Published:Updated:

`எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகிவிடக் கூடாது!' -ராமதாஸை எப்படி சமாதானப்படுத்தினார் செங்கோட்டையன்?

எடப்பாடி, பன்னீருடன் ராமதாஸ்...
எடப்பாடி, பன்னீருடன் ராமதாஸ்...

``கூட்டணி தர்மத்தை மதிக்கிறேன்'' என்று சொல்லவந்த ராமதாஸ், ஏன் அ.தி.மு.க-வினரை எதிர்த்துப் போராடத் தயாரானார். போராட்டம் நடத்தும் அளவிற்கு என்ன நடந்தது?

``அ.தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டு, எங்களை எதிர்த்துப் போராட்டத்தை நடத்துவது எந்த விதத்தில் நியாயம். உங்களுடைய பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் நிறைவேற்றுகிறோம்" என்று ராமதாஸிடம் செங்கோட்டையன் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை எதிர்த்து பா.ம.க நடத்தவிருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வத்துடன் ராமதாஸ்
எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வத்துடன் ராமதாஸ்

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி, மாநில அரசுக்கு எதிராக பா.ம.க நேற்று நடத்தவிருந்த தொடர் முழக்கப் போராட்டம் திடீரென ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினர், பா.ம.க நிறுவனர் ராமதாஸோடு பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின. இதுகுறித்து பா.ம.க மாநிலத்தலைவர் ஜி.கே மணியும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

போராட்டம் ஏன் ரத்து செய்யப்பட்டது என பா.ம.க வட்டாரத்தில் விசாரித்தோம். `` தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

எடப்பாடி, பன்னீருடன் ராமதாஸ்...
எடப்பாடி, பன்னீருடன் ராமதாஸ்...

அப்போது, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்திவைக்க வேண்டாம் என்று அரசு ஆணையிட்டிருப்பதாகவும், இதுகுறித்து அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் ராமதாஸிடம் அமைச்சர் தெரிவித்தார். இதனால் பா.ம.க நடத்த இருந்த போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதைக் கேட்ட ராமதாஸ், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வை முழுமையாக ரத்துசெய்வது மட்டும்தான் இந்த சிக்கலுக்குத் தீர்வாக இருக்கும் என்றும், இந்த விஷயத்தில் பா.ம.க உறுதியாக இருப்பதாகவும் கூறினார். மேலும், பொதுத்தேர்வைக் கைவிடும்படியும் கேட்டுக்கொண்டார்" என விவரித்தவர்கள்,

`` சொல்லப்போனால், அரசாங்கத்தை எச்சரிக்கவே இப்பிரச்னையை மருத்துவர் கையில் எடுத்தார். நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம்பெற்றது. சட்டமன்றத் தேர்தலை இதே கூட்டணியில் தொடர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி விரும்புகிறார். ஆனால், அ.தி.மு.க-வினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பா.ம.க நினைக்கிறது. காரணம், உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் கொடுத்த குடைச்சல்கள்தான்.

ராமதாஸ், அன்புமணி
ராமதாஸ், அன்புமணி

உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க-வுக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று திண்டிவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஆளும் அ.தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் அன்புமணி ராமதாஸ். `அ.தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி வைக்கவில்லை என்றால், இன்று அவர்கள் ஆட்சியில் நீடித்திருக்க முடியாது. மக்களவைத் தேர்தல் நடைபெற்ற அதேநேரத்தில், 23 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. ஆட்சி நீடிக்க வேண்டும் என்று நம்மிடம் அ.தி.மு.க கேட்டுக்கொண்டது. அதனால்தான் அனைத்து தொகுதிகளையும் விட்டுக்கொடுத்தோம். ஆனால், அ.தி.மு.க-வோ உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க-வுக்கு வெறும் கால் சீட்டு, அரை சீட்டு என்று கொடுத்துக் கெஞ்சவைத்தது. கூட்டணியே வேண்டாம் என்ற பா.ம.க-வின் கொள்கையை மாற்றி, அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்குச் சென்றோம்.

ஆனால், அதற்கான அங்கீகாரம் நமக்குக் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது' என்று பேசினார். அதைத் தொடர்ந்து ராமசாமி படையாச்சியின் மணிமண்டபம் திறப்பு விழாவை மிக விமரிசையாக நடத்தியது அ.தி.மு.க. அதில், விழாவுக்கான அழைப்பிதழில் அன்புமணியின் பெயரைப் போடவில்லை. வன்னியத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழாவில் இளைஞரணித் தலைவர் அன்புமணி பெயரைப் போடாமல், திட்டமிட்டு அ.தி.மு.க ஒதுக்குவதாக அப்போதே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பா.ம.க-வை வெறுப்பேற்றும்விதமாக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக பா.ம.க முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார்கள்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

அப்போதே இந்தக் கூட்டணியைத் தொடர்வதா வேண்டாமா என்று தைலாபுரம் தோட்டத்தில் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அதில், நம்முடைய பலம் என்ன என்பதனை அ.தி.மு.க-வுக்குக் காட்ட வேண்டும். அதோடு, ஒரு சில நெருக்கடிகளைக் கொடுத்தே ஆகவேண்டும் என முக்கிய நிர்வாகிகள் சொல்ல, வேறு வழியில்லாமல் பா.ம.க தலைமை தயாராகிவிட்டது. நேற்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவரிடம் பேசும்போது, 'அ.தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டு எங்களை எதிர்த்துப் போராட்டத்தை நடத்துவது எந்தவிதத்தில் நியாயம். உங்களுடைய பிரச்னைகள் ஏதுவாக இருந்தாலும் எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் நிறைவேறுகிறோம்' எனக் கூறியிருக்கிறார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

அப்போது பேசிய மருத்துவர், `5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறையால் கிராமப்புற பிள்ளைகள் அதிகமாகப் பாதிக்கப்படுவதோடு, படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுவார்கள்' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனைச் சரிசெய்வது குறித்து விளக்கிய செங்கோட்டையன் இறுதியாக, `நீங்கள் கூட்டணி தர்மத்தை மதிப்பவர். நீங்களே ஆளும்கட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால், அது எதிர்க்கட்சிக்கு சாதகமாகிவிடாதா? அதோடு கூட்டணிக் கட்சிகளுக்குள் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சியினர் விமர்சிப்பார்கள். அதற்கு நீங்கள் இடம் கொடுத்துவிடக்கூடாது' எனப் பேசியிருக்கிறார். இதன்பிறகே போராட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது" என்கின்றனர் விரிவாக.

அடுத்த கட்டுரைக்கு