Election bannerElection banner
Published:Updated:

5 லட்சம் கோடி கடன்... ஆனாலும் தமிழ்நாட்டைப் பிடிக்க ஏன் இத்தனை போட்டி? - வாசகர் வாய்ஸ் #MyVikatan

கடன்
கடன்

வசதியற்ற ஏழை, எளிய மக்கள் வாக்களிக்கப் பணம் வாங்குவது என்பது ஏற்புடையதுதானே என்ற ஒரு நியாயப்படுத்தலும் இங்கு நடக்கிறது. ஆனால்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

`அரசியல்,பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவை உலகச் சங்கிலியின் மூன்று கண்ணிகள்’ என்பார் கார்ல்மார்க்ஸ்.

ஒருகாலத்தில் சேவைப் பணியாக இருந்த, உலகச் சங்கிலியின் முதன்மைக் கண்ணியான அரசியல், தனது குறிக்கோளிலிருந்து முற்றும் பிறழ்ந்து, தொழில் என இன்று மாறிப்போனது துயரகரமான ஒன்றுதான்!

இன்று அரசியலில் இருக்கும் மற்றும் புதிதாக அரசியலுக்கு வரவிருக்கும் பெரும்பான்மையான அரசியல்வாதிகளின் எண்ணம், இந்த வியாபாரத்திலிருந்து என்ன வருமானம் கிடைக்கப்போகிறது என்பதில்தான் இருக்கிறது!

உண்மை
உண்மை

தேர்தலுக்காக, தொகுதிக்கு 10 கோடி 20 கோடி ரூபாய் எனச் செலவு செய்யும் ஆட்கள், வெற்றிபெற்றவுடன் மக்களுக்குச் சேவை செய்வார்கள் என மக்கள் எதிர்பார்ப்பது ஆச்சர்யமூட்டும் ஒன்று. ஒவ்வொருவரும் தாங்கள் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக, மும்மடங்காகத் திரும்பப் பெறும் செயல்பாடுகளில்தான் முனைப்புக் காட்டுவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது!

கோடிகளைக் கொட்டி செலவு செய்யக்கூடிய ஒரு வேட்பாளர், வெற்றிபெற்றவுடன் மக்களுக்குச் சேவை செய்வார் என்பது நகை முரணாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது.

லஞ்சம், ஊழல் போன்ற மலிவான செயல்களெல்லாம் அவமானமூட்டும் பெரும் பாவச்செயல்களாக ஒருகாலத்தில் இருந்தன. ஆனால் இன்று அவை பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளகூடிய, ஒரு சாதாரணச் செயலாக மாறிப்போய்விட்டன என்பது அவலத்தின் உச்சம்.

தன்னுடைய வேலையை மிகச் சுலபமாகச் செய்துகொள்வதற்காக லஞ்சம் கொடுக்கக்கூடிய ஒருவர், வாய்ப்பு கிடைக்கும்போது லஞ்சம் வாங்கக்கூடிய ஒருவர், தன்னை ஆள்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புவதில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை!

நான் சிறு சிறு அளவில் லஞ்சம் கொடுப்பேன், வாக்களிக்கப் பணம் பெறுவேன், எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நானும் லஞ்சம் பெறுவேன். ஆனால் எனக்கு வரக்கூடிய ஆட்சியும், நான் தேர்ந்தெடுக்கக்கூடிய அரசியல்வாதியும் லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்டவராக - நேர்மையானவராக இருக்க வேண்டும் என மக்கள் நினைப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை! முதலில் நல்லாட்சிக்கு நாம் தகுதியானவர்கள்தானா என்பதை ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ஊழல்
ஊழல்

ஒரு வாக்காளர் வாக்களிக்கப் பணம் பெறுகிறார் என்றால், அவர் மறைமுகமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடக்கக்கூடிய லஞ்ச ஊழலில் கூட்டுவைத்துக்கொள்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை!

வசதியற்ற ஏழை, எளிய மக்கள் வாக்களிக்கப் பணம் வாங்குவது என்பது ஏற்புடையதுதானே என்ற ஒரு நியாயப்படுத்தலும் இங்கு நடக்கிறது. ஆனால், எந்தவிதத்தில் லஞ்சம் பெற்றாலும் அது அறமற்ற செயலே என்பதை மக்கள் உணர வேண்டும்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டி அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு எனத் தனியாகப் பெரும் நிதியை ஒதுக்கிவைக்கின்றன. மேலும் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் தேர்தல் நிதி என கோடிக்கணக்கான பணத்தை அரசியல் கட்சிகளுக்குக் கொட்டிக் கொடுக்கின்றனர். இவ்வாறு கொடுக்கப்படும் நிதிக்கு பிரதியுபகாரமாக, குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பணம் கொடுத்தவர்களுக்குத் தேவையானவற்றை சட்டத்துக்கு அப்பாற்பட்டு செய்ய மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!

எனவே வாக்காளிக்கப் பணம் பெறுவது என்பது ஊழலின் ஒரு ஆழமான ஊற்றுக்கண்தான்!

இதற்கு மாற்றாக,தேர்தலில் மக்கள் வாக்களித்து முடித்தவுடன், வாக்காளருக்கு அதிகாரிகள் மூலம் வாக்குச்சாவடியில் பணம் வழங்குவதைச் சட்டமாக்கலாம்.

மக்களுக்காகத்தானே சட்டங்கள்!

இதனால் வாக்கு சதவிகிதம் கூடுவதுடன், வசதியற்ற மக்கள் பயனடையவும் முடியும். மேலும் லஞ்சம், ஊழல் ஆகியவை கணிசமாகக் குறையவும் வாய்ப்பு ஏற்படும்! ஆக்கபூர்வமான பொருளாதார வளர்ச்சி என்பது மக்களிடம் பணப்புழக்கம் ஆரோக்கியமாக இருப்பதுதானே! அரசாங்கத்திடம் பெரும் செல்வம் குவிந்து கிடப்பது அல்லவே!

லஞ்சம்
லஞ்சம்

ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்பவர் இந்தச் சமூகத்திலிருந்துதான் உருவாகிறார். சமூகம் முழுக்கவே லஞ்ச ஊழல் புரையோடிப் போயிருக்கும்போது, அந்தச் சமூகத்திலிருந்து வரக்கூடிய தலைவர் அவ்வாறே இருப்பதில் எந்த வியப்பும் இல்லை. விதையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்?

இதில் இன்னோர் ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், `இது என்னுடைய சாதனை, இதை நான் செய்தேன்’ எனப் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பிரசாரங்களில் கூறுவதும், அவற்றைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்துவதும்தான்!

மக்களின் வரிப்பணத்தில், மக்களுக்கான திட்டங்களை நிறைவு செய்வதற்குத்தான் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதற்கான அதிகாரம், வசதிகள், ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படுகின்றன.

இவை அனைத்தையும் பெற்றுக்கொண்டு அதற்கான வேலையை செய்வதுதானே முறை! அந்த வேலையை ஏதோ சாதனை எனக் கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? மேலும், அவர்கள் தங்களுடைய கைக்காசைச் செலவு செய்து மக்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வருவதில்லையே! இங்கே இருப்பதைத்தான் எடுத்துக் கொடுக்கிறார்கள். அதற்குத்தான் சாதனை, சரித்திரம் என்ற அறைகூவல்கள்!

ஒரு குடும்பத் தலைவியோ, தலைவனோ உணவு சமைத்துவிட்டு `நான் சமைத்தேன், இது சாதனை’ என்று கூறுவதும், ஒரு பணியாளர் காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் பணியாற்றிவிட்டு `நான் வேலை செய்தேன், இது சாதனை’ எனக் கூறுவதும் எத்தனை அபத்தமானதோ அத்தனை அபத்தமானது ஓர் அரசியல்வாதி தனது பணியைச் செய்துவிட்டு அதைச் சாதனை என்று கூறுவது!

மக்கள் நலத் திட்டங்கள் என்பவை உள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்து, வெளி பாக்கெட்டில் வைப்பது போன்றதே!இதில் சாதனை என்பதற்கு எந்தவிதமான இடமும் இல்லை.

ஒரு சிறந்த அரசியல் கட்சிக்கும், அதன் தலைமைக்கும் புதுமையான சிந்தனைகளும், புத்திசாலித்தனமான யோசனைகளும் இன்று நிச்சயம் தேவை என்பது காலத்தின் கட்டாயம். மக்களுக்கு காலாகாலத்துக்கும் பயனளிக்கும் வகையிலான, மற்றவரால் செய்ய இயலாத மகத்தான சாதனைகளைத் தம் ஆட்சியில் ஒரு தலைவர் புரிந்துள்ளார் எனில், அதைச் சாதனை என்று அதனால் பயனடையும் மக்கள்தானே கூற வேண்டும்... எதிர்கால வரலாறுதானே அதைப் பற்றி பேச வேண்டும்! அப்போதுதான் அந்த இடத்தில் அரசியல் என்பது சேவைப் பணியாக இருக்கிறது என்று பொருள். ஆனால் இன்றோ எங்கு நோக்கினும் சுய விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன. இவை அரசியலைத் தொடர்ந்து வியாபாரம் எனப் பிரகடனப்படுத்தும் விளம்பரங்களாகத்தான் தெரிகின்றன!

Representational Image
Representational Image

தேர்தல் அறிக்கைகளில் `கடன் தள்ளுபடி செய்வேன், மக்களுக்கு இவ்வளவு பணம் கொடுப்பேன்’ என அரசியல்வாதிகள் கூறியுள்ளனர். இது நல்ல விஷயம்தான். ஆனால் மக்களும் மாநிலமும் கடன் வாங்காத நிலையை உருவாக்க, மக்களுடைய பொருளாதார நிலையைச் செழிப்பாக்க, மக்களின் வருமானத்தை உயர்த்த, செலவுகளைக் குறைக்க போதுமான திட்டங்களை ஒரு நல்ல தலைவர் வைத்திருப்பது அவசியம்.

இவை மக்கள் ஏற்கக்கூடிய அளவிலான,பொருளாதாரரீதியிலும், அறிவியல்பூர்வமாகவும் சாத்தியமாகக்கூடிய திட்டங்களாக இருப்பது முக்கியம்.

அடிப்படைப் பொருள்களை வாங்குவதற்கு மக்களுக்குப் பணம் கொடுப்பதைவிட, மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்வதே சிறந்ததொரு நிர்வாகமாக இருக்க முடியும்!

கவர்ச்சி அறிவிப்புகள் என்பவை உணவின் ஊறுகாய்போலத்தான் இருக்க வேண்டும். ஊறுகாய் அளவாக இருந்தால் மட்டுமே உணவு சுவையளிக்கும். ஆனால், இன்றைய கவர்ச்சி அறிவிப்புகள் ஊறுகாய் போன்று அமையாமல் உணவாகவே மாறியிருப்பது காலக்கொடுமை! வயிற்றுப் பசிக்கு ஊறுகாயை மட்டுமே அள்ளி அள்ளி விழுங்க முடியுமா?

திரைப்படங்களில் வரக்கூடிய அரசியல் தொடர்பான காட்சிகளும், நடைமுறையில் நடக்கக்கூடியவையும் ஒன்றுதானோ எனும் காட்சிப்பிழை தோன்றும் அளவுக்கு இன்றைய அன்றாட நிகழ்வுகள் மக்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கக்கூடிய தமிழ்நாட்டை ஆட்சி செய்ய இத்தனை பேருக்கு விருப்பம் இருப்பதற்குக் காரணம், `மேலும் மேலும் கடன் வாங்குவோம். அதில் நமக்கான ஒரு பங்கை ஒதுக்கி கொள்வோம்’ என்பதாகத்தானே இருக்க முடியும்?!

இங்கு பல விஷயங்களை மக்கள் சுலபமாக மறந்துவிட வேண்டும் என அரசியல் கட்சிகள் விரும்புகின்றன. மக்களும் ஒரு சில விஷயங்களை மறந்தும் போய்விடுகிறார்கள்.

எந்த ஒரு சிறு வேலைக்கும்கூட லஞ்சம், சிபாரிசு, ஊழல் என சமுதாயம் முழுக்கவே புரையோடிப் போய்க்கிடக்கிறது.

காந்தியடிகள் போன்றோ, காமராஜர் போன்றோ ஏன் இன்றைக்கு ஒரு சிறந்த தலைவர் உருவாகவில்லை என்பது பெரும்பாலான மக்களின் ஏக்கமாக இருக்கிறது. சிறந்த தலைவர்கள் என்பவர்கள் எங்கேயோ வானத்திலிருந்து திடீரென்று குதிப்பது கிடையாது.

ஓர் இயந்திரம் பழுதாகிக் கிடக்கும்போது அதன் உற்பத்திப் பொருளை மட்டுமே குறை கூறிப் பயன் இல்லை. அவ்வாறே சமுதாயம் பழுதாகிக் கிடக்கும்போது அது உற்பத்தி செய்யும் உற்பத்திப் பொருளான தலைவர்களை மட்டுமே நாம் குறை கூறுவது சரியாக இருக்காது. முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு, கண்ணாடியில் அழகாகத் தெரிய வேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை.

ஒருகாலத்தில் அரசியல் என்பது சேவையாக இருந்தது. இருக்கக்கூடிய வளங்களை மக்களுக்குச் சிறப்பாகப் பங்கிட்டு வழங்குவது, சமூகநீதி காப்பது, சகோதரத்துவம், மதசார்பின்மை இறையாண்மை போன்றவை அரசாங்கங்களின் உயரிய முக்கியக் கொள்கைகளாக இருந்தன. ஆனால், இன்றைய சூழலில் அரசியல் என்பது ஒரு பெரும் லாபம் அளிக்கக்கூடிய ஒரு மாபெரும் வியாபாரமாக மாறிவிட்டது.

இதில் எந்த அளவு முதலீடு செய்தால், எவ்வளவு உழைத்தால், எத்தகைய களப்பணி ஆற்றினால் இதிலிருந்து எவ்வளவு எடுக்கலாம் என்பது பெரும்பாலான அரசியல்வாதிகளின் கொள்கைக் கணக்காக இருக்கிறது.

வெற்றி பெற்றால் ஒரு கணக்கு, தோல்வி அடைந்தாலும் தான் பெற்ற வாக்குகள் அடிப்படையில் ஒரு கணக்கு என அரசியலே ஒரு லாப நட்டக் கணக்காகவே தொடர்கிறது.

புதிதாகக் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்பவர்களின் எண்ணமோ, இந்தத் தேர்தலில் பெறும் ஓட்டு சதவிகிதத்தைப் பொறுத்து அடுத்தடுத்த தேர்தல்களில் பெரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, எவ்வளவு வசதிகளைப் பெற முடியும் என்பதாகவே இருக்கிறது.

Representational Image
Representational Image

இன்று தமிழகம் லஞ்சம், ஊழல் எனும் பெரும் நோய்களுடன் போராடிக்கொண்டிருக்கிறது. இந்த நோய்களுக்கு மிகச் சிறந்த அறுவை சிகிச்சை மக்களின் மனமாற்றம் மட்டுமே.

அரசியலைத் தொழில் எனும் தளத்திலிருந்து சேவைத் தளத்துக்கு மீண்டும் மடைமாற்றம் செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது.

தனிமனித மாற்றம் ஒன்றே இதற்குத் தீர்வாக அமையும். தனிமனிதர்கள் இணைந்ததே சமுதாயம். சமுதாய மாற்றம் ஏற்பட வேண்டுமாயின், நல்ல ஆட்சியாளர்கள் வேண்டுமெனில், நல்ல அரசே மக்களின் தேவையெனில், தனி மனிதர்கள் நியாய உணர்வுகொண்டவர்களாகவும், அதன் பயனாக நமது சமுதாயம் ஓர் உன்னத சமுதாயமாகவும் மாற வேண்டும். அப்போதுதான் தனிமனித ஒழுக்கமும், நியாய உணர்வும், திறனும் மிகுந்த சிறப்பான ஒருவர் சமுதாயத்திலிருந்து தலைவராக உருவாக வாய்ப்பு ஏற்படும்.

மாற்றம் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் தொடங்க வேண்டும். அது அப்படியே பரவி, சமுதாயத்தில் ஓர் இயக்கமாக மாற வேண்டும். அப்போதுதான் மிகச் சிறந்த அரசியல் தலைவர்களும், சிறப்பான ஆட்சியும் நமக்குக் கிடைக்கும்.

சமுதாய மாற்றம் இல்லாமல் எத்தனை ஆட்சி மாற்றங்கள் வந்தாலும் அவற்றால் ஆக்கபூர்வமான விளைவுகளை உண்டாக்கிவிட முடியாது.

நீதி, நேர்மை, நியாயம் போன்றவை வெறும் வார்த்தைகளாக இல்லாமல் மக்களின் வாழ்க்கையாக என்று மாறுகிறதோ அன்றுதான் அவை அரசியல் களத்திலும் பிரதிபலிக்கும். ஆட்சியாளர்களிடம் வெளிப்படும்!

- அகன் சரவணன்

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

5 லட்சம் கோடி கடன்... ஆனாலும் தமிழ்நாட்டைப் பிடிக்க ஏன் இத்தனை போட்டி? - வாசகர் வாய்ஸ் #MyVikatan

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு