Published:Updated:

`தி.மு.க பேரணியில் ஏன் பங்கேற்கவில்லை?!' -சர்ச்சைக்குப் பாரிவேந்தரின் விளக்கம்

பேரணியை பாரிவேந்தர் புறக்கணிக்க என்ன காரணம் என்றெல்லாம் கேள்வி எழுதப்பட்டது. இவ்விவகாரம் கூட்டணிக்கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க பேரணி
தி.மு.க பேரணி

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க-வில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் பேரணி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் கலந்து கொள்ளாதது கூட்டணிக் கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க கூட்டணிக் கட்சிகள்
தி.மு.க கூட்டணிக் கட்சிகள்

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இன்று பேரணி நடத்தின.

இந்தப் பேரணி இன்று காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் தொடங்கியது. இந்தப் பேரணியில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.எம், சி.பி.ஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் உட்பட பல கட்சிகள் பங்கேற்றன.

பேரணி
பேரணி

ஆனால், பெரம்பலூர் எம்.பி-யும் ஐ.ஜே.கே தலைவருமான பாரிவேந்தர் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து பாரிவேந்தரிடமே கேட்டோம்.

``இந்தப் பேரணிக்கு என்னுடைய முழு ஆதரவையும் முன்பே தெரிவித்திருக்கிறேன். மேலும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்து பேசியிருக்கிறேன். கடந்த நான்கு நாள்களாகக் கடுமையான முகுதுவலி பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறேன். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வில் இருக்கிறேன்.

பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர்
பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர்

இதை தி.மு.க தலைமைக்குத் தெரியப்படுத்திவிட்டேன். பேரணி முடிந்த பிறகு பேரணியின் வெற்றி குறித்து தி.மு.க தலைவரிடம் பேச இருக்கிறேன். இப்பேரணியில் எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் கொள்கைபரப்பு துணைச் செயலாளர், அமைப்புச் செயலாளர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். நான் வராததற்குக் காரணம் உடல்நலப் பிரச்னைதான். நீங்கள் நினைப்பதுபோல் எதுவும் இல்லை" என்று முடித்துக்கொண்டார்.