Published:Updated:

`கட்சியிலிருந்து நீக்குங்கள்!' - கோவில்பட்டியில் அரசகுமார் உருவப்படத்தை எரித்த பா.ஜ.க-வினர்

கோவில்பட்டியில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமாரை கட்சியிலிருந்து நீக்க வலியுறுத்தி, அவரது உருவப்படத்தை எரித்து பா.ஜ.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உருவப்படத்தை எரிக்கும் பா.ஜ.க-வினர்
உருவப்படத்தை எரிக்கும் பா.ஜ.க-வினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தி.மு.க நிர்வாகியின் திருமணவிழா, தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், பா.ஜ.க மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ``எம்.ஜி.ஆருக்குப் பிறகு நான் ரசித்த தலைவர் ஸ்டாலின்தான். இயக்கத்துக்காக நன்றிக்கடன் பட்டவன் நான். காலம் கனியும். காரியங்கள் தானாக நடக்கும். தளபதி அரியணை ஏறுவார். அதையெல்லாம் பார்த்து நாம் அகம் மகிழ்ச்சி அடைவோம்.

உருவப்படத்தை எரிக்கும் பா.ஜ.கவினர்
உருவப்படத்தை எரிக்கும் பா.ஜ.கவினர்

நான் ஏற்கெனவே தி.மு.க கரைவேட்டி கட்டியவன். எப்போது வேண்டுமானாலும் கட்டிக்கொள்வேன். யாரும் கொடுத்து கட்ட வேண்டிய அவசியமில்லை” எனப் பேசினார். அவரது இந்தப் பேச்சு, பா.ஜ.க-வுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியினரே கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சிக்குள் அரசகுமாருக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல கமிட்டி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நகர புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாற்றுக் கட்சிகளில் இருந்து 120 பேர் பா.ஜ.க-வில் இணைந்தனர்.

உருவப்படத்தை எரிக்கும் பா.ஜ.க-வினர்
உருவப்படத்தை எரிக்கும் பா.ஜ.க-வினர்

இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும், அக்கட்சியினர் பி.டி.அரசகுமார், தி.மு.க தலைவர் ஸ்டாலினை வாழ்த்திப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிட வலியுறுத்தியும் அரசகுமாரின் உருவப் படத்தை தீயிட்டுக் கொளுத்தி, அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

`காலம் கனியும்; ஸ்டாலின் அரியணை ஏறுவார்!' - பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் பி.டி. அரசகுமார்

தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகப் பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலாளருமான கே.எஸ்.நரேந்திரன், ``பா.ஜ.க துணைத் தலைவர் அரசகுமாரின் பேச்சு, கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயலாகக் கருதப்படுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

உருவப்படத்தை எரிக்கும் பா.ஜ.கவினர்
உருவப்படத்தை எரிக்கும் பா.ஜ.கவினர்

தேசியத் தலைமையிலிருந்து மீண்டும் பதில் வரும் வரை அவர் கட்சியின் சார்பில் எந்த நிகழ்ச்சியிலும், கூட்டங்களிலும், ஊடக விவாதங்களிலும் கலந்துகொள்ளக்கூடாது” என அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.