Published:Updated:

`துரைமுருகன் ஆசீர்வாதம்.. 25 லட்ச ரூபாய்!' -சர்ச்சைக்கு விளக்கமளித்த வாணியம்பாடி தி.மு.க புள்ளி

சாரதிகுமார்
சாரதிகுமார்

``அரசியலுக்காக என்னிடம் விளையாடுகிறார்கள். அ.தி.மு.க-வின் தலையீடு நிறைய இருக்கிறது’’ என்று கொதிக்கிறார், வாணியம்பாடி சாரதிகுமார்.

சொத்துகளையும் நகைகளையும் பறித்துவிட்டதாக தன் மனைவி கொடுத்த புகாரிலும், மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் சொத்துகளை அபகரித்த புகாரிலும் சிக்கிய வாணியம்பாடி நகர தி.மு.க பொறுப்பாளர் வி.எஸ்.சாரதிகுமாரை சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க தலைமை அதிரடியாக நீக்கியது. புகார் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின்கீழ் சாரதிகுமார் மீது வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டன. இந்த நிலையில், வாணியம்பாடி நகரப் பொறுப்பில் சாரதிகுமாரை மீண்டும் நியமித்துள்ளது, தி.மு.க தலைமை.

தலைமைக் கழக அறிவிப்பு
தலைமைக் கழக அறிவிப்பு

இதுதொடர்பாக, `முரசொலி’யில் இன்று வெளியான அறிவிப்பில், `வேலூர் மேற்கு மாவட்டம், வாணியம்பாடி நகரப் பொறுப்பாளர் சாரதிகுமார் குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பொறுப்பிலிருந்து விடுவித்துக்கொண்டார். தற்போது, கழகப் பணியாற்ற அனுமதிக்குமாறு தலைவரிடம் வைத்த கோரிக்கையை ஏற்று இன்று முதல் வாணியம்பாடி நகரப் பொறுப்பாளராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது, ``ஏலகிரி மலையில் உள்ள சொகுசுப் பங்களாவில் சமீபத்தில் குடும்பத்துடன் ஓய்வெடுக்கச் சென்ற துரைமுருகனை சாரதிகுமார் சிறப்பாகக் கவனித்துள்ளார். அப்போது ஏற்பட்ட கரிசனத்தில், `விடுய்யா... நான் உனக்குப் பதவி வாங்கித் தர்றேன். தம்பி தலைமையேற்க வானு தலைமையே கூப்பிடப்போகுது பாரு’ என ஆசீர்வதித்தார் துரைமுருகன். அந்த நம்பிக்கையில் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பழையபடி சாரதிகுமார் தலைகாட்டத் தொடங்கினார்.

துரைமுருகன்
துரைமுருகன்

மேலும், கொரோனா உதவிகளை வழங்குவதற்கு 25 லட்ச ரூபாயை துரைமுருகனிடம் வழங்கியிருக்கிறார் சாரதிகுமார். அப்போதே எல்லாருக்கும் தெரியும். கலைஞரின் பிறந்தநாளில், சாரதிகுமார் தொடர்பான அறிவிப்பு முரசொலியில் இடம்பெறும் என்று எதிர்பார்த்தோம். இரண்டு நாள்கள் கழித்து அறிவிப்பு வந்துள்ளது’’ என்றனர்.

மீண்டும் பதவி கிடைத்த உற்சாகத்திலிருந்த சாரதிகுமாரிடம் பேசினோம். ``எனக்கு மீண்டும் பதவி கிடைக்கக் காரணம் பொருளாளர் மட்டுமே என்று சொல்லிவிட முடியாது. மாவட்டச் செயலாளர் இருக்கிறார். அவரும் பரிந்துரை செய்தார். வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. அரசியலுக்காக என்னிடம் விளையாடுகிறார்கள். அ.தி.மு.க-வின் தலையீடு நிறைய இருக்கிறது. ஒரேநாளில் இரண்டு வழக்குகளை என் மீது போட்டார்கள். காமராஜர் பிறந்த நாளில், லட்டு கொடுத்ததற்கும் வழக்கு பதிவு செய்தார்கள்.

சாரதிகுமார்
சாரதிகுமார்

நான், தி.மு.க-வின் முக்கியப் புள்ளி ஒருவருக்கு 25 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும், அவரால்தான் மீண்டும் பதவி கிடைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மீண்டும் பதவி கிடைப்பதற்காக நான் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. தி.மு.க தலைவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றதோடு முடித்துக் கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு