Published:Updated:

``எங்களுக்கு பக்கபலமாக இருக்கணும்!''- ஸ்டாலின்- காதர் மொய்தீன் சந்திப்பின் பின்னணி

அ.தி.முக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவார்களா என்கிற சந்தேகம் எங்களுக்குள் எழுகிறது.

காதர் மொய்தீன்
காதர் மொய்தீன்

பா.ஜ.க ஆட்சியில் அயோத்தி விவகாரம் குறித்து எந்த முஸ்லிம் அமைப்புகளும் பெரிதாகக் குரல்கொடுக்காத நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கட்சித்தலைவர்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசிய விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் நீடிப்பது ஏன்? காதர் மொய்தீன் விளக்கம்
தி.மு.க. கூட்டணியில் நீடிப்பது ஏன்? காதர் மொய்தீன் விளக்கம்

அயோத்தி விவகாரம் இந்தியா முழுவதும் மட்டுமல்ல உலகமே திரும்பிப் பார்க்க வைத்த வழக்கு. இந்த நிலையில் தி.மு.க தலைவரைச் சந்தித்துப் பேசிய விவகாரம் அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. அவரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், “உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றுவது தொடர்பாகக் கருத்துகள் விவாதிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தமிழகத்தை ஆளக்கூடிய அரசு உண்மையிலேயே தேர்தல் நடத்தினால் தி.மு.க அமோக வெற்றி பெறும்.‌

இதில் எந்த மாற்றமும் இல்லை. நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வைக் கொடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பை வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்பு, வெறுப்புக்கும் உட்படுத்தாமல், அனைத்துத் தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு, மதநல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

காதர் மொய்தீன்
காதர் மொய்தீன்

இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் கடையநல்லூர் எம்.எல்.ஏவுமான அபுபக்கரிடம் தொடர்புகொண்டு பேசினோம். ``அ.தி.மு.க அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவார்களா என்கிற சந்தேகம் எங்களுக்குள் எழுகிறது. காரணம் அவர்கள் முதலில் நேரடித்தேர்தல் நடத்துவதாகச் சொன்னார்கள். இப்பொழுது மறைமுகத்தேர்தல் நடத்தப்போவதாகச் சட்டம் ஏற்றுகிறார்கள். இவர்களே முன்னுக்குப் பின் கருத்துகளை அடுத்தடுத்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது எப்படி சந்தேகம் வராமல் இருக்கும். நீங்களே சொல்லுங்கள்.

அத்தோடு 2004-ல் கருணாநிதி இருந்தபோது தேசிய அளவில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து தவிர்க்கமுடியாத சக்தியாக இருந்தது. அதே போன்று மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று எங்களது தேசிய தலைவர் காதர் மொய்தீன் டெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதே கருத்தை ஸ்டாலினிடமும் எடுத்துக் கூறினார். அவரும் ஏற்றுக்கொண்டார்.

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்
தே.சிலம்பரசன்

அத்தோடு அயோத்தி விவகாரத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கடுமையான எதிர்ப்புகளைப் பதிவுசெய்தது தி.மு.கதான். பி.ஜே.பி யால் சிறுபான்மை சமூகத்தினர் தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் பயத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமையைப் போக்கவேண்டும். எங்களுக்கு தி.மு.க பக்கபலமாக இருக்கவேண்டும் என்று எடுத்துக்கூறினோம். அதற்கு அவரும் ஆதரவு அளித்ததோடு மத்திய அரசு நடந்துகொள்ளும் விதத்தைப் பற்றி விரிவாகப் பேசினோம். அத்தோடு உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் கண்டிப்பாக தி.மு.க கூட்டணி வெற்றி பெறும். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்று முடித்துக்கொண்டார்.