Published:Updated:

அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுகிறதா பா.ஜ.க?! - பின்னணி என்ன?

எல்.முருகன்
எல்.முருகன்

நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என இரண்டிலும் அ.தி.மு.க கூட்டணியில் அங்கம்வகித்த பா.ஜ.க., வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் காண முடிவெடுத்துள்ளது.

பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில், அந்தக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கடந்த ஜூன் 25-ம் தேதி கமலாலயத்தில் நடைபெற்றது. இதில் தமிழகப் பார்வையாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில்தான் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதென முடிவெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகிகள், ``தேர்தலின்போது அ.தி.மு.க நடந்துகொண்ட விதம், வாக்குகள் மடைமாறியது எனப் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. பலரும் அ.தி.மு.க ஒத்துழைப்பு கொடுத்ததாகவே தெரிவித்தனர்.

இருந்தபோதும் கூட்டணியைவிட்டு விலகுவதற்கு வேறொரு முக்கியக் காரணமும் உண்டு. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, விஜயபாஸ்கர், தங்கமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி, பன்னீர் என குறிப்பிட்ட எட்டு பேர் மீது தி.மு.க டார்கெட் வைத்துள்ளது. ஊழல் செய்த அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் மூச்சுக்கு முந்நூறு முறை சொன்னது ஒன்றும் சும்மா பயமுறுத்துவதற்கில்லை என்பது புரிந்துவிட்டது.

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி

சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியபோதே இதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுவிட்டார். ஊழல் செய்தவர்களுக்கு எப்படி பா.ஜ.க துணை நிற்க முடியும்? அதனால் டெல்லியும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது. இது பற்றி உங்கள் ஜூ.வி-யில்கூட விரிவாக கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தீர்கள். தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் சொன்னபடி முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை அமைக்க பட்ஜெட் கூட்டத்தொடரில் மசோதாவை நிறைவேற்றப்போகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததுமே வழக்கு, விசாரணை என வேகமெடுக்கும். அப்போது பா.ஜ.க கூட்டணியில் இருந்தது என்றால் அது விமர்சனத்துக்குள்ளாகும் என்பதால்தான் இப்போதே கூட்டணியைவிட்டு வெளியேறும் முடிவுக்கு வந்துவிட்டோம். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்போது ஒருங்கிணைந்த அ.தி.மு.க இருக்குமா என்பதே கேள்விக்குறிதான்.

மேலும், அமித் ஷா உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் சொல்லியும் சசிகலாவுடன் இணைவதற்கு எடப்பாடி மறுத்துவிட்டார். `நாம் சொல்லியும் கேட்கவில்லையே?’ என்று இன்னமும் தலைவர்களுக்கு ஒரு தர்மசங்கடம் உள்ளது. அதனால், தி.மு.க ஒவ்வோர் அ.தி.மு.க முன்னணியினர் மீதும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால், சாதாரண நிர்வாகிகளும், தொண்டர்களும் கலக்கமடைவார்கள், மீண்டும் கட்சி, சின்னம் உடையக்கூடிய வாய்ப்புள்ளது. அதற்கேற்ப, ஒரு மாதமாகவே சசிகலா அ.தி.மு.க நிர்வாகிகளுடன் தொலைபேசியில் உரையாடிவருகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

ஒருகட்டத்தில் அ.தி.மு.க நிர்மூலமாக, சசியைத் தவிர வேறு வாய்ப்பில்லை என்ற நிலை வரும்போது கண்டிப்பாகக் கட்சியைக் கைப்பற்றிவிடுவார். இதற்குத்தான் தி.மு.க-வும் மறைமுகமாக சசிக்கு உதவுகிறது. இந்த இரட்டைத் தாக்குதல் நடக்கும்போது, பா.ஜ.க மட்டும் அ.தி.மு.க-வுடன் கூட்டணியிலிருந்தால், நாங்கள்தான் அ.தி.மு.க-வைக் காப்பாற்ற முயல்கிறோம் என்கிற கெட்டபெயர் உண்டாகும் என்பதால் கூட்டணியைவிட்டு விலகுவதுதான் சரியாக இருக்கும் என கட்சி மேலிடம் யோசிக்கிறது!” என்கிறார்களாம்.

அடுத்த கட்டுரைக்கு