Published:Updated:

`ஓட்டு வங்கியே இல்லாதபோது, சீட் மட்டும் எதற்கு?!' -அன்புமணியைக் கொந்தளிக்க வைத்த அமைச்சர்கள்

அன்புமணி
அன்புமணி

அன்புமணி பேசியதில் எந்தத் தவறும் இல்லை. எங்களுடைய ஒட்டுமொத்த குரலாகத்தான் அவர் பேசியிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க-வின் நிலை எப்படி இருந்தது என்று நினைத்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

``அ.தி.மு.க-வை நம்பி நாங்கள் இல்லை. எங்களை நம்பித்தான் அ.தி.மு.க உள்ளது" என அன்புமணி ராமதாஸ் அதிரடியாகப் பேசியிருக்கிறார். ``சொந்தக் கருத்துகளை அன்புமணி பேசவில்லை. பா.ம.க நிர்வாகிகளின் குமுறல்களையே வெளிப்படுத்தியிருக்கிறார். அ.தி.மு.க தலைமையின் போக்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதால்தான் அன்புமணி ஆவேசப்பட்டார்" என்கின்றனர் பா.ம.க நிர்வாகிகள்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

திண்டிவனத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே மணி, இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ், ஏ.கே மூர்த்தி உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அன்புமணி. ``அ.தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி வைக்கவில்லை என்றால் இன்று அவர்கள் ஆட்சியில் நீடித்திருக்க முடியாது. மக்களவைத் தேர்தல் நடைபெற்ற அதேநேரத்தில், 23 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. ஆட்சி நீடிக்க வேண்டும் என்று நம்மிடம் அ.தி.மு.க கேட்டுக்கொண்டது. அதனால்தான் அனைத்து தொகுதிகளையும் விட்டுக்கொடுத்தோம். ஆனால், அ.தி.மு.க-வோ உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க-வுக்கு வெறும் கால் சீட்டு, அரை சீட்டு என்று கொடுத்துக் கெஞ்ச வைத்தது. கூட்டணியே வேண்டாம் என்ற பா.ம.க-வின் கொள்கையை மாற்றி அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்குச் சென்றோம். ஆனால், அதற்கான அங்கீகாரம் நமக்குக் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வின் அமைச்சர்கள் நமக்குக் குறைந்த அளவிலேயே இடம் கொடுத்தனர். அதனால் ஆளும் கட்சியின் தலைமை எங்களின் கருத்துகளை ஏற்று இனி வரும் காலங்களில் சரிசெய்ய வேண்டும்" என்று பேசினார்.

இந்தப் பேச்சுக்கள்தான் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இதுகுறித்து பா.ம.க-வின் முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம்.

``அன்புமணி பேசியதில் எந்தத் தவறும் இல்லை. எங்களுடைய ஒட்டுமொத்த குரலாகத்தான் அவர் பேசியிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க-வின் நிலை எப்படி இருந்தது என்று நினைத்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

`நாங்கள் இல்லாவிட்டால் அ.தி.மு.க ஆட்சியே இல்லை!'-பொதுக்குழுவில் கொதித்த அன்புமணி

எங்களின் பலத்தைத் தெரிந்துகொண்டுதான் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் மாறிமாறி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தின. அதன் பிறகு ராமதாஸ், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தார். கூட்டணியின்போது நாங்கள் வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்கள். அத்தோடு உள்ளாட்சியில் அதிக இடங்களைத் தருகிறோம் என்று சொன்னார்கள். இதை அவர்கள் செய்தார்களா. அவர்களின் கட்சியை நிலை நிறுத்துவதற்காகக் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட் வழங்குவது என்பதை அந்தந்த மாவட்டச் செயலாளர்களே முடிவு எடுப்பார்கள் என்று சொல்லி நகர்ந்துகொண்டார் முதல்வர்.

ராமதாஸ்-அன்புமணி
ராமதாஸ்-அன்புமணி

இதனால் பல மாவட்டங்களில் எங்களுக்குக் குறைந்த அளவிலான இடங்களையே அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் கொடுத்தார்கள். அதில் கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க அமைச்சர்கள் எங்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தினார்கள். அதிலும் அரசுக்கொறடா ராஜேந்திரன், எம்.சி.சம்பத், உதயகுமார் உள்ளிட்ட ஒரு சில அமைச்சர்கள், `உங்களுக்கு அந்த இடத்தில் ஓட்டு பேங்க் இல்லாதபோது ஏன் அந்த இடத்தைக் கேட்டு வாரீங்க' என ஏளனப்படுத்துவதுபோல் பேசினார்கள்.

அதேபோல் நாங்கள் எதிர்பார்த்த அளவில் சீட் கிடைக்கவில்லை. இந்த வருத்தத்தை எங்களது தலைமையிடம் சொன்னோம். அதன் வெளிப்பாடாய்கூட அன்புமணி பேசியிருக்கலாம். இதையடுத்து, கடந்த 25-11-19 அன்று ராமசாமி படையாச்சியின் மணிமண்டபம் திறப்பு விழாவை மிக விமரிசையாக நடத்தியது அ.தி.மு.க.

ஆனால், விழாவுக்கான அழைப்பிதழில் அன்புமணியின் பெயரைப் போடவில்லை. வன்னிய தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழாவில் இளைஞரணித் தலைவர் அன்புமணி பெயரைப் போடாமல் திட்டமிட்டு அ.தி.மு.க ஒதுக்குவதாக அப்போதே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதுபோன்று பல விஷயங்களில் எங்களை ஒதுக்கிக் கொண்டிருக்கிறார்கள். `கூட்டணி தர்மத்தை மதித்து நடக்க வேண்டும், என்னை மீறி யாரும் கருத்துகளைச் சொல்லக் கூடாது' என மருத்துவர் ஐயா சொல்லியிருக்கிறார்.

அன்புமணி
அன்புமணி

அதனால்தான் நாங்கள் பொறுத்துப் போகிறோம். நாங்கள் மீண்டும் சொல்கிறோம். எங்களை ஒதுக்க நினைத்தால் அது அவர்களுக்குத்தான் ஆபத்தாக முடியும்" என்றதோடு முடித்துக் கொண்டனர்.

அன்புமணியின் பேச்சுக்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து எந்தவித விளைவும் இல்லாத நிலையில் பா.ம.க இளைஞர் அணி உள்ளிட்ட துணை அமைப்புகளின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 5-ம் தேதி தைலாபுரத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க கூட்டணியில் தொடர்வதா.. வேண்டாமா என்பது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகச் சொல்கின்றனர் பா.ம.க வட்டாரத்தில்.

அடுத்த கட்டுரைக்கு