Published:Updated:

தூத்துக்குடி: `மாற்றம் வேண்டும்.. மக்கள் நலனுக்காக ரஜினியுடன் இணையத் தயார்!’ - கமல்ஹாசன்

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

``தமிழக மக்களின் நலனுக்காக எந்த ஈகோவையும் விட்டுவிட்டு, ரஜினியுடன் இணைந்து மக்களுக்காகப் பணி செய்யத் தயார்” என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

`சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பெயரில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நான்கு நாள் பிரசாரப் பயணத்தை கடந்த 13-ம் தேதி மதுரையிலிருந்து தொடங்கி விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டுவருகிறார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சிறு, குறு வியாபாரிகள், பட்டாசுத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார். கோவில்பட்டியிலிருந்து எட்டயபுரத்திலுள்ள பாரதியாரின் பிறந்த இல்லத்துக்குச் சென்று பாரதியின் சிலையை வணங்கினார்.

பாரதி சிலையை வணங்கிய கமல்
பாரதி சிலையை வணங்கிய கமல்

இல்லத்திலுள்ள போட்டோ ஆல்பங்களைப் பார்வையிட்ட அவர், அங்கிருக்கும் பார்வையாளர்களின் வருகைப் பதிவேட்டில் `அய்யன் என் கவிதைக்கு... அப்பன் பிறந்த வீடு... அய்யா பாரதி, என் அறிவு பிறந்த வீடு - இப்படிக்கு அன்பன் கமலஹாசன்’ என எழுதினார். பின்னர் தூத்துக்குடி வந்த அவர், திரேஸ்புரம் பகுதியில் மீனவர்கள் நிறைந்த பகுதியில் மழையிலும் கையசைத்த அவர், மீனவர்களிடம் கலந்துரையாடினார். மணப்பாடு ஊர்நல கமிட்டியினர் குலசை ராக்கெட் ஏவுதளம் அமைவதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அரசின் கவனத்துக்கு இதை எடுத்துச் செல்லும்படியும் கமலிடம் மனு அளித்தனர்.

கலந்துரையாடல்களின்போது பேசிய அவர், ``கூவத்தூரில் ஆரம்பித்த கூத்தால், இன்று ஊரே கூவமாகிவிட்டது என்பதுதான் உண்மை. கேட்டால், தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்கிறார்கள். ஊழல் குற்றச்சாட்டு அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில்தான் உள்ளது. மதத்தால், சாதியால், பன்முகத்தன்மையால் ஒடுக்க நினைப்பவர்களுக்கு தமிழகம் தக்க பதிலடி கொடுக்கும். நாங்கள் செயலில் இறங்க வேண்டிய நேரம் இது.

திறந்தவெளியில் பேசிய கமல்
திறந்தவெளியில் பேசிய கமல்

`அலிபாபாவும் 40 திருடர்களும்’போல 234 பேர் மக்களுக்குச் சேவை செய்யும் மக்கள் ஊழியர்களைச் செய்ய விடாமல் காலை இடறிவிடுவதை வேலையாக வைத்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். எங்கள் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கொடுத்து, மறுக்கப்பட்டிருக்கிறது. திட்டமிட்டுத்தான் நாங்கள் புறப்பட்டு வந்தோம். ஆனால், அனுமதி மறுப்பு கடிதத்தை எங்கள் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் ஒட்யிருக்கிறார்கள். முதலில் எங்களுக்கு அனுமதி கொடுத்தது ஏன்? பின்னர் அதைத் திரும்ப பெற்றது ஏன்? மக்களைப் பார்த்து அச்சப்பட வேண்டியது குற்றம் செய்தவர்கள்தான். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறோம். ஆகவே, எங்களுக்கு எந்த அச்சமும் கிடையாது.

எங்கள் கட்சி வேட்பாளருடன் மக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து ஒப்பந்தம் போடுங்கள். அதற்கு நான் ஜாமீன் கையெழுத்து போடுகிறேன். நானும் தலையை வைக்கிறேன், எனது வேட்பாளரும் தலையை வைக்கிறார். தேர்ந்தெடுத்த பின்னர் அவர் அதைச் செய்ய தவறினால் தனது பதவியை ராஜினாமா செய்வார். மக்களின் பேச்சைக் கேட்டுத்தான் எங்கள் ஆட்சி நடக்கும். புதிதாகக் கட்சி தொடங்கி வருபவர்கள் ஒரு காரணத்துக்காக வருகிறார்கள். நான் கட்சி தொடங்கிய காரணம் என்னவென்று சொல்லிவிட்டேன்.

மழையில் பேசிய கமல்
மழையில் பேசிய கமல்

கண்டிப்பாக ஒரு மாற்றம் வேண்டும். நண்பர் ரஜினியும் அதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இன்னும் அவர்களது கொள்கை என்னவென்று தெளிவாகச் சொல்லவில்லை. ஒற்றை வார்த்தையில் சொல்வதை முழுக் கொள்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது. சொல்லட்டும். பிறகு நாங்கள் பேசுவோம். எங்களுக்குள் நட்பு என்பது ஒருவருக்கு ஒருவர் ஒரு போன் காலில் தொடர்புகொள்ளக் கூடியது. அதில் எங்களுக்குள் உதவி செய்ய முடிந்தால் உதவி செய்வோம். கொள்கைப்படியும் மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் எந்த ஈகோவையும் விட்டுக் கொடுத்துவிட்டு நாங்கள் ஒத்துழைப்போம்.

எம்.ஜி.ஆர் தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சியில் இருந்தபோதும் அவர் ‘மக்கள்திலகம்’தான். தற்போது அமைச்சர்களாக இருக்கும் பலர் அவர் முகத்தைக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், நான் அவர் மடியிலேயே உட்கார்ந்திருந்தவன். நான் சின்ன வெற்றி அடைந்திருந்தாலும் என்னை உச்சி முகர்ந்து பாராட்டியவர். பாதிப்பேர் புத்தகம் படிப்பதில்லை. அவர்களுக்கு வரலாறும் தெரியவில்லை. எம்.ஜி.ஆரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர் இரட்டை இலைச் சின்னத்தை உருவாக்கியது வேறு காரணத்துக்காக. ஆனால், தற்போது அந்த இலையில் இரண்டு பேர் மட்டும் சாப்பிடுகிறார்கள். எஜமானியம்மா மறைந்த பிறகும் இங்கு சாவிக்கு சண்டை போட்டுக்கொள்கிறார்கள். ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நினைப்பில் இருந்துகொண்டிருக்கிறார்கள். மூவாயிரம், ஐந்தாயிரத்தை விட்டுவிட்டு ஒரு ஓட்டுக்கு 5 லட்சம் ரூபாய் கேளுங்க கொடுக்கிறார்களா என்பதைப் பார்ப்போம்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

பணம் கொடுத்தால் ஓட்டு வாங்கிவிடலாம் என்பதெல்லாம் அந்தக் காலம். மக்கள் தற்போது விழித்துக்கொண்டார்கள். நல்ல தமிழகத்தை உருவாக்க அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் லஞ்சம் வாங்காமல் பணியாற்றினாலே போதும். நான் காந்தியாருக்கு `பி’ டீம் ஆக மட்டுமே இருப்பேன். வேறு யாருக்கும் நாங்கள் `பி’ டீம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் `ஏ’ டீமுக்காகவே தயார் செய்து கொண்டு வந்தவர்கள். ஒத்திகை பார்த்து பயிற்சி எடுத்து வந்தவர்கள். கட்சி ஆரம்பித்து சும்மா வேடிக்கை பார்க்க வரவில்லை நாங்கள். நிச்சயம் ஆட்சி அமைப்போம். `நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், இனி ஏழைகள் வேதனைப்பட மாட்டார்’ என்ற வரிகளைப்போல, நீங்கள் அனுமதி தந்தால், நான் நடத்திக் காட்டுவேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு