Published:Updated:

`ஆகட்டும் பார்க்கலாம்..!' எப்போதும் தேவைப்படும் காமராஜர் கொள்கை

விஷ்ணுராஜ் சௌ

ஆசிரியர்களுக்கு நன்மை செய்யத் தொடங்கினால் அது அவர்களோடு நின்றுவிடாது. அனைவரும் கேட்பார்கள்; அனைவருக்கும் கொடுப்போம்.

காமராஜர்
காமராஜர்

"ஆகட்டும் பார்க்கலாம்“ என்ற இந்த வார்த்தைகள் தமிழக அரசியல் வரலாற்றில் நடத்திக்காட்டியவை ஏராளம். அப்போதைய சென்னை மாகாண தலைமைச் செயலகத்தில் இந்த வார்த்தைகளை அவர் வாயால் கேட்டுச் செல்லத்தான் தமிழகத்தின் பல மூலைகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து சென்றார்கள். அப்படிப்பட்ட வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் காமராஜர்.

காமராஜர்
காமராஜர்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதும் எவராலும் காமராஜரின் பெயரை விட்டுவிட்டு எழுதிவிட முடியாது. காங்கிரஸ் வரலாறு என்ன, இந்தியப் பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றை விறுவிறுப்பாக எழுதினாலும் காமராஜரை தவிர்த்துவிட முடியாது. ஆம்.. இந்திய அரசியலின் ஒரு காலகட்டம், காமராஜரின் கைகளில்தான் இருந்தது. இத்தனைக்கும் அவர், காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களைப் போல பெரும் செல்வந்தரும் இல்லை; மிகப்பெரும் படிப்பறிவு கொண்டவரும் இல்லை. அவர் தன்னகத்தே கொண்டிருந்தது காந்தியின் எளிமையையும், நேர்மையையும் மட்டும்தான்.

மற்ற துறைகளைக் காட்டிலும் தமிழகம் கல்வித் துறையில் மட்டும் தொடர்ந்து வளர்ச்சியைத்தான் சந்தித்து வந்துள்ளது. இதுவரை இருந்த தமிழக முதல்வர்கள் அனைவருடைய ஆட்சிக் காலத்திலும் இலவச பஸ் பாஸ் திட்டம், சத்துணவுத் திட்டம், இலவச மடிக்கணினி திட்டம் என எல்லோருமே தங்களின் ஆட்சிக் காலத்தில் கல்வித்துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, முக்கியப் பங்காற்றியுள்ளனர். இனியும் எந்த முதல்வர் வந்தாலும் அவர்களால் இதுபோன்ற திட்டங்களில் இருந்து தடம்மாறிச் சென்றுவிட முடியாது. அதற்கான அடித்தளத்தை வகுத்தவர் காமராஜர். மதிய உணவுத் திட்டம், பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தது, மாணவர்களை பள்ளி நோக்கி வரவைத்தது என அவர் அறிமுகப்படுத்திய திட்டங்கள்தான், இன்றைக்குத் தமிழகம் கல்வித்துறையில் அடைந்துள்ள வளர்ச்சிக்கு விதைகளாக அமைந்தன.

காமராஜர்
காமராஜர்

சென்னை மாகாண முதல்வராக காமராஜர் இருந்த சமயத்தில் கல்வித்துறை செயலாளராக இருந்தவர் நெ.து.சுந்தரவடிவேலு. ஒருமுறை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "தமிழகக் கல்வி வளர்ச்சியின் தந்தை காமராஜர் என்றால். தமிழகக் கல்வி வளர்ச்சியின் தாய் நெ.து.சுந்தரவடிவேலு" என்றார். ஆம், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்திட்டம், மதிய உணவுத் திட்டம் என இந்த இருவரும் இணைந்து கல்வித்துறைக்கு வகுத்தளித்த திட்டங்கள் ஏராளம். இவை அனைத்தையும் தன்னுடைய `நினைவலைகள்' என்ற சுயசரிதையில் பதிவு செய்துள்ளார் நெ.து.சுந்தரவடிவேலு.

தமிழக கல்வித்துறையில் ஏற்படுத்திய அடிப்படை மாற்றங்களில் ஒன்று, ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டம். காமராஜருக்கு முன்பு ராஜாஜி முதல்வராக இருந்த நேரத்திலேயே பல மூத்த அதிகாரிகளும் ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மெனக்கெட்டனர். ஆனால், அவர்களால் அதை நிறைவேற்றிக்காட்ட முடியவில்லை. பொதுக் கல்வித்துறை செயலாளராக நெ.து.சுந்தரவடிவேலு பொறுப்பேற்றவுடன் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை எப்படியாவது அறிமுகப்படுத்தி விட வேண்டும் என இரவு, பகலாக உழைத்து, அதற்கான திட்ட வரைவைத் தயார் செய்தார்.

ஆசிரியர்களுக்கு நன்மைச் செய்யத் தொடங்கினால் அது அவர்களோடு நின்றுவிடாது. அனைவரும் கேட்பார்கள். அனைவருக்கும் கொடுப்போம்.
காமராஜர்

அமைச்சரவை நிதிக்குழு கூடியது. அந்த நிதிக் குழுவுக்கு தலைமை தாங்கினார் காமராஜர். அதில் பங்கேற்க சுந்தரவடிவேலுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில்தான் ஆசியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விளக்கிச் சொன்னார் சுந்தரவடிவேலு. அப்போது திடீரென அதிகாரி ஒருவரிடம் இருந்து ஒரு குரல் வந்தது.

குறுக்கிட்ட அந்த அதிகாரியிடம் காமராஜர் எனும் பெரும் ஜனநாயகவாதி, "சொல்லுங்களேன்! உங்கள் கருத்துகளையும் தெரிந்துகொள்வோம்” என்றார். "இந்த நாட்டில் வாழ்பவர்களில் ஆசிரியர்கள் மட்டும் நலிவடைந்து கிடக்கவில்லை. எத்தனையோ பிரிவினர் நலிவடைந்துதான் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் ஆசிரியர்களுக்கு மட்டும் தனியாகப் பரிவு காட்டுவது மற்றவர்களையும் இது மாதிரியான திட்டத்தைக் கேட்க வைக்கும். எனவே, கடைநிலை ஊழியர்கள் அனைவரையும் சேர்த்து பெரிய திட்டமாக யோசியுங்கள்” என்றார்.

காமராஜர்
காமராஜர்

காமராஜர் முகத்தில் சிரிப்புடன், "நீங்கள் சொல்வது தவறல்ல, இந்த நிலையை மாற்றுவதுதான் அரசின் கடமை. ஆசிரியர்களுக்கு நன்மை செய்யத் தொடங்கினால், அது அவர்களோடு நின்றுவிடாது. அனைவரும் கேட்பார்கள். அனைவருக்கும் கொடுப்போம்” என்றார்.

ஆம், இந்த வார்த்தை ஒலித்து, கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, தமிழகத்தில் ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் போராட்டங்களில் அவர்கள் முன்வைக்கும் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று, `ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அரசு கொண்டு வரவேண்டும்' என்பதுதான். பழைய ஓய்வூதிய முறை என்பது காமராஜர் அறிமுகப்படுத்திய அதே முறைதான். கடந்த 2016-ல் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, `ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையைக் கொண்டு வருவோம்' என வாக்குறுதி அளித்தார். ஆனால், இப்போது `ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துகிறோம்' என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களோ, ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் போன்ற எந்தவொரு போராட்டத்தையும் கண்டுகொள்ள மறுக்கின்றனர். மற்றொருபுறம் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் பலரும், `நாங்கள் காமராஜர் ஆட்சியை அமைப்போம்' என்று வெற்று முழக்கத்தை மட்டுமே முன் வைக்கின்றனர்.

காமராஜர்
காமராஜர்

அதேபோல் நெ.து.சுந்தரவடிவேலு பொதுக்கல்வித் துறைச் செயலாளராக இருந்த சமயம். அவரின் செயல்பாடுகளைப் பாராட்டி, சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில் அவரின் திருவுருவப்படத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தை திறந்து வைப்பதற்காக முதல்வர் காமராஜரை கல்வியாளர்கள் சிலர் அழைத்திருந்தனர். இந்த செய்தி அறிந்து பதறிப்போய் முதல்வர் அலுவலகம் விரைந்தார் சுந்தரவடிவேலு. காமராஜரை நேரில் பார்த்து, "உயர் பதவியில் ஒருவர் பணியாற்றி ஓய்வுபெறும்போது அவருடைய படத்தை திறந்து வைப்பதுதான் வழக்கம். பணியில் இருக்கும்போதே படத்தைத் திறந்து வைப்பது மரபுக்கு எதிரானது. எனவே, தாங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம்” என வேண்டுகோள் வைத்தார்.

ஆனால், மரபுகளை உடைத்தெறிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுந்தரவடிவேலு படத்தையும் திறந்துவைத்தார் காமராஜர். அந்த நிகழ்ச்சியில் பேசிய காமராஜர், "பதவியில் இருக்கும்போது படத்தைத் திறந்து வைப்பது என்பது மரபுக்கு மீறிய செயல்தான். ஆனால், இதைத் தெரிந்துதான் நான் இந்த நிகழ்வுக்கு ஒப்புக்கொண்டேன். நெ.து.சு-வின் படத்தைத் திறந்து வைப்பது அவருக்குப் பெருமைதான். அதைவிட இந்த நிகழ்வு உங்களை ஊக்குவிக்கும் என்பதானாலேயே இதற்கு இசைந்தேன். பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் பிறந்து இன்று இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்துள்ளார் நெ.து.சுந்தரவடிவேலு” எனப் புகழ்ந்துரைத்தார் காமராஜர்.

Vikatan

ஆனால், இன்றைய நிலையோ முற்றிலும் வேறு. அதிகாரி ஒருவர் நல்லமுறையில் செயல்படுகிறார் என்ற செய்திகள் வெளியான உடனேயே, அந்த அதிகாரிக்கு பணிமாறுதல் உத்தரவு தயாராகி விடும். இதில் எப்படி இங்கு மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்? ஆக, எளிய மாணவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகும்போதும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டங்களில் ஈடுபடும்போதும் காமராஜர் தேவைப்படத்தான் செய்வார். அவரின் பிறந்தநாளில் அவரின் கொள்கைகளை நினைவுகூர்வோம்!