Election bannerElection banner
Published:Updated:

ஆத்தூர் திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலினை மாற்றிய காரணம் என்ன?

ஜீவா ஸ்டாலின்
ஜீவா ஸ்டாலின் ( எம்.விஜயகுமார் )

ஆத்தூர் தனித் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஜீவா ஸ்டாலின் மாற்றப்பட்டு முன்னாள் எம்.எல்.ஏ சின்னதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்கான வேட்பாளர் பட்டியலை கடந்த 12-ம் தேதி தி.மு.க அறிவித்தது. சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக ஜீவா ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அதையடுத்து ஜீவா ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சியோடு தேர்தல் பணிகளைத் தொடங்கினார். ஆனால் அந்த மகிழ்ச்சி ஓரிரு நாள்கள்கூட நீடிக்கவில்லை. ஜீவா ஸ்டாலின் வாபஸ் பெறப்பட்டு, அவருக்கு பதிலாக சின்னதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மக்கள் முற்றுகை
மக்கள் முற்றுகை

ஜீவா ஸ்டாலின் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

ஆத்தூர், தனித் தொகுதி என்பதால் அங்கு பட்டியலினத்தைச் சேர்ந்தவரே வேட்பாளராக முடியும். ஆனால், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜீவா ஸ்டாலின் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவரில்லை என அரசல் புரசலாகப் பேசப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன் தினம் ஆத்தூர் புங்கவாடி ஊராட்சி, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் ஆத்தூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் துரையைச் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ``சட்டமன்றத் தேர்தல் 2021-ல் சேலம் மாவட்டம் ஆத்தூர் தனித் தொகுதிக்கு தி.மு.க வேட்பாளர் ஜீவா ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஜீவாவின் தாத்தா கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகிலுள்ள அரியபெருமானூர் கிராமத்தில் வசித்துவந்தார். அவர் பெயர் கோபால் (சமையலர்). இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

இவரின் மகன் செல்வராஜ், மனைவி அங்கம்மாள். இருவருக்கும் பிறந்த பெண்தான் ஜீவா. செல்வராஜிடமிருந்து விலகிய ஜீவாவின் தாயார் அங்கம்மாள், ஆத்தூரிலுள்ள சிவாஜி என்ற ஆதிதிராவிடரை வாழ்க்கைத்துணையாகக் கொண்டு வாழ்ந்துவருகிறார். இதைக் காரணமாக வைத்துக்கொண்டு சாதிப் பெயரை மாற்றி ஆதிதிராவிடர் எனச் சான்று பெற்றிருக்கிறார்.

அவரின் கணவர் ஸ்டாலின் ஜங்கமர் சாதியைச் சேர்ந்தவர். இவர் ஏற்கெனவே ஆத்தூர் நகராட்சியில் எஸ்.சி சேர்மன் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்து மனு அளித்தார். அது தள்ளுபடி ஆனது குறிப்பிடத்தக்கது. இதை நன்கு அறிந்து, முன்கூட்டியே சாதிச் சான்றைப் பொய்யாகப் பெற்றிருக்கிறார் ஜீவா. உண்மையாக அவரது பூர்வீகத்தை ஆய்வு செய்ய வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்தே தி.மு.க தலைமை ஆத்தூர் தனி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜீவா ஸ்டாலினை நீக்கிவிட்டு முன்னாள் எம்.எல்.ஏ சின்னதுரையை வேட்பாளராக அறிவித்திருக்கிறது.

ஆத்தூர் வேட்பாளர் சின்னதுரை
ஆத்தூர் வேட்பாளர் சின்னதுரை

இது பற்றி ஜீவா ஸ்டாலின் தரப்பிடம் கேட்டபோது, ``ஜீவா பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த சிவாஜியின் மகளாக இருக்கிறார். பட்டியல் சமுதாயத்தில்தான் வாழ்ந்துவருகிறார். சாதியை மாற்றிப் போட்டியிட வேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ அவருக்கு இல்லை. தி.மு.க மீது காழ்ப்புணர்ச்சி இருப்பவர்களே இப்படி உண்மையற்ற குற்றச்சாட்டைக் கிளப்பியிருக்கிறார்கள்'' என்றார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு