Published:Updated:

மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிய சிவசேனா! - காங்கிரஸ் முடிவுக்காகக் காத்திருக்கும் உத்தவ்

சிவசேனாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே
பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே

` சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர், ஒருநாள் முதல்வராக வருவார் என என் தந்தையிடம் சத்தியம் செய்துள்ளேன். அந்த சத்தியத்தை நான் நிறைவேற்றுவேன். அதற்கு அமித் ஷாவோ, பட்னாவிஸோ எனக்குத் தேவை இல்லை' எனக் கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தவ் தாக்கரே பேசியிருந்தார்.

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க - சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்தக்கூட்டணி தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைக் கைப்பற்றியது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி மொத்தம் 161 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.க 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. பெரும்பான்மை இருந்தும் இதுவரை ஆட்சியமைக்க முடியவில்லை. காரணம், முதல்வர் பதவியை சிவசேனா குறிவைத்ததுதான். `முதலமைச்சர் பதவியில் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் இரண்டரை ஆண்டுகள் அமர வேண்டும்' என்பது சிவசேனாவின் கோரிக்கையாக இருக்கிறது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இதுதொடர்பாக, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,`` முதலமைச்சர் பதவியை இரண்டு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்துகொள்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக அமித் ஷாவோ, நிதின் கட்கரியோ எதுவும் கூறவில்லை. சில எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க விலைகொடுத்து வாங்க முயல்வதாக அவர்கள் கூறியது பொய்” எனத் தெரிவித்தார்.

பட்னாவிஸ் அளித்த பேட்டியைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே செய்தியாளர்களைச் சந்தித்தார். ``நான் பொய் சொன்னதாக அவர் கூறியதையடுத்து பட்னாவிஸுடன் பேசுவதை நிறுத்திவிட்டேன். பா.ஜ.க எங்களுக்கு எதிரிக்கட்சி இல்லை. ஆனால், அவர்கள் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர், ஒருநாள் முதல்வராக வருவார்” என்று கூறினார்.

`ஆட்சியமைக்க அமித் ஷாவோ, பட்னாவிஸோ தேவையில்லை! -  சிவசேனா அதிரடி

பெரும்பான்மை அடிப்படையில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பா.ஜ.க-வுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். `மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி அமைக்கப்போவதில்லை' என்ற முடிவை ஆளுநரிடம் அக்கட்சியினர் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய மாநில பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த், ``சிவசேனா முதல்வர் பதவியைக் கேட்டுப் பிடிவாதம் செய்கிறது. சிவசேனா - பா.ஜ.க கூட்டணிக்குத்தான் மக்கள் வாக்களித்தனர். இது மக்களின் முடிவை அவமதிக்கும் செயல்” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

`மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க விருப்பமா?' என சிவசேனாவுக்கு ஆளுநர் மாளிகை அழைப்புவிடுத்தது. இதையடுத்து, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்தது.

சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸ் சில நிபந்தனைகளை விதித்தது. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து சிவசேனா முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், அக்கட்சி சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தது.

பா.ஜ.க மறுப்பு; என்சிபியின் `ஒற்றை கண்டிஷன்'- திருப்பம் காணும் மகாராஷ்டிரா அரசியல்!

இந்த நிலையில், மத்திய அமைச்சரவையிலிருந்து சிவசேனா வெளியேறியுள்ளது. சிவசேனாவைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் மத்திய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக இன்று காலை அறிவித்துள்ளார். அரவிந்த் சாவந்த் மத்திய கனரக தொழில்கள், பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக பொறுப்பு வகித்துவந்தார்.

ராஜினாமா முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் சாவந்த், ``மகாராஷ்டிராவில் அரசு அமைக்க மறுப்பது பா.ஜ.க-வின் ஆணவத்தைக் காட்டுகிறது. இது மகாராஷ்டிரா மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம். பா.ஜ.க-வினர் எதிர்க்கட்சியாக அமரத் தயாராக உள்ளனர். ஆனால், தேர்தலுக்கு முன்பாக அவர்கள் ஒப்புக்கொண்டதை ஏற்கத் தயங்குகின்றனர்” என்றார்.

அரவிந்த் சாவந்த்
அரவிந்த் சாவந்த்

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் சிவசேனா உறுதியாக இருக்கிறது. அங்கு நிலவும் அரசியல் சூழல்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அரவிந்த் சாவந்த் ராஜினாமா தொடர்பாக சரத் பவாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்தவர், ``யாருடைய ராஜினாமா தொடர்பாகவும் நான் யாருடனும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரஸுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சியினரை இன்று சந்தித்து பேசவுள்ளோம்” என்றார் இயல்பாக.