Published:Updated:

'யாரை எச்சரிக்கிறார் கமல்ஹாசன்?'- வீடியோ வெளியிட்டதன் பின்னணி என்ன?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

`பயணம் தொடரும். உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் உள்ளவரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார் கமல்.

கொரோனா மீடியா புல்லட்டின்போல நாள்தோறும் கமலின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து நிர்வாகிகள் வெளியேறிக்கொண்டே இருந்தனர். இந்தநிலையில், அத்தகையவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல். அதில், "தோல்வியை ஆராய்ந்து பாடம் கற்க வேண்டும் என்பதுதான் அரசியல் மரபு. முக அறிமுகமில்லாதவர்களை மின்னவைக்க நினைத்ததுதான் அவர்களுக்குச் சர்வாதிகாரமாகத் தெரிந்திருக்கிறது. திறமை அடிப்படையில் வந்த சில நாள்களிலேயே பெரும் பொறுப்பு கொடுத்தது அன்று ஜனநாயகமாகத் தெரிந்தது. கூட்டணியைத் தேர்ந்தெடுக்க பொறுப்புக் கொடுத்தது ஜனநாயகமாகத் தெரிந்தது. தோல்விக்குப் பொறுப்பேற்கச் சொன்னால் ஜனநாயகம் இல்லை! நாடோடிகள் ஓரிடத்தில் தங்க மாட்டார்கள். சிலர் சென்ற வழியே வருவார்கள் ஆனால் மீண்டும் கட்சியை அசுத்தப்படுத்தவிட மாட்டோம். கட்சியைத் தனி மனிதர்கள் தங்கள் ஆதாயத்துக்கேற்ப மாற்றி ஆடியது இனி நடக்காது. உருமாறிய மக்கள் நீதி மய்யத்தைக் காண்பார்கள். பயணம் தொடரும். உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் உள்ளவரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்" என்று பதிலடி கொடுத்திருக்கிறார் கமல்.

இது பற்றிப் பேசிய கமலுக்கு நெருக்கமானவர்கள், "வெளியேறியவர்கள் கூறிய முக்கியக் குற்றச்சாட்டான ஜனநாயகம் இல்லை என்பதற்குப் பக்காவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். மற்றொரு குற்றச்சாட்டான வியூக நிறுவனமான சங்கையா சொல்யூஷன்ஸ் பற்றி நேரடியாகச் சொல்லாவிட்டாலும், 'கட்சி கட்டமைப்பைத் தங்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்துவது இனி தொடராது' என்கிற வார்த்தை மறைமுகமாக சங்கையா நிறுவனர்கள் டி.வி மகேந்திரன் மற்றும் சுரேஷ் ஐயரைத்தான் குறிக்கிறது. சென்றவர்கள் மீண்டும் வந்தால் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார் கமல். எத்தனை தோல்விகள் ஏற்பட்டாலும் அரசியலில் இருப்பேன் என்றும், கட்சியும் இருக்கும் என்பதையும் உரக்கச் சொல்லியிருக்கிறார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு