Published:Updated:

காந்திசெல்வன் வளர்ந்த அளவுக்கு நாமக்கல்லில் கட்சி வளரவில்லை! காந்திசெல்வன் கவிழ்ந்த கதை

காந்திசெல்வன்
காந்திசெல்வன்

அறிவாலயத்தில் கலைஞர், காந்திசெல்வனைப் பார்த்தால்`காந்தி வளர்ந்த அளவுக்கு நாமக்கல்லில் கட்சி வளரவில்லை' என்று சிரித்துக்கொண்டே டோஸ் கொடுப்பார். அதைக் காந்தியும் பொருட்படுத்தமாட்டார்.

கொங்கு மண்டலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தோல்வி அடைந்ததையடுத்து கொங்கு மண்டலத்தில் களையெடுப்பை தொடங்கி இருக்கிறது தி.மு.க தலைமை. முதற்கட்டமாகச் சேலம், நாமக்கல் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து காந்திசெல்வன் நீக்கப்பட்டு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த ராஜேஷ்குமார் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

காந்திசெல்வன் ஆதரவாளர்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. `எதிர்பார்த்த விஷயம்தான்' என்று நிதானமாக இருக்கிறார்கள். ``நாமக்கல்லில் காந்தி அண்ணனை மீறி ஒரு அணுவும் அசையாது. பொறுத்திருந்து பாருங்கள். அண்ணன் ஐந்தாவது முறையாக மாவட்டச் செயலாளர் ஆகத்தான் போகிறார்'' என்கிறார்கள்.

காந்திசெல்வன்
காந்திசெல்வன்

காந்தி கவிழ்ந்த கதை...

காந்தி கவிழ்ந்ததற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக நாமக்கல் கழக உடன்பிறப்புகளிடம் பேசினோம், ``நாமக்கல் மாவட்டச் செயலாளராக இருந்தவர் வீரப்பன். இவருக்கு நெருக்கமாக இருந்த தமயந்தி, மாவட்ட கழகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கட்சியினர் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், மாவட்ட நிர்வாகிகளான பார் இளங்கோ, மூர்த்தி, கணேசன் ஆகியோருக்குப் பிடிக்காததால் எதிர் கோஷ்டியாக உருவெடுத்தார்கள். மாவட்ட மாணவரணிச் செயலாளராக இருந்த காந்திசெல்வன் தமயந்தியின் செல்லப் பிள்ளையாகத்தான் முதலில் இருந்தார்.

உட்கட்சி தேர்தலில் பார் இளங்கோ கோஷ்டி வெற்றிபெறும் சூழலை அறிந்த காந்தி, பார் இளங்கோ கோஷ்டியில் சேர்ந்தார். பிறகு அந்த கோஷ்டியின் தலைவரானதோடு நாமக்கல் மாவட்டச் செயலாளராகவும் தேர்தெடுக்கப்பட்டார். இதுதான் காந்திசெல்வனின் அரசியல் வரலாறு. தொடர்ந்து 16 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்த காந்தி கரன்சியில் புரளும் அளவுக்கு தனக்காக சம்பாதித்துக்கொண்டாரே தவிர கட்சிக்கென்று ஒரு அடி நிலம் கூட வாங்கவில்லை. கட்சிக்காரர்களையும் வளர்த்துவிடவில்லை என்பது உடன்பிறப்புகளின் நீண்ட காலக் குற்றச்சாட்டு.

காந்தி
காந்தி

அதனாலேயே அறிவாலயத்தில் கலைஞர், காந்திசெல்வனைப் பார்த்தால் ``காந்தி வளர்ந்த அளவுக்கு நாமக்கல்லில் கட்சி வளரவில்லை'' என்று சிரித்துக்கொண்டே டோஸ் கொடுப்பார். அதைக் காந்தியும் பொருட்படுத்தமாட்டார். கட்சியும் கண்டுகொள்ளாமல் இருந்தது. ஆனால், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் பரமத்திவேலூர் தொகுதியில் மட்டுமே தி.மு.க வெற்றி பெற்றது. மற்ற 5 தொகுதிகளில் படுதோல்வி அடைந்தது.

இதனால் கடுப்பான கட்சித் தலைமை அதிரடியாக காந்திசெல்வனை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டுத் தேர்தல் பணிக்குழுச் செயலாளராக இருந்த பார் இளங்கோவை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தது. இரண்டே ஆண்டுகளில் தலைமையை கரெக்ட் செய்து மீண்டும் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியைக் காந்தி பெற்றார். இனியாவது கட்சிக்காக உழைப்பார் என்று எதிர்பார்த்த உடன்பிறப்புகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

காந்தி
காந்தி

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல் மாவட்ட கவுன்சிலர்கள் 17 பேரில் அ.தி.மு.க கூட்டணியில் 13 பேரும், தி.மு.க கூட்டணியில் 4 பேரும் வெற்றி பெற்றார்கள். குறிப்பாக, கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் 10 பேரில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். அதேபோல ஒன்றிய கவுன்சிலர்கள் 172 பேரில் அ.தி.மு.க கூட்டணியைச் சேர்ந்தவர்கள் 101 பேரும், தி.மு.க கூட்டணியைச் சேர்ந்தவர்கள் 67 பேரும் வெற்றிபெற்றார்கள். அதிக ஒன்றியங்களில் தி.மு.க தோல்வி அடைந்ததற்கு நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் காந்திசெல்வன்தான் காரணம். கட்சித் தலைமையை புறக்கணித்தவர்களுக்கு அவர் சீட் வழங்கியதும், மக்கள் மத்தியில் செல்வாக்கு உடையவர்களுக்கு சீட் வழங்காததும் நாமக்கல்லில் தி.மு.க தோல்வி அடையக் காரணம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில், இவர் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு மாவட்டத்தில் நாமக்கல், எருமப்பட்டி, மோகனூர், கொல்லிமலை, சேந்தமங்கலம், புதுசத்திரம், வெண்ணந்தூர், ராசிபுரம், நாமக்கிரிப்பேட்டை என 9 ஒன்றியங்கள் இருக்கின்றன. இதில் ராசிபுரம், சேந்தமங்கலத்தில் மட்டுமே தி.மு.க அதிக கவுன்சிலர்களைப் பெற்றுள்ளது. மற்ற ஒன்றியங்களில் தி.மு.க தோல்வி அடைந்துள்ளது. தலைமை இல்லாத அ.தி.மு.க மீது தமிழக மக்கள் பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

காந்தி
காந்தி

இந்தத் தருணத்தில் தி.மு.க நாமக்கல்லில் படுதோல்வி அடைந்தது. மாவட்டச் செயலாளர் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 3 நாள்கள் ஒதுக்கி, ஒவ்வொரு ஊராட்சிக்கும் சென்று அங்குள்ள கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை செய்திருந்தாலே, அனைத்து ஊராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றி இருக்கும். ஆனால், காந்திசெல்வன் முழுமையாகக் கட்சிப் பணிகளைச் செய்யவில்லை. பெயரளவுக்கு வேட்பாளர் அறிமுகக் கூட்டம் என ஒன்றியத்துக்கு ஒரு கூட்டத்தைப் போட்டுக் கணக்கு காட்டினாரே தவிர தி.மு.க வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னார்வத்தோடு செயல்படவில்லை.

மாறாகக் கடந்த சட்டமன்றத் தேர்தலில் உள் குத்து வேலை பார்த்த வெண்ணந்தூர் முன்னாள் தி.மு.க ஒன்றியச் செயலாளர் சேகர் பெரியசாமியை, கட்சித் தலைமை விசாரணை மேற்கொண்டு அவரை ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது. ஆனால், அவருக்கு ஒன்றிய கவுன்சிலர் சீட் கொடுத்தார். உண்மையில் அவருக்குக் கட்சிக்காரர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு இல்லாததால் அவர் தோல்வி அடைந்துள்ளார்.

கடிதம்
கடிதம்

அதேபோல புதுச்சத்திரத்தில் தி.மு.க-வில் மிகுந்த செல்வாக்குடைய செந்தில்குமார் மாவட்ட கவுன்சிலருக்கு சீட் கேட்டார். அவருக்குக் கட்சிக்காரர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு இருந்தது. அவருக்கு சீட் கொடுக்காமல் கவுதம் என்பவருக்கு சீட் கொடுத்தார். இதை அமைச்சர் தங்கமணி பயன்படுத்திக்கொண்டு செந்தில்குமாரை அ.தி.மு.க பக்கம் இழுத்து அவருக்கு அ.தி.மு.க சார்பாக சீட் வழங்கினார். செந்தில்குமார் எளிதாக வெற்றிபெற்று மாவட்டக் கவுன்சிலர் ஆகிவிட்டார்.

தேசத்துரோக வழக்கு... குழந்தைகளிடம் விசாரணை..! சி.ஏ.ஏ நாடகம் உருவாக்கிய சர்ச்சைகள்

கொல்லிமலை ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியம் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். அவர் மீது தலைமையில் தவறான தகவல் கொடுத்து அவரை நீக்கிவிட்டு, செந்தில்முருகனை ஒன்றியச் செயலாளராக நியமித்தார். கொல்லிமலையில் 6 ஒன்றிய கவுன்சிலர்களில் ஒரு இடத்தில் கூட தி.மு.க வெற்றி பெறவில்லை. இப்படி மோகனூர், நாமகிரிப்பேட்டை எனப் பல ஒன்றியங்களில் கட்சிக்காக உண்மையாக உழைக்கக் கூடிய நிர்வாகிகளை நீக்கிவிட்டு, இவருக்கு ஜால்ரா அடிக்கும் நிர்வாகிகளை நியமித்துள்ளார். இதனால் நாமக்கல்லில் தி.மு.க தோல்வி அடைந்துள்ளது.

ஆளுங்கட்சியினரோடு இணக்கமாக இருந்துகொண்டு காவிரிக் கரையோரப் பகுதிகளில் மணல் கடத்தலில் கட்டிங் பெற்றது என அனைத்து ஆவணங்களையும், கடந்த 21-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் புகாராகக் கொடுத்தார்கள். இந்தப் புகார்களைக்கூட தலைமை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் 2.50 லட்சம் ஓட்டுகள் அதிகம் வாங்கினோம். அந்த ஓட்டுகள் எங்கே போனது என்று கேள்விக்கு காந்தியிடம் பதில் இல்லாததால் பதவி பறிபோனது. அந்தப் பதவிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ்குமார் வந்திருக்கிறார்'' என்கிறார்கள்.

ராஜேஸ்குமார்
ராஜேஸ்குமார்

இது சம்பந்தமான விளக்கத்தைக் கேட்பதற்காக காந்திசெல்வனைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் அழைப்பை எடுக்கவில்லை. அதையடுத்து, அவருடைய ஆதரவாளர்களிடம் பேசினோம், ``கொங்கு மண்டலத்தில் நாமக்கல்லில் மட்டும்தான் தி.மு.க தோல்வி அடைந்ததா? கொங்கு மண்டலத்தில் உள்ள பல மாவட்டங்களில் தி.மு.க தோல்வி அடைந்துள்ளது. அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தலைமை இல்லாத அ.தி.மு.க 3 ஆண்டுகள் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தி.மு.க தலைமையை முதலில் மாற்ற வேண்டும்'' என்றார்கள் காட்டமாக.

புதியதாக நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ராஜேஷ்குமார் தரப்போ, ``நாங்கள் சென்னையில் இருக்கிறோம். தலைமையின் அனுமதியில்லாமல் பேச முடியாது'' என்றார்கள்.

தி.மு.க-வுக்கு பணியாற்ற பிரசாந்த் கிஷோர் அணிக்கு மாதம் எவ்வளவு? பின்னணி விவரங்கள்
அடுத்த கட்டுரைக்கு