Published:Updated:

`பா.ஜ.கவின் தந்திரமா... பழிவாங்கும் படலமா?' - ஜோதிர் ஆதித்ய சிந்தியா முடிவின் பின்னணி

ஜோதிராதித்ய சிந்தியா

இது, பா.ஜ.க-வின் சதி என்று ஒருபுறம் காங்கிரஸ் கட்சியினர் அடித்துக் கூற, இது சிந்தியாவின் நீண்ட கால திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்று வேறு கதை சொல்கிறார்கள், சில அரசியல் பார்வையாளர்கள்.

`பா.ஜ.கவின் தந்திரமா... பழிவாங்கும் படலமா?' - ஜோதிர் ஆதித்ய சிந்தியா முடிவின் பின்னணி

இது, பா.ஜ.க-வின் சதி என்று ஒருபுறம் காங்கிரஸ் கட்சியினர் அடித்துக் கூற, இது சிந்தியாவின் நீண்ட கால திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்று வேறு கதை சொல்கிறார்கள், சில அரசியல் பார்வையாளர்கள்.

Published:Updated:
ஜோதிராதித்ய சிந்தியா

இந்திய அரசியலில் கட்சித் தாவல் என்பது ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு நாள் விடிந்ததும், யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என ஒரு ப்ரெஷ் அப்டேட் செய்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்ட அரசியல் சூழல் எல்லாம் இந்தியாவில் உண்டு. அப்படி தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது, காங்கிரஸிலிருந்து விலகி, பா.ஜ.க -வில் சேர்ந்திருக்கும் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் முடிவு. அதிலும், சிந்தியா எனும் தனிநபர் மட்டுமில்லாது, மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியிலிருந்து சில அமைச்சர்கள் உட்பட, சுமார் 20 எம்.எல்.ஏ- க்கள் ஆளுநருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சி அங்கு நிலைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Indian National Congress
Indian National Congress

இந்தியாவில் தன்னுடைய செல்வாக்கை வெகுவாக இழந்துவிட்டிருக்கிறது காங்கிரஸ். 2019-ம் ஆண்டு தேர்தலில், மீண்டும் பா.ஜ.க வென்றதற்கே, ஒரு சக்திவாய்ந்த எதிர்க்கட்சியாக, சம போட்டியாகக் காங்கிரஸ் இல்லாமல் போனதுதான் காரணம் என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்த நிலையில், 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியிலிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தியா, கட்சியை விட்டு விலகியிருப்பது, மத்தியப்பிரதேசத்தில் மட்டுமில்லாமல், இந்திய அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சியின் பலத்தை, நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இந்தியப் பரப்பில் ஊன்றியிருக்கும் காங்கிரஸின் ஆணிவேர், மெதுவாக அதன் பிடிமானத்தை இழந்துவருவதாகக் கலக்கமடைந்திருக்கிறது, காங்கிரஸ். தனது ராஜினாமா கடிதத்தை சிந்தியா வழங்கியதும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, பல காங்கிரஸ் தலைவர்கள் ஊடகங்களிடமும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்ததைப் போல் மத்தியப் பிரதேசத்திலும், சூழ்ச்சி முறையில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க முயல்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ராகுல் - சிந்தியா
ராகுல் - சிந்தியா
ராகுல் காந்தி, அவரது ராஜினாமா குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், "சிந்தியாவை நீங்கள் சந்திப்பதைத் தவிர்த்தீர்களாமே?" என்ற மீடியாவின் கேள்விக்கு, " என் வீட்டினுள் எப்போது வேண்டுனாலும் நுழையக்கூடிய ஒரே நபராக அவர்தான் இருந்தார். நாங்கள் ஒன்றாகக் கல்லூரியில் பயின்றவர்கள்" என்று பதிலளித்திருந்தார் ராகுல் காந்தி. சிந்தியாவின் முடிவு, அவரை பர்சனலாகவே கலக்கமடையச் செய்திருக்கிறது.

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலோட் இது பற்றிக் கூறுகையில், " சிந்தியா, மக்களுக்கும் அவரின் கொள்கைகளுக்கும் துரோகம் இழைத்திருக்கிறார்" என்றும், காங்கிரஸ் எம்.எல்.ஏ அர்ஜுன் சிங், “ராஜாக்களின் காலம் முடிந்துவிட்டது, சிந்தியா ராஜினாமா செய்ததால் எந்த பாதிப்பும் இல்லை" என்றும் காட்டமாகக் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

சிந்தியா - கமல்நாத்
சிந்தியா - கமல்நாத்

மத்தியப்பிரதேச மாநில முதல்வர் கமல்நாத், ''மாஃபியாக்கள் உதவியுடன் அரசைக் கவிழ்க்க நினைக்கும் சக்திகளை வெற்றிபெற விடமாட்டேன். என்னைப் பொறுத்தவரை அரசாங்கம் என்பது மக்களுக்கு சேவை செய்யக் கிடைக்கும் ஒரு வாய்ப்பு. ஆனால், பா.ஜ.க 15 ஆண்டுகளாகத் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது. தற்போது, மீண்டும் தவறாகப் பயன்படுத்தி அரசைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்" என்றார்.

முன்னாள் மத்தியப் பிரதேச முதலமைச்சர் திக்விஜய் சிங்," சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ-க்களை மாநிலத்தை விட்டு வெளியே அழைத்துச்செல்ல பா.ஜ.க தான் மூன்று விமானங்களை வாடகைக்கு எடுத்து உதவியது" என்று நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலின்போது, கமல்நாத் - சிந்தியா இடையே பதவிப்போட்டி நிலவியது. ஆனால், காங்கிரஸ் தலைமை ஆதரவுடன் கமல்நாத் முதல்வரானார். அப்போது மீண்ட பனிப்போர், பா.ஜ.க-வின் தலையீட்டால் வளர்த்தெடுக்கப்பட்டு, ராஜ்யசபா தேர்தல் பகடையைப் பயன்படுத்தி, சிந்தியா பா.ஜ.க வசம் வென்றெடுக்கப்பட்டார் என்கிறது காங்கிரஸ். இது பா.ஜ.க -வின் சதி என்று ஒருபுறம் காங்கிரஸ் கட்சியினர் அடித்துக் கூற, இது, சிந்தியாவின் நீண்ட கால திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்று வேறு கதை சொல்கிறார்கள், சில அரசியல் பார்வையாளர்கள்.

சிந்தியா - கமல்நாத் - திக்விஜய்
சிந்தியா - கமல்நாத் - திக்விஜய்

ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த தினம், அவரது தந்தை மாதவ்ராவ் சிந்தியாவின் 75-வது பிறந்த தினம். இது, ஏதோ தற்செயலாக நிகழ்ந்த விஷயமல்ல. பரம்பரை பரம்பரையாக, சிந்தியாவின் குவாலியர் வம்சத்தினர் காங்கிரஸ் கட்சியினால் ஓரம்கட்டப்பட்டு, பதவி நிராகரிக்கப்பட்டு, அவமானப்படுத்தப் பட்டதற்குப் பதிலடியாகப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது.

ஜோதிராதித்யாவின் பாட்டி, குவாலியர் அரச பரம்பரையின் ராஜமாதா என அழைக்கப்படும் விஜயராஜே சிந்தியா, காங்கிரஸ் கட்சி உறுப்பினராக மூன்று லோக் சபா தேர்தல்களில் வெற்றிபெற்றவர். ஆனால், விஜயராஜே சிந்தியா, இந்திரா காந்தியுடன் பல்வேறு கருத்து மோதல்களைக் கொண்டிருந்தார். இந்திரா, அவரின் அமைச்சர் பதவியைப் பறித்தது, எமெர்ஜென்சி சமயத்தில் அவரைக் கைதுசெய்தது என அவர்களின் பகை பெரிதாய் வளர்ந்தது . இதனால்,1967- ம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்தார். விஜயராஜேவுக்கு ஆதரவாக 36 எம்.எல்.ஏ- க்களும் கட்சியிலிருந்து வெளியேறிவிட, மத்தியப் பிரதேசத்தில் அப்போது காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. ஜன சங்-கில் இணைந்த விஜயராஜே சிந்தியா, பா.ஜ.க-வின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகித்தவர்.

குவாலியர் சமஸ்தானம்
குவாலியர் சமஸ்தானம்

விஜயராஜே சிந்தியாவின் மகனான மாதவ்ராவ் சிந்தியா, ஜன சங்-கிலிருந்து விலகி, 1980-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். ராஜீவ் காந்திக்கு மிக நெருக்கமானவராக, முக்கிய ஆலோசகராக, ரயில்வே துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் அமைச்சராக இருந்த மாதவ்ராவ் சிந்தியா, ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு, ஓரம்கட்டப்பட்டார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் ஆகும் அவரது கனவு நிறைவேறவில்லை. நரசிம்மராவ், சீதாராம் கேசரி ஆகியோரின் ஆதிக்கம் குறைந்த பின்னர், மீண்டும் காங்கிரஸ் கட்சியினுள் வந்த மாதவ்ராவ் சிந்தியா, 2001-ம் ஆண்டு விமான விபத்தில் மரணித்தார். பிரதமர் பதவிக்கான வாய்ப்புகூட அப்போது அவருக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, குவாலியர் அரச வம்சத்தின் மூன்றாவது தலைமுறை வாரிசான ஜோதிராதித்ய சிந்தியா, ராகுல் காந்தியின் உற்ற நண்பர், ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஒருகட்டத்தில், ராகுல் காந்திக்கு இவர் மிக நெருக்கமான அரசியல் ஆலோசகராக இருந்தார். ராகுலின் வலதுகரமாக காங்கிரஸ் அவரைப் பார்த்தது. அவ்வளவு இருந்தும், ''தனக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டால், அதை பொறுப்புடன் ஏற்றுக்கொள்வேன்'' என்று ஜோதிராவ் ஆதித்ய சிந்தியா வெளிப்படையாகவே தெரிவித்தும்கூட, நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு கமல்நாத் முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனால் சிந்தியாவுக்கும் அவர் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கும் ஏமாற்றம்.

இதனால்தான், பா.ஜ.க-வின் பதவி பேரத்தைத் தாண்டி, தனது குடும்பம் காங்கிரஸ் கட்சியினரால் தொடர்ந்து ஏமாற்றத்துக்கு ஆளாகிறது என்பதே ஜோதிராதித்ய சிந்தியா எடுத்த இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார்கள், இந்த வரலாற்றை அறிந்த அரசியல் பார்வையாளர்கள். மம்தா பானர்ஜி தொடங்கி தற்போது ஜோதிராதித்யா சிந்தியா வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய மாநிலத் தலைவர்களின் பட்டியல் ஏராளம். காங்கிரஸின் இந்தப் பலவீனத்தை, பா.ஜ.க தன்னுடைய பலமாக மாற்றிக்கொண்டது.

இன்று சிந்தியா... நாளை யாரோ ?