Published:Updated:

`வாஷ் அவுட் என்று தானே ரிப்போர்ட் கொடுத்தீங்க..!’ - ஐபேக்-விடம் கடுகடுத்த ஸ்டாலின்

ஐபேக் - ஸ்டாலின்
ஐபேக் - ஸ்டாலின்

தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கும் இச்சமயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதியம் 2 மணி நிலவரப்படி தி.மு.க கூட்டணி 146 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 87 இடங்களிலும், ம.நீ.ம ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது. இதில் தி.மு.க மட்டும் 119 தொகுதிகளிலும், அ.தி.மு.க மட்டும் 81 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. நேரம் செல்லச்செல்ல தி.மு.க-வின் முன்னிலை கூடக்கூடும். இருந்தபோதும் ஸ்டாலின் கொஞ்சம் அப்செட்டில்தான் இருக்கிறாராம்.

ஏன்? என்ற கேள்வியுடன் செனடாப் சாலை ஸ்டாலின் இல்லத்தில் இருக்கும் தி.மு.க நிர்வாகியைத் தொடர்புகொண்டோம். “கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடுவோம் என்பதில் ஸ்டாலினுக்குத் துளியும் சந்தேகமில்லை. ஆனால், அது 2006 போல மைனாரிட்டி ஆட்சியாகிவிடக் கூடாது என்பதுதான் ஸ்டாலினின் கவலை. தி.மு.க மட்டுமே தனியாக ஒன்னரை மணியளவில் 119 தொகுதிகளில்தான் முன்னிலையில் இருக்கிறது. இதுவே ஆட்சி அமைப்பதற்குத் தேவைப்படும் மெஜாரிட்டியை விட ஒரு தொகுதி கூடுதல்தான். ஆனால், நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கிறது.

எடப்பாடி தலைமைக்கெல்லாம் வாக்குகள் விழுமா? என்ற மிதப்பில் இருந்தோம். ஆனால், இன்று மேற்கு மற்றும் வடக்கில் கவுண்டர் மற்றும் வன்னியர் கன்சாலிடேஷனில் மிகுதியாக வாக்குகளை அள்ளுகிறது அ.தி.மு.க. தி.மு.க-வுக்காக பணியாற்றிய ஐபேக், ஸ்டாலினிடம் சொன்ன எண்ணிக்கை 200! தி.மு.க கூட்டணி 200 தொகுதிகளைக் கைப்பற்றும், தி.மு.க தனித்தே 150 தொகுதிகளைத் தாண்டும் என்றுதான் ஐபேக் சொன்னது. ஆனால், நிலைமையைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. இதே நிலையே நீடிக்குமே தவிர, 200 வரை தி.மு.க கூட்டணி முன்னேர வாய்ப்பில்லை. இதனால், டென்ஷனான ஸ்டாலின் ஐபேக் முக்கிய பொறுப்பாளர்களை போனில் அழைத்து கடிந்துகொண்டார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பா.ஜ.க எல்லாம் எப்படி 4 இடங்களில் முன்னிலையில் இருக்காங்க... வாஷ் அவுட் என்று தானே ரிப்போர்ட் கொடுத்தீங்க. தேர்தலுக்கு முன்பாக நீங்க கொடுத்த வேட்பாளர்கள் பெயரைகளை அப்படியே அறிவித்திருந்தால், இந்த அளவுக்கு கூட வந்திருக்க முடியாது” என்று கடிந்துகொண்டதாக நம்மிடம் பேசிய நிர்வாகி தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு