Published:Updated:

அரசியல் களத்தில் நடிகர் விஜய்?! - புஸ்ஸி ஆனந்துடன் டெல்லி பயணத்தின் பின்னணி

`` `பீஸ்ட்’ ஷூட்டிங்குக்காகவே விஜய் டெல்லி சென்றிருக்கிறார். வேறு சில பணிகள் இருந்ததால், அவருடன் புஸ்ஸி ஆனந்தும் சென்றார். உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவதால் இது பெரிதாகப் பார்க்கப்படுகிறது.”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகர் விஜய், ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மறைமுகமாக ஒப்புதல் அளித்திருப்பதை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கொண்டாடிவருகின்றனர். இந்தநிலையில் விஜய் டெல்லி சென்றிருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ஒரே சின்னத்தைப் பெறுவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும், வழக்கு ஒன்றுக்காக ஆலோசனை நடத்தச் சென்றதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

விஜய்
விஜய்

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிடுகின்றனர். விஜய் மக்கள் இயக்கக் கொடி, விஜய் போட்டோ ஆகியவற்றைப் பயன்படுத்தி, தேர்தலை எதிர்கொள்ள விஜய் ஒப்புதல் கொடுத்துவிட்டார். அதை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறாராம்.

விஜய் மறைமுகமாக அனுமதி கொடுத்ததை மக்கள் இயக்க நிர்வாகிகள் வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிவருகின்றனர். பட்டுக்கோட்டையில் நகரத் தலைவரான ஆதி.ராஜாராம், மணிக்கூண்டுப் பகுதியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி இதை வரவேற்றுக் கொண்டாடினார். அப்போது `2021-ல் உள்ளாட்சித் தேர்தல், 2026-ல் சட்டமன்றத் தேர்தல்; புலி பாய்வதற்குத் தயாராகிவிட்டது’ என கோஷம் எழுப்பியுள்ளனர். குறிப்பிட்ட அந்த இடத்தை திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள்தான் இதுவரை அது போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தியுள்ளன. தற்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் களத்தில் இறங்கி, பெரிய கட்சிகளுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்லர் எனக் காட்டியுள்ளனர்.

பட்டுக்கோட்டையில் இனிப்பு வழங்கி கொண்டாடும் நிர்வாகிகள்
பட்டுக்கோட்டையில் இனிப்பு வழங்கி கொண்டாடும் நிர்வாகிகள்

இந்தநிலையில் நடிகர் விஜய் நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் புஸ்ஸி ஆனந்தும் சென்றிருக்கும் நிலையில், நேற்று முன்தினம் இரவு புஸ்ஸி ஆனந்த் மட்டும் சென்னைக்குத் திரும்பியிருக்கிறாராம். விஜய் அங்கேயே தங்கி `பீஸ்ட்’ பட ஷூட்டிங்கில் கலந்துகொள்வதாகக் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி கொடுத்த பிறகு, மக்கள் இயக்க பொதுச்செயலாளருடன் விஜய் டெல்லி சென்றது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் மூடுக்கு வந்துவிட்டார். அது தொடர்பான பணிகளுக்காகவே டெல்லி சென்றதாகவும், ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் ஒரே சின்னம் பெறுவதற்காகத் தலைமை தேர்தல் ஆணையத்தை அணுகச் சென்றதாகவும் நிர்வாகிகள் மத்தியில் பலரும் பலவிதமாகப் பேசி பரபரப்பைக் கூட்டிவருகின்றனர். அவை ஒருபுறம் இருந்தாலும், வேட்புமனுத் தாக்கல், பிரசாரம் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பெரிய கட்சிகளுக்கு டஃப் கொடுக்கக்கூடிய வகையில் முனைப்புடன் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

தேர்தல் வேட்புமனுத் தாக்கல்
தேர்தல் வேட்புமனுத் தாக்கல்

தேர்தலில் போட்டியிட ஒப்புதல் வழங்கிய விஜய்யைப் பாராட்டி `நாளை நமதே, போட்டியிடும் வேட்பாளர்கள் இங்கே... ஒரே சின்னம் பெறுவதற்கு விஜய் அங்கே!’, `ரீல் ஹீரோ இல்லை; ரியல் ஹீரோ, உள்ளாட்சியில் நல்லாட்சி’ போன்ற பல பன்ச் டயலாக் வாசகங்கள் அடங்கிய கார்டை சமூக வலைதளங்களில் பரப்பி டிரெண்டாக்கிவருகின்றனர்.

இது குறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தரப்பில் பேசினோம். `எடுத்தோம் கவிழ்த்தோம் என இல்லாமல் எதையும் நிதானமாகச் செய்யக்கூடியவர் தளபதி விஜய். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வர நினைத்து அதற்கான அடித்தளத்தைப் பொறுமையாக அமைத்திருக்கிறார். பெரிய கட்சிகளுக்கு உரிய அனைத்துக் கட்டமைப்பும் விஜய் மக்கள் இயக்கத்துக்கு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

விமானத்தில் டெல்லி சென்ற விஜய்
விமானத்தில் டெல்லி சென்ற விஜய்

இந்தச் சூழ்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நேரடியாக அனுமதி கொடுக்காமல், புஸ்ஸி ஆனந்த் மூலமாக ஒப்புதல் வழங்கியதுடன், இந்தப் பணிகளைச் செயல்படுத்த அவரை நியமனம் செய்திருக்கிறார். பெரிய கட்சிகள் வேட்பாளர் லிஸ்ட்டை அறிவிக்கும்போதே, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வேட்புமனுத் தாக்கல் செய்ய தொடங்கிவிட்டதுடன், பிரசாரத்தையும் ஸ்டார்ட் செய்துவிட்டனர். புஸ்ஸி ஆனந்த், `தளபதி நம்ம மேல மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். அவர் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிலான வெற்றியைப் பெற வேண்டும்’ என அறிவுறுத்தியிருக்கிறார்.

‘வாத்தி கம்மிங்?’ ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டும் விஜய்?

தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பம்பரமாகச் சுழன்றுவருகின்றனர். இந்தநிலையில் தளபதி விஜய் டெல்லி சென்றிருக்கிறார். அவர் செல்வதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. அவர்கூட புஸ்ஸி ஆனந்த் அண்ணனையும் அழைத்துச் சென்றதைத்தான் உன்னிப்பாக கவனிக்கவேண்டியிருக்கிறது. `பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங்குக்காகச் செல்வதாக வெளியே தெரியப்படுத்தினாலும், ஆனந்த் அண்ணனை ஷூட்டிங்குக்கெல்லாம் அழைத்துச் சென்றது இல்லை.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் பெறச் சென்றதாகக் கூறப்படுகிறது. அத்துடன் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் விஜய் மக்கள் இயக்க பெயர், அதன் கொடி ஆகியவற்றைப் பயன்படுத்தி அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்தார். தன்னுடைய பெயர், போட்டோ, கொடி ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று அப்போது விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதற்கான விசாரணை வரும் 27-ம் தேதி வரவிருப்பதாகத் தெரிகிறது. அது தொடர்பான ஆலோசனைக்காகவும் புஸ்ஸி ஆனந்தையும் அழைத்துச் சென்றிருக்கலாம். வழக்கமாக புஸ்ஸி ஆனந்த், விஜய்யுடன் எங்கு சென்றாலும் ஓப்பனாக முக்கிய நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டுத்தான் செல்வார். இந்த முறை விஜய்யுடன் அவர் சென்று வந்ததை ரகசியமாகவே வைத்திருந்தார்.

விஜய்
விஜய்

உள்ளாட்சித் தேர்தல் மூலம் விஜய் தனக்கான பலம் என்ன, மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு எப்படியிருக்கிறது என்பதை அறிய நினைக்கிறார். அதற்காகவே தன் போட்டோ, கொடி ஆகியவற்றைப் பயன்படுத்தித் தேர்தலை எதிர்கொள்ளவும் அனுமதியளித்திருக்கிறார். அதன் பிறகு வரவிருக்கும் மாநகராட்சி, நகராட்சித் தேர்தலைகளையும் சந்திக்கத் தயாராக இருக்கச் சொல்லி நிர்வாகிகளுக்கு தலைமையிலிருந்து மறைமுக உத்தரவு வந்திருக்கிறது.

`உதயநிதி Vs விஜய்' - தயாராகும் தேர்தல் களம்?

அதன் முடிவுகளை பார்த்த பிறகு விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி 2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குவார் என நினைக்கிறோம். இவை ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றுதான். அதற்கான முயற்சி மற்றும் முன்னெடுப்பு பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன’ எனத் தெரிவித்தனர்.

விஜய் தரப்புக்கு நெருக்கமான வட்டாரமோ,` பீஸ்ட்’ ஷீட்டிங்குக்காகவே விஜய் டெல்லி சென்றிருக்கிறார். வேறு சில பணிகள் இருந்ததால் அவருடன் புஸ்ஸி ஆனந்தும் சென்றார். உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவதால் இவை பெரிதாகப் பார்க்கப்படுவதாக முடித்துக்கொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு