும் பதவிக்காக மல்லுக்கட்டுகிறார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், துரைமுருகனுக்கு அடுத்த நிலையில் பவர்ஃபுல்லானவர் காந்தி. தி.மு.க ஆட்சிக்கட்டிலில் இருந்த சமயத்தில், காந்திக்கு அமைச்சர் பதவி கிட்டவிருந்தது. அதற்கு முட்டுக்கட்டைப் போட்டவர் இப்போதைய பொதுச்செயலாளர் துரைமுருகன் என்கிறது காந்தி தரப்பு. கடந்த பத்து ஆண்டுகளாக தி.மு.க ஆட்சியில் இல்லை. `இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும்' என்று தி.மு.க தீவிரமாக வேலை பார்த்து வருகிறது.

காந்தி எம்.எல்.ஏ
காந்தி எம்.எல்.ஏ

இதேபோல், சீனியர் மாவட்டச் செயலாளர் காந்தியும், `தனது அமைச்சர் கனவுப் பலித்துவிடாதா?' என்று எண்ணுகிறாராம். இந்த முறை காந்தியின் கனவுக்கு முட்டுக்கட்டைப் போடுவது துரைமுருகன் இல்லை. காந்தியின் மூத்த மகன் வினோத். ஜி.கே என்ற பெயரில் செயல்படும் பள்ளியை நிர்வகிக்கும் வினோத் நேரடி அரசியலுக்குள் வரவும் ஆசைப்படுகிறாராம். ``துரைமுருகனும் அவர் மகனை எம்.பி ஆக்கிவிட்டார். உன் உடல்நிலையும் சரியில்லை. நீ நல்ல நிலையில் இருக்கும்போதே, என்னை எம்.எல்.ஏ ஆக்கிவிடு. இப்ப இல்லைனா, எப்பவுமே இல்லை’’ என்று நடிகர் ரஜினி ஸ்டைலில் தந்தை காந்தியிடம் வினோத் வாதாடி வருவதாகச் சொல்கிறார்கள்.

தி.மு.க Vs அ.தி.மு.க: 1952 முதல் 2016 வரை தேர்தல் ஹைலைட்ஸ்!

மகனின் எதிர்பார்ப்புக்கு தடாலடியாக மறுப்பு தெரிவித்துவிட்டார் காந்தி என்கிறது தி.மு.க வட்டாரம். இதனால், அவர்மீது வினோத் அதிருப்தியில் இருக்கிறார் என்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட குடும்பத் தகராறில் தந்தை காந்தியை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டாராம் வினோத். அப்போது, மனம் நொடிந்து ராணிப்பேட்டை பாரதி நகரில் குடியேறிய காந்தி, இதுநாள் வரை மகனுடன் சேர்ந்து வசிக்கவில்லை என்கிறது தி.மு.க வட்டாரம். கருத்து வேறுபாடு நிலவும் சூழலிலும், தந்தை கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் வாலண்டரியாகத் தலைகாட்டி வருகிறார் வினோத்.

குடும்பத்துடன் காந்தி
குடும்பத்துடன் காந்தி

டிசம்பர் 29-ம் தேதி, ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க மக்கள் சபைக்கூட்டத்துக்கு அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் வந்தார். அவரைச் சந்தித்து ஆசிப்பெற்றார் வினோத். ஆனாலும், வினோத்துக்கு அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்பில்லை என்கிறது, காந்தி தரப்பு. அப்பாவுக்கும், அண்ணனுக்குமான பதவிச்சண்டையைப் பார்த்து காந்தியின் இளைய மகன் சந்தோஷுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். காந்தியின் இரு மகன்களும் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க-வில் அதிகாரம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். வாரிசு அரசியலால் ஒதுங்கி நிற்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று வருந்துகிறார்கள், தி.மு.க நிர்வாகிகள்.

அடுத்த கட்டுரைக்கு