Published:Updated:

திருச்சி: `அ.தி.மு.க-வைப் புறக்கணிப்போம்!’ - வெல்லமண்டி நடராஜனுக்கு எதிரான போஸ்டர்... பின்னணி என்ன?

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

அமைச்சருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தபோது அவரின் ஆதரவாளர்கள் வெல்லமண்டி நடராஜனின் மகனின் புகைப்படத்தைப் போட்டு போஸ்டர்களை ஒட்டினார்கள்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வைப் புறக்கணிப்போம் என இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் அமைப்பினர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனைக் கண்டித்து திருச்சி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போஸ்டர்
போஸ்டர்

திருச்சி அ.தி.மு.க-வில் மாநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.பி குமார், புறநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.பி ரத்தினவேலு என இரு மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வில் மாவட்டங்கள் அமைப்புரீதியாகப் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்தவகையில் திருச்சி கிழக்கு, மேற்கு மற்றும் துறையூர் தொகுதிகளைக்கொண்ட திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிவிக்கப்பட்டார்.

அடுத்தாக மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி தொகுதிகளைக்கொண்ட புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.பி குமார் நியமிக்கப்பட்டார். திருச்சி ஸ்ரீரங்கம், முசிறி மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளைக்கொண்ட திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி நியமிக்கப்பட்டார். இவர்கள் அறிவிக்கப்பட்டத்திலிருந்தே மாவட்டத்துக்குப் பல்வேறு பிரச்னைகள் எழுந்துக்கொண்டிருக்கின்றன.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

அந்த வகையில் சுற்றுலாத்துறை அமைச்சரை பிரச்னை அதிகமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. திருச்சி பாலக்கரை பகுதி செயலாளராக இருந்த கலீல் ரகுமான் என்பவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, புதிதாக சுரேஷ் குப்தா என்பவரை நியமனம் செய்திருக்கிறார் அமைச்சர்.

இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் சங்கத்தினர், `வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வைப் புறக்கணிப்போம்’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகத்துக்கு அருகிலிருக்கும் இடம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

அமைச்சர் வெல்லமண்டி
அமைச்சர் வெல்லமண்டி

`அமைச்சரை எதிர்க்க என்ன காரணம்?’ என்று திருச்சி அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். ``அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு எதிராகப் பல்வேறு பிரச்னைகள் அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. முதலில் அமைச்சருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தபோது அவரின் ஆதரவாளர்கள் வெல்லமண்டி நடராஜன் மகனின் புகைப்படத்தைப் போட்டு, வாழ்த்து மழைபொழிந்து திருச்சி முழுவதும் போஸ்டர்களை ஒட்டினார்கள். இது பிடிக்காத வெல்லமண்டி நடராஜனின் எதிரணியினர் அப்படியே தலைமைக்குத் தந்தியடித்தனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தலைமையும், `வாரிசு அரசியலைத் தூக்கிப்பிடிக்க வேண்டாம்’ என்று கறாராகச் சொல்லியிருக்கிறது. இந்நிலையில், இப்போது கலீல் ரகுமானைத் தூக்கிவிட்டு அவரின் ஆதரவாளரைப் போட்டிருப்பதுதான் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இதைக் கண்டித்துத்தான் ஜமாத் தரப்பில் வெல்லமண்டி நடராஜனைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியிருக்கிறார்கள். இந்த விவகாரம் பெரிதாக மாறவும் வாய்ப்பிருக்கிறது” என்றனர்.

இது குறித்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ``திருச்சி பாலகரைப் பகுதியில் பகுதிச் செயலாளராக இருந்த கலீல் ரகுமான் என்பவர் முன்னாள் எம்.பி குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் ரத்தினவேல், பரஞ்சோதி எனப் பல தலைவர்களிடம் இருந்துகொண்டு பல உள்ளடி வேலைகளைச் செய்தவர். பெரிதாகக் கட்சியில் எந்தவித ஈடுபாடும் கிடையாது. இந்நிலையில் அமைச்சர், சிறப்பாகச் செயல்படக்கூடிய சுரேஷ் குப்தா என்பவரை நியமித்தார். இதில் என்ன தவறு இருக்கிறது... சிறப்பாகச் செயல்படக்கூடியவர்களைத்தானே பக்கத்தில் வைத்துக்கொள்ள முடியும். இதில் எந்தத் தவறும் இல்லையே...” என்று சொல்லி முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு