Published:Updated:

` யார் இந்தப் புகழேந்தி?' - விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க வேட்பாளர் தேர்வான பின்னணி!

விழுப்புரம் மாவட்ட தி.மு.க பொருளாளரான நா.புகழேந்தியை வேட்பாளராக அறிவித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

pugazhendi
pugazhendi

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த தி.மு.க-வைச் சேர்ந்த ராதாமணி உடல் நலக்குறைவால் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 21-ம் தேதி அங்கு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் நேரடியாக மோதும் இந்தத் தொகுதியில் விழுப்புரம் மாவட்ட தி.மு.க பொருளாளரான நா.புகழேந்தியை வேட்பாளராக அறிவித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

pugazhendi
pugazhendi

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட அத்தியூர் திருவாதியைச் சேர்ந்த புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர். முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தீவிர விசுவாசி. 1973-ம் ஆண்டு கிளைக் கழகச் செயலாளராக கட்சியில் சேர்ந்த இவர், 1980-86 காலகட்டங்களில் மாவட்டப் பிரதிநிதியாக இருந்தார். 1989-ல் பொன்முடி முதல் முறையாக விழுப்புரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்காக கடுமையாக தேர்தல் பணி செய்தவர். அதற்கு நன்றிக்கடனாக இவருக்கு 1996-ல் கோலியனூர் ஒன்றிய சேர்மன் பதவியையும் 2006-ம் ஆண்டு இவரின் மருமகளுக்கு சேர்மன் பதவியையும் வழங்கி அழகுபார்த்தார் பொன்முடி.

பொன்முடியின் அரசியல் வாழ்க்கையில் இக்கட்டான தருணங்களாக செஞ்சி ராமச்சந்திரன், ஏ.ஜி.சம்பத் போன்றவர்கள் தி.மு.க-வின் விழுப்புரம் மாவட்டத் தலைவர்களாக இருந்த காலத்தைக் கூறலாம். அத்தகைய தருணங்களில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே பொன்முடிக்கு ஆதரவாக இருந்தனர். அதில் ஒருவர் இறந்துபோன விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ ராதாமணி. மற்றொருவர் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நா.புகழேந்தி.

ponmudi
ponmudi

அந்த விசுவாசத்தைத்தான் இப்போதும் பொன்முடி திருப்பிக் காட்டுகிறார். அதேசமயம், ` தி.மு.க சார்பில் போட்டியிட தகுதியான ஒருவர்கூட தொகுதிக்குள் இல்லையா.. கடந்த 3 தேர்தல்களிலும் வெளித் தொகுதியைச் சேர்ந்தவர்களையே தலைமை வேட்பாளராக நிறுத்துகிறதே' என்ற புலம்பல்களையும் தொகுதிக்குள் காண முடிகிறது.