Published:Updated:

அன்பில் மகேஷ் அரசியலுக்கு செக் வைத்த கே.என்.நேரு... மகனைக் களத்தில் இறக்கி பதிலடி!

கே.என்.நேருவின் மகன்  அருண்நேரு
கே.என்.நேருவின் மகன் அருண்நேரு

`கே.என்.நேருவைச் சென்னைக்கு பார்சல் செய்துவிட்டோம். இனி திருச்சியில் அண்ணன்தான் எல்லாம்’ என அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் கூறினார்களாம். அதனால்தான், நேரு தன் மகன் அருணை களமிறக்கியுள்ளார்...

கடந்த 28 ஆண்டுகளாக திருச்சி தி.மு.க மாவட்டச் செயலாளராக வலம்வந்தவர் கே.என்.நேரு. இவரை, முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதி, கட்சித் தலைமையில் முக்கியப் பதவி தருவதாக அழைத்தார். ஆனால் நேருவோ, ''மாவட்டச் செயலாளராகவே இருக்கிறேன். ஊர்ல விவசாயம் இருக்கு அதைக் கவனித்துக்கொண்டு லோக்கல்லயே இருந்துவிடுகிறேன்'' என மறுத்துவந்தார். சில வருடங்களுக்கு முன்பு, திருச்சி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தபோதும், அதே நிலைப்பாட்டில் நேரு உறுதியாக இருக்கவே, அவர் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரானார். அவர் கைகாட்டிய காடுவெட்டி தியாகராஜன் வடக்கு மாவட்டச் செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

அரசியல் மேடையில் ஸ்டாலினுடன் அருண்நேரு
அரசியல் மேடையில் ஸ்டாலினுடன் அருண்நேரு

கருணாநிதிக்குப் பிறகு எல்லாம் மாறியது. தற்போதைய தலைமையின் விருப்பத்துக்கு ஏற்ப, சமீபத்தில் தி.மு.க-வின் முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு அறிவிக்கப்பட்டார். அவர் வசமிருந்த திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் உள்ள நெருக்கத்தின் மூலம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றார்.

இவர்களின் அரசியலால், திருச்சி தி.மு.க மாவட்டங்கள் மூன்றானது. வடக்கு மாவட்டச் செயலாளராகக் காடுவெட்டி தியாகராஜனும் மத்திய மாவட்டச் செயலாளராக லால்குடி வைரமணியும் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக அன்பில் மகேஷும் அறிவிக்கப்பட்டனர். அன்பில் மகேஷுக்கு மா.செ பதவி வழங்கியதில் திருச்சி தி.மு.க மாநகரச் செயலாளர் அன்பழகன் கடும் விரக்தியில் இருந்தார். தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

முதன்மைச் செயலாளரான கே.என்.நேரு, தற்போது அதிகம் சென்னையில் இருக்க வேண்டிய சூழலால், உள்ளூர் அரசியலில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அன்பில் மகேஷ் இளைஞர்களைக் குறிவைத்து வலம் வரத் தொடங்கியுள்ளார். இந்தநிலையில்தான், லோக்கல் அரசியலில், கே.என்.நேரு தன் மகன் அருண் நேருவைக் களமிறக்கியுள்ளார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பலவருடங்களாக அரசியலே வேண்டாம் என ஒதுங்கியிருந்த அருண் நேரு, கடந்த 31-ம்தேதி திருச்சியில் நடைபெற்ற தி.மு.க, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டின்போது தன் குடும்பத்தாருடன் இணைந்து மொத்த ஏற்பாடுகளையும் கவனித்தார். அப்போது, உடன்பிறப்புகள் அருண்நேருவிடம் காட்டிய பவ்யம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இனி திருச்சி மாவட்ட அரசியல், நேருவுக்குப் பதில் அருண்நேருவின் கண்ணசைவில்தான் என அப்போதே பேச ஆரம்பித்தனர்.

`மூன்று தலைமுறைகளாகத் தொடரும் குடும்ப நட்பு!' -தாத்தாவுக்குப் பிறகு மா.செ-வான அன்பில் மகேஷ்

கடந்த சில தினங்களாக நேரு சென்னையில் உள்ளார். இதனால், தில்லைநகர் சாஸ்திரி சாலையிலுள்ள அவரின் அலுவலகத்துக்கு வந்துபோகும் தொண்டர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அலுவலக நிர்வாகிகள் திண்டாடினர். வழக்கமாக நேரு, அவரது ஆதரவாளர்களின் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்குச் செல்வார். அது தற்போது முடியவில்லை. எனவே, நேருவுக்குப் பதிலாக அவரது மகன் அருண் நேருவை அரசியலுக்குக் கொண்டுவர விரும்பினர் நேருவின் ஆதரவாளர்கள்.

இந்தநிலையில் நேற்று அருண் நேரு, நேருவின் அலுவலகத்துக்கு வந்து கட்சிக்காரர்களைச் சந்தித்தார். அதைக் கவனித்த நேருவின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். மேலும், தி.மு.க திருச்சி மாநகரச் செயலாளர் அன்பழகன் மற்றும் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி சகிதமாக அப்பாவுக்குப் பதிலாகத் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நினைவுகளில் கலந்துகொள்கிறார்.

கே.என்.நேருவின் மகன் அருண்நேருவை வரவேற்று  ஒட்டப்பட்ட போஸ்டர்
கே.என்.நேருவின் மகன் அருண்நேருவை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்

திருவெறும்பூர் பெல் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக அருண் நேருவை வரவேற்று திருச்சி மாநகர் முழுக்க போஸ்டர்கள் ஒட்டியும், வரவேற்புக்குக் குதிரை, வரவேற்பு செண்டை மேளம் என அதகளப்படுத்தினர்.

`கே.என்.நேருவைச் சென்னைக்கு பார்சல் செய்துவிட்டோம். இனி திருச்சியில் அண்ணன்தான் எல்லாம்’ என அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் கூறினார்களாம். அதனால்தான், நேரு தன் மகன் அருணை களமிறக்கியுள்ளார் என்கிறார்கள் நேருவின் ஆதரவாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு