Published:Updated:

`இதை அப்போதே செய்திருக்கலாம்..!' - தயங்கிய கே.எஸ்.அழகிரி; சிரித்த ஸ்டாலின்

ஸ்டாலின் -அழகிரி சந்திப்பு
ஸ்டாலின் -அழகிரி சந்திப்பு

கே.எஸ்.அழகிரி சந்திப்புக்குப் பிறகு அழுத்தமான அறிக்கை ஒன்றை அளித்துள்ளார் ஸ்டாலின். இந்தச் சந்திப்புக்குப் பின்னால் பல சுவாரஸ்யங்களும் நடந்தேறியது என்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.

``திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என்று ஏங்கித் தவிக்கும் `குள்ள நரி சக்திகளுக்கும்' `சில ஊடகங்களுக்கும்' மேலும் அசைபோடுவதற்கான செயலாக அமைவதை நான் சிறிதும் விரும்பவில்லை'' என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்புக்குப் பிறகு அழுத்தமான அறிக்கை ஒன்றை அளித்துள்ளார் ஸ்டாலின். இந்தச் சந்திப்புக்குப் பின்னால் பல சுவாரஸ்யங்களும் நடந்தேறியது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி
ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி

தி.மு.க - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து ஏற்பட்டு வந்த விரிசலைப் பற்றி டெல்லி தலைமை ஆரம்பத்தில் கண்டுகொள்ளவில்லை. ஆனால், சோனியா கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தி.மு.க கலந்துகொள்ளாமல் போனதுமே அதன் வீரியத்தை காங்கிரஸ் மேலிடம் புரிந்துகொண்டது. அப்போது குலாம்நபி ஆசாத் தி.மு.க முதன்மைச் செயலாளர் டி.ஆர் பாலுவிடம் இதுகுறித்துக் கேட்டுள்ளார். உங்கள் மாநிலத் தலைவர் கொடுத்த அறிக்கையைப் பற்றி முதலில் விசாரியுங்கள் என்று சொல்ல, அதற்குப் பிறகுதான் சோனியாவை சந்திக்க அழகிரி அழைக்கப்பட்டார்.

அந்தச் சந்திப்பில், `சிதம்பரம் சொல்லித்தான் அறிக்கை கொடுத்தேன்' என்று அழகிரி கூறியதுதான், அவர் பதவி தப்பியதற்குக் காரணம் என்கிறார்கள். அதற்குப் பிறகு துரைமுருகன், மாணிக்தாகூர் என இரண்டு புறமும் விமர்சனங்கள் தொடரவே, தி.மு.க-வை விட்டுவிடக் கூடாது என்று காங்கிரஸ் முடிவு செய்து நாராயணசாமியிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்துள்ளது. மற்றொருபுறம் அகமது பட்டேல் மூலம் தி.மு.க-வின் மூத்த தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நாராயணசாமி - ஸ்டாலின் சந்திப்புக்குப் பிறகு, `அழகிரியை நேரா வரச்சொல்கிறோம்' என்று உறுதி கொடுக்கப்பட்டது. அந்தத் தகவலை நேரடியாக டெல்லிக்கும் சொல்லிவிட்டார் நாராயணசாமி, அங்கிருந்துதான் அழகிரிக்கு உத்தரவும் வந்திருக்கிறது.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

அழகிரி சந்திப்புக்கு தி.மு.க தரப்பிடம் கோபண்ணா மூலம் நேரம் கேட்டுள்ளார்கள். எடுத்தவுடன் இதற்கு பிடிகொடுக்கவில்லை தி.மு.க தலைமை. ஆனால், தொடர் முயற்சிக்குப் பிறகு நேரம் கொடுத்து இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. சந்திப்பின் ஆரம்பத்திலே அழகிரி, ``எனக்கு உங்கள் மீது எந்த வருத்தமும் இல்லை. ஆனால், மாவட்டவாரியாக கட்சியினர் பதவி கிடைக்காத ஆத்திரத்தில் எனக்குக் கொடுத்த அழுத்தமே அந்த அறிக்கை. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. நீங்கள் எங்களிடமே எந்தப் பதவியும் தரமுடியாது என்று சொல்லியிருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. உங்கள் கட்சியின் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுமே எங்கள் கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் நடந்து கொண்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.

ஸ்டாலின் ``நீங்கள் இப்போது வந்து பேசியது போன்று அப்போது வந்து இதே காரியத்தைச் செய்திருந்தால் இந்தப் பூசலுக்கு வாய்ப்பே இருந்திருக்காதே” என்று சிரித்துக்கொண்டே கேட்க, தயக்கத்துடன் அதை ஒப்புக்கொண்டுள்ளார். ``துரைமுருகன் எதற்காக இப்படி கூட்டணியை உதற நினைக்கிறார்” என்று காங்கிரஸ் தரப்பில் கேட்டுள்ளார்கள். அவரிடம், `நானும் இப்படி பேசியிருக்கக் கூடாது என்று வருத்ததைப் பதிவு செய்துள்ளேன்' என்று ஸ்டாலின் சமாதானம் செய்திருக்கிறார்.

தி.மு.க - காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு
தி.மு.க - காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

இந்தச் சந்திப்பில் இருதரப்பிலும் இருந்த கருத்து வேறுபாடுகள் சரிகட்டப்பட்டுவிட்டன. ஆனால், `பாதிக்கப்பட்ட கீழ்மட்ட நிர்வாகிகளிடம் இந்தச் சமாதானம் இப்போதைக்கு ஏற்படாது' என்று தெளிவாகச் சொல்கிறார்கள் இரண்டு கட்சியிலும்.

பின் செல்ல