எம்.ஜி.ஆர்... புரட்சித்தலைவர். ஜெயலலிதா... புரட்சித்லைவி. சசிகலா... புரட்சித்தாய். இப்படித்தான் அவரது ஆதரவாளர்கள் இப்போதெல்லாம் அழைக்கிறார்கள். ஆரம்பத்தில், சசிகலாவை சின்னம்மா, தியாகத் தலைவி என்கிற அடைமொழியுடன் அழைத்தனர்.
அ.தி.மு.கழகத்தை எம்.ஜி.ஆர் ஆரம்பித்து 50-வது ஆண்டு தொடக்கவிழா கடந்த ஆண்டு, அக்டோபர் 17-ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ராமாவரம் தோட்ட வீடு, தி.நகர் எம்.ஜி.ஆர் நினைவகத்துக்கு சசிகலா நேரிடையாகப் போய் மரியாதை செலுத்தினார். அப்போதுதான், சசிகலாவுக்கு `புரட்சித்தாய்’ என்கிற அடைமொழியை அவரது விசுவாசிகள் அறிவித்தனர்.

அன்று முதல் சசிகலா ஆதரவு கோஷ்டியினரின் விளம்பரங்களில் `புரட்சித்தாய்’ என்றே குறிப்பிட ஆரம்பித்தனர். கடந்த ஆண்டு, டிசம்பர் 24-ம் தேதியன்று எம்.ஜி.ஆரின் நினைவுநாள் வந்தபோது, தி.நகர் நினைவகத்துக்கு வந்து எம்.ஜி.ஆரின் படத்துக்கு மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சசிகலா.
இந்த வருடம் (2022-ம் வருடம்) ஜனவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் தினம் வந்தது. அன்றைய தினம் சசிகலா தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவகத்துக்கு நேரில் வந்தார். `எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம்’ என்கிற சூளுரையை எடுத்தார் சசிகலா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎம்.ஜி.ஆர் வழக்கமாக உட்காரும் அலுவலகத்தில் சசிகலாவும் அமர்ந்தார். அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் கொறடா பள்ளிப்பட்டு நரசிம்மன், முன்னாள் மாவட்டக் கழக துணைச் செயலாளர் வைத்தியநாதன், எம்.ஜி.ஆர் இல்ல நிர்வாகி குமார் ராஜேந்திரன் ஆகியோருடன் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
``எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது, இந்த இல்லத்தில், இதே அலுவலகததில் அமர்ந்துதான் கட்சி நிர்வாகத்தை நடத்தினார். பிறகுதான், ராயப்பேட்டை அலுவலகத்துக்கு மாறினார். அவரைப்போலவே, நீங்களும் தினமும் இங்கே வந்து அமர்ந்து அன்றாடக் கட்சி நிர்வாகத்தை கவனியுங்கள். கட்சியையும் ஆட்சியையும் எம்.ஜி.ஆரின் ஆத்மாவை உங்களிடத்தில் சேர்க்கும்'' என்றார்களாம் கட்சிப் பிரமுகர்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டு கூடியிருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர். இதை கவனித்த சசிகலா, `ஓ.கே வருகிறேன்’ என்று சிரித்தபடி சொல்ல, மீண்டும் கைதட்டல்கள்.

ஜனவரி 19-ம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு விசிட் போனார். அங்கே, அ.ம.மு.க-வின் மாவட்டச் செயலாளராக இருப்பவர் பெருமாள். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் வீட்டுக்குப் போய் இரண்டு மணி நேரம் இருந்து குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்து, சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி வந்தார் சசிகலா. இதைப் பார்த்தவர்கள், `எம்.ஜி.ஆர் பாணியில் கட்சிப் பிரமுகர் வீட்டுக்கு போய் திக்குமுக்காட வைத்தார் சசிகலா’ என்று வர்ணித்தனராம். இனிவரும் காலங்களில், எம்.ஜி.ஆரின் பாணியில் தனது அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறாராம் சசிகலா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜெயலலிதா காலத்தில் தென்சென்னை மாவட்ட கழக துணைச் செயலாளர், அ.ம.மு.க-வின் மாவட்டச் செயலாளர் பதவிகளில் இருந்த முக்கிய நிர்வாகியான வைத்தியநாதன் கூறும்போது,
``புரட்சித்தலைவரின் ஆட்சி அமைப்போம் என்பதுதான் சின்னம்மாவின் அரசியல் லட்சியம். அதாவது, `ஊழலற்ற ஆட்சி அமைப்போம்’ என்பதைக் குறிக்கும்வகையில் பொதுமேடைகளில் பேசிவருகிறார். 2017-ம் வருடம், பிப்ரவரி மாதம் 15-ம் தேதியன்று பெங்களூரு சிறைச்சாலைக்குச் செல்லும் வழியில் ராமாவரம் தோட்ட வீட்டுக்குச் சென்று தியானம் செய்து எம்.ஜி.ஆரை வணங்கிவிட்டுத்தான் போனார். 2021, ஜனவரி 27-ம் தேதியன்று பெங்களூரு சிறைச்சாலையிலிருந்து திரும்பி வரும் வழியில் ராமாவரம் வீட்டுக்குப் போய் அவரை வணங்கிவிட்டு வந்தார்.

கடந்த வருடம், அக்டோபர் 16-ம் தேதியன்று ஜெயலலிதா நினைவகத்துக்கு சின்னமா சசிகலா போனார். அப்படியே, எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவகங்களிலும் மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆரின் பேரன் குமார் ராஜேந்திரன்தான் தற்போது எம்.ஜி.ஆர் டிரஸ்ட்டின் பணிகளை கவனித்துவருகிறார். அவரும் சின்னம்மாவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு உடன் இருக்கிறார். எம்.ஜி.ஆரின் பெயர், அவர் உருவாக்கிய இரட்டை இலைச் சின்னம், இவற்றை தினசரி பூஜிக்கும் கட்சித் தொண்டர்கள், அவரின் ரசிகர்கள், விசுவாசிகள் தமிழகம் முழுக்க இருக்கிறார்கள். அவர்களின் ஒட்டுகளைப் பெறுவதில்தான், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் குறியாக இருக்கிறார்களே தவிர, எம்.ஜி.ஆருக்கு உரிய மரியாதை செலுத்துவதில்லை என்கிற ஆதங்கம் இருக்கிறது.
தொண்டர்களின் மனநிலையைப் புரிந்துகொண்ட சசிகலா, எம்.ஜி.ஆரை கௌரவிக்கும்விதமாகத் தனது அரசியல் செயல்பாடுகளை வகுத்து, அதன்படி நடக்கிறார். அவரின் ஆத்மா, கூடிய விரைவில் பிரிந்துகிடக்கும் கட்சியை சசிகலா தலைமையில் ஒன்றிணைத்து நல்லாட்சி அமைக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்கிறார்.
சசிகலாவின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை என்ன என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. பா.ஜ.க தரப்பில் ஆதரவு இருந்தால் மட்டுமே அவரால் அ.தி.மு.க-வுக்குள் நுழைந்து தலைமைப் பதவியை அடைய முடியும். ஆனால், டெல்லியிலிருந்து பாசிட்டிவ் சிக்னல் இதுவரை கிடைக்கவில்லை. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமிக்குப் பின்னடைவு வரும்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் கை கட்சிக்குள் ஓங்கும். அப்போது, சசிகலாவைக் கட்சிக்குள் ஓ.பி.எஸ். அனுமதிப்பார் என்று அ.தி.மு.க-வின் ஒரு கோஷ்டியினர் ஆரூடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதுவும் எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை.

இடையில், சசிகலா டெல்லி விசிட் போய் பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களை, குறிப்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மரியாதையின் நிமித்தம் நேரில் சந்திக்க முயற்சி நடந்தது. ஆனால், அமித் ஷா மறுத்துவிட்டாராம். அதனால், டெல்லி விசிட்டும் கேன்சல் ஆனது. இப்போதைக்கு சசிகலா ஆலோசனையின் பேரில் அ.ம.மு.க-வை நடத்திவரும் டி.டி.வி.தினகரன் அடக்கி வாசிக்கிறார். அ.தி.மு.கழக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவரும் சூழ்நிலையில், அ.ம.மு.க-வினர் சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்தால், எதிர்த்தரப்பினர் அதைச் சுட்டிக்காட்டி சட்டப் பிரச்னையை உருவாக்கிவிடுவார்கள். அதனால், சசிகலாவின் முயற்சி தோற்றுவிடும் என்று சொல்லி, தனது கட்சிக்காரர்களை சசிகலா பக்கமே போகக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்.
ஆனால், இன்னொரு தரப்பினரோ, இருவருக்கும் அரசியல்ரீதியான கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதனால்தான், தினகரன் அப்படிச் சொல்கிறார் என்கிறார்கள். இப்போதைய சூழ்நிலையில், சசிகலா உத்தரவிட்டால், தினகரன் கட்சியில் இருக்கும் 90% மாவட்டச் செயலாளர்கள் சசிகலா பக்கம் வந்துவிட ரெடியாக இருப்பதாக சசிகலா தரப்பினர் சொல்கிறார்கள். அதற்கான நேரம் வரும்வரை அங்கிருங்கள் என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

இது பற்றி அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும், சசிகலாவின் ஆதரவாளருமான ஒருவரிடம் பேசினோம்.
``ஒருகட்டத்தில், சசிகலா எங்களுக்குப் பிரச்னை இல்லை. அவர் அ.தி.மு.க-வுக்குள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால், அவரைச் சுற்றிலும் இருக்கும் தினகரன், டாக்டர் வெங்கடேஷ், இளவரசி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்... இவர்கள் யாரும் வரக் கூடாது’ என்று கண்டிஷன் போட்டார்கள் எடப்பாடி கோஷ்டியினர். ஆனால், நாளாவட்டத்தில் சசிகலாவுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். சசிகலாவின் அரசியல் எதிர்காலம், அவரது குடும்ப உறவினர்களைவிட்டு வெளியே வந்தால்தான் அவரால் அ.தி.மு.க-வைப் பிடிக்க முடியும் என்று அவரின் ஆதரவாளர்கள் திரும்பத் திரும்ப சொல்லிவந்தனர். அதைப் புரிந்துகொண்ட சசிகலா, கடந்த இரண்டு மாதங்களாக, அவரது அரசியல் விசிட்டுகளின்போது குடும்ப உறவினர் யாரும் வரக் கூடாது என்று தடைபோட்டுவிட்டார். அவரிடம் மாற்றம் தெரிகிறது'' என்றார்.