Election bannerElection banner
Published:Updated:

தினகரனின் வேட்பாளர் பட்டியல் முதல் வேலுமணி மீது தளவாய் சுந்தரத்தின் கடுப்பு வரை... கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

``ஹேப்பி சண்டே! செய்திகளை வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறேன்” என்று குறுந்தகவல் அனுப்பியிருந்தார் கழுகார்.

தினகரன் உள்ளடி வேலை?
கடுப்பில் எடப்பாடி!

‘அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்டு?’ என்று ஒரு பட்டியல் சமூக வலைதளங்களில் வட்டமடிக்கிறது. அதைத் தயாரித்து கசியவிட்டதே அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் கோஷ்டியினர்தானாம். இதை முன்வைத்து அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் கம்பு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

தினகரன்
தினகரன்

இப்படியொரு குழப்பம் ஏற்பட வேண்டும் என்றுதான் தினகரன் தரப்பு இந்த வேலையைச் செய்திருப்பதாக முதல்வர் பழனிசாமி தரப்பினர், கட்சியினரைச் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள். இதனால், கடுப்பான முதல்வர் அலுவலகம், `அப்படி எந்த லிஸ்ட்டையும் தலைமைக் கழகம் தயாரிக்கவில்லை’ என்று எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் அனுப்பியிருக்கிறது.

யாருக்கு சீட்டு... இது தினகரன் வெச்ச வேட்டு!

வெயிட்டான வேண்டுதல்!
மயிலை பெருமாள் அருள் யாருக்கு?

மயிலாடுதுறை மாவட்டம், மங்கைமடம் அருகேயுள்ள திருக்குறையலூரில், `உக்ர நரசிம்மப் பெருமாள்’ ஆலயம் இருக்கிறது. இவரை வணங்கி வழிபட்டால் பதவி கிடைக்கும் என்பது அரசியல் வட்டாரத்தினரின் நம்பிக்கை.

Representational Image
Representational Image

தேர்தல் நெருங்குவதால், பூரம் நட்சத்திரத்தில் பிறந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஜெகத்ரட்சகன், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த விஜயகாந்த், திருவோண நட்சத்திரத்தில் பிறந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விசாக நட்சத்திரத்தில் பிறந்த தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களின் பெயர்களில் தினந்தோறும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொருவருமே தாங்கள் தேர்தலில் வெற்றிபெற்றால், பெருமாளுக்கு `வெயிட்டாக’ காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டிருக்கிறார்களாம்

அட, பெருமாளுக்கே கவனிப்பா!

நெல்லை பா.ஜ.க பிரசாரம்...
உஷ்ணத்தில் அ.தி.மு.க!

அ.தி.மு.க கூட்டணியில் சீட் பங்கீடுகள் எதுவும் முடிவாகாத நிலையில், நெல்லை சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க-வினர் இப்போதே வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள். சமீபத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் நெல்லை வந்திருந்தபோது, அவரை மேடையில் வைத்துக்கொண்டு பேசிய துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், ``தமிழக சட்டமன்றத் தேர்தல் ரிசல்ட் வரும்போது பா.ஜ.க-வின் முதல் வெற்றிக்கான அறிவிப்பு நெல்லை தொகுதியாக இருக்கும்’’ என்று தொகுதியில் தனக்கான சீட் குறித்து நைசாக பிட் போட்டார்.

எல்.முருகன்
எல்.முருகன்

ஆனால், வழக்கம்போல எல்.முருகனிடமிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை. ஆனாலும் அசராமல் நயினார் நாகேந்திரன் பெயரைச் சொல்லி பா.ஜ.க-வினர் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார்கள். இது அ.தி.மு.க தரப்பை உஷ்ணப்படுத்தியிருக்கிறது.

இன்னும் நாலஞ்சு பிட்டை வெயிட்டா போட்டிருக்கணுமோ!

உதவியாளரின் ஊழல்
புகார் அளித்த நீலகிரி ஆட்சியர்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, கறார் பேர்வழி. சில மாதங்களுக்கு முன்பு தனது உதவியாளராக இருந்த ஶ்ரீதர் என்பவர்மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்ததால், அவரை மாற்றிவிட்டு ரமேஷ் என்பவரை நியமித்தார். சமீபத்தில், சில துறைகளின் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு ரமேஷ் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியிருப்பதாகப் புகார் எழுந்து சர்ச்சையானது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

இதனால் கடுப்பான ஆட்சியர், ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளிடம் புகார் செய்திருக்கிறாராம். ஆனால், `உதவியாளரை மாற்றக் கூடாது’ என்று மேலிடத்திலிருந்து அரசியல் அழுத்தங்கள் வருவதால், கொதித்துப்போயிருக்கும் ஆட்சியர், உதவியாளருக்கான பரிந்துரை செய்யும் கரைவேட்டிகளை டார் டாராக கிழிக்க சபதமெடுத்திருக்கிறாராம்.

ஓ... ஒரு தென்றல் புயலாகி வரும் நேரம்!

வேலுமணி மீது கடுகடுக்கும் தளவாய்!

கன்னியாகுமரி மாவட்ட உள்விவகாரங்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலையிட்டு குட்டையைக் குழப்புவதாக தளவாய் சுந்தரம் தரப்பு கடுப்பில் இருக்கிறது. அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வரைக் கலந்துகொள்ளவைத்ததில் வேலுமணிக்கு நிறையவே பங்கு இருந்திருக்கிறது. ஆனால், முதல்வர் வருகை உறுதியாகும்வரை, உள்ளூரிலிருக்கும் தளவாயிடம் அதுபற்றிச் சொல்லவே இல்லை என்கிறார்கள். அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பச்சைமாலுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வாங்கிக்கொடுத்ததும் அமைச்சர் வேலுமணிதானாம்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

பச்சைமாலுக்குப் பதவி வழங்க கையெழுத்தாகும் வரை தளவாயிடம் அது குறித்து தகவல் சொல்லவில்லையாம். இவை மட்டுமல்ல... தளவாய் சுந்தரம் குறிவைத்து பணியாற்றிவரும் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியை பச்சைமாலுக்குத் தாரைவார்க்கவும் காய்நகர்த்துகிறாராம் வேலுமணி. வேலுமணியின் இந்தத் தலையீட்டால், தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.

`பச்சைக்கிளி’க்கு பச்சை சிக்னல் கிடைக்குமா?

அ.தி.மு.க பிரசாரத்துக்கு உதவுகிறாரா ஆட்சியர்?
மதுரை மல்லுக்கட்டு

சமீபத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பி.மூர்த்தி, டாக்டர் சரவணன் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் புகார் ஒன்றை அளித்தனர். அதில், `மதுரை வடக்கு தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளில் அத்துமீறி அரசு விழாக்களில் கலந்துகொள்கிறார். இதற்கு அதிகாரிகளும் துணைபோகிறார்கள்.

ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பா

அதனால், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர். புகார் கொடுத்த சில நாள்களிலேயே தி.மு.க-வின் திருப்பரங்குன்றம் தொகுதியில் நியாயவிலைக் கடைத் திறப்புவிழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் ராஜன் செல்லப்பா கலந்துகொள்வதாக அரசு விளம்பரம் வெளியானது. ஆனால், தொகுதியின் எம்.எல்.ஏ சரவணனை விழாவுக்கு அழைக்கவில்லை. வரும் தேர்தலில் ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். அதற்காகத்தான் அந்தத் தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் அவரையும் இணைத்து, அவரது பிரசாரத்துக்கு மாவட்ட ஆட்சியர் உதவுவதாக தி.மு.க-வினர் கொந்தளிக்கிறார்கள்.

செல்லப்பாவை `செல்லாதே அப்பா’னு சொல்லணும்... அதுக்கெதுக்கு இம்புட்டு பயம் கலெக்டரு!

ஃபேஸ்புக் லைவுக்கே விளம்பரமா?

மக்கள் நீதி மய்யத்தில் மைய சக்தியாக இருக்கும் அந்தத் தலைவர், நிதி சக்தியாகவும் மாறிவருகிறாராம். அவரும் வாரி வழங்குவதால் கட்சியும் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இதையடுத்து, மக்களிடம் தனது இமேஜை பூஸ்ட் செய்ய அவர் முடிவெடுத்திருக்கிறார் என்கிறார்கள். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர், தான் ஃபேஸ்புக் லைவ்வில் உரையாடப் போகிறேன் என்று சொல்வதைக்கூட டிஜிட்டல் ஊடகங்களில் விளம்பரம் கொடுத்துவருகிறார். ``மத்த கட்சிங்க எல்லாம் பொதுக்கூட்டத்துக்குதான் காசு கொடுத்து ஆள் சேர்ப்பாங்க.. ஆனா, நம்மாளு ஃபேஸ்புக் லைவ்வுக்கே காசு கொடுத்து ஆள் திரட்டுறாரே...’’ என்று புருவத்தை உயர்த்துகிறார்கள் கட்சியின் பிற நிர்வாகிகள்.

கூட்டம் வரலைன்னு சொல்லலை... வந்தா நல்லாயிருக்கும்னு நினைக்கிறாராக்கும்!

`அது வேற வாயி... இது நாற வாயி..!’
கோவை குஸ்தி

கோவையில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யும் சூயஸ் திட்டம் குறித்து தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் விமர்சனங்களை முன்வைத்து போராட்டம் நடத்திவருகிறார். இந்தநிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வில் இணைந்து செய்தித் தொடர்பாளர் பதவியைப் பெற்றிருக்கும் பேராசிரியர் கல்யாணசுந்தரம், அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, `சூயஸ் தொடர்பாக என்னுடன் விவாதிக்கத் தயாரா?’ என்று ஆவேசமாகச் சவால் விடுத்திருக்கிறார். இதையடுத்து, எதிர்க்கட்சியினர் கல்யாணசுந்தரம் நாம் தமிழர் கட்சியில் இருந்தபோது அதே சூயஸ் திட்டம் குறித்து அனல் பறக்க விமர்சனம் செய்த வீடியோவையும், இப்போதைய பிரஸ் மீட் வீடியோவையும் இணைத்து, `அது வேற வாயி... இது நாற வாயி...’ என்று சமூக வலைதளங்களில் வைரலாக்கிவிட்டனர். ‘முதல் பிரஸ் மீட்டே சொதப்பிடுச்சே’ என்று செம அப்செட்டாம் கல்யாணம்.

ஒருவேளை மைக்கை ஒளிச்சுவெச்சா கல்யாணம் பேசறதை நிறுத்திடுவாரோ!

தேனி மாவட்ட தி.மு.க-வில் பனிப்போர்!

தேனி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கும், ஆண்டிபட்டி தி.மு.க எம்.எல்.ஏ மகாராஜனுக்கும் இடையே பனிப்போர் உச்சத்தில் இருக்கிறது.

தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்

மகாராஜனுக்கு எதிர்க் கோஷ்டியினர், தங்க தமிழ்ச்செல்வன் பக்கம் சாய்ந்து மகாராஜனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாகத்தான் சமீபத்தில், உதயநிதி ஸ்டாலின் தேனி வந்தபோது, அவரின் வாகனத்தை முற்றுகையிட்டு சலசலப்பை ஏற்படுத்தினார்கள். தமிழ்ச்செல்வன் தூண்டுதலால்தான் இதைச் செய்திருக்கிறார்கள் என்று கடும் டென்ஷனில் இருக்கிறாராம் மகாராஜன்.

மகா கஷ்டமப்பா!

சென்னை ஐ.பி.எஸ்-கள் மோதல்!

சென்னை பெருநகர காவல்துறையில் உச்சத்திலிருந்த சூரிய அதிகாரி பற்றி எசகு பிசகான செய்திகள் சமீபத்தில் கசிந்தன. கோஷ்டித் தகராறில் இதைப் பரப்பிவிட்டதே ஐஸ்க்ரீம் அதிகாரிதானாம். ஆழ்வார்பேட்டையில் தன் தோழியின் உதவியோடு ‘ஹை கிளாஸ்’ ஜிம் ஒன்றை ஐஸ்க்ரீம் அதிகாரி நடத்துகிறார். பினாமி பெயரில் செயல்படும் இந்த ஜிம் குறித்த விவரங்களைத் தோண்டியெடுத்த சூரிய அதிகாரி, அதை மீடியாவுக்கு லீக் செய்வதற்குக் காத்திருந்தாராம்.

சசிகலாவுக்கு ஜோசியர் அட்வைஸ் முதல் சண்முகத்துக்காக சமரசம் பேசிய வைத்தி வரை! - கழுகார் அப்டேட்ஸ்

இந்தநிலையில்தான் ஐஸ்க்ரீம் அதிகாரி முந்திக்கொண்டாராம். குழாயடிச் சண்டைபோல இவர்களின் மோதல் விவகாரம் பற்றியெரியவே... கடுப்பான தலைமை இருவரையுமே இடமாறுதல் பட்டியலில் சேர்த்துவிட்டதாம். இதில் அமைச்சர்கள் சிலரது சிபாரிசு பலமாக இருந்ததால், சூரிய அதிகாரி வெயிட்டான பதவிக்கு மாற்றப்பட்டாராம். இதையடுத்து, ``ஐஸ்க்ரீமைச் சும்மா விட மாட்டேன்... இனிமேதான் இருக்கு என்னோட ஆட்டம்” என்று கருவிவருகிறாராம் சூரிய அதிகாரி.

ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடுங்கப்பா... எல்லாம் சரியாகிடும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு