Election bannerElection banner
Published:Updated:

காவல்துறை அடக்குமுறை... தி.மு.க-வும் சளைத்ததல்ல... நிரூபித்த 2009 உயர்நீதிமன்ற சம்பவம்!

தடியடி
தடியடி

நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கை கால் முறிவு ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அறவழியில் போராடிய மக்களை காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்கும் வீடியோ சமீபத்தில் வெளியானது. அனுமதியின்றி போராடினார்கள், கலைந்துசெல்ல வலியுறுத்தினோம். கலைந்துசெல்ல மறுத்தார்கள்; கூட்டத்திலி ருந்து கற்களை வீசினார்கள். அதனால்தான் தடியடி நடத்தினோம் என அரசின் சார்பில் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், கூட்டத்தில் ஓர் இளைஞனை ஒட்டுமொத்த காவலர்களும் வெறியோடு தாக்கும் வீடியோ நெஞ்சத்தைப் பதறவைக்கிறது.

காக்கிச்சட்டைகளுக்குள் இவ்வளவு குரூரம் ஒளிந்திருக்கிறதா என ஒரு கணம் அச்சம் ஆட்டுவிக்கிறது. காவல்துறையினர்தான் முதலில் வாட்டர் பாட்டிலை வீசினார்கள் என போராட்டக்குழுவின் சார்பில் புகைப்படமும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளன.

ஆளும் அ.தி.மு.க அரசின் இந்த அராஜகத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டன. ''வண்ணாரப்பேட்டையில் போராட்டம் அமைதியாகப் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென தடியடி நடத்த உத்தரவிட்டது யார்? '' என சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

மிகவும் நியாயமான ஒரு கேள்விதான். ஆனால், இந்தக் கேள்வியை எழுப்ப தி.மு.க-வுக்கு தகுதி இருக்கிறதா என்பதற்கு கீழேயுள்ள புகைப்படம் பதில் சொல்லும்.

2009 உயர்நீதிமன்ற சம்பவம்
2009 உயர்நீதிமன்ற சம்பவம்

2008 நவம்பர், ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த நேரம். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், சிறுவர் இல்லங்கள், கோயில்கள், தேவாலயங்கள் என எதையும் பொருட்படுத்தாது சிங்களப் படைகள் குண்டுகளை வீசி மக்களைக் கொன்றொழித்து ரத்த வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்தன. ஒருபுறம், தமிழகக் கட்சிகள் மனிதச்சங்கிலி, பேரணி என அடையாளப் போராட்டங்களை நடத்தி வர, மறுபுறம் படுகொலைக்கு எதிரான போராட்டக்களமாக தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளும் நீதிமன்றங்களும் மாறுகின்றன.

தமிழகம் முழுவதுமாக நடந்த பல போராட்டங்களை அரசு ஒடுக்கினாலும் வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை குறிப்பாக நீதிமன்றத்தில் நடத்தும் போராட்டங்களை அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அரசு அனுமதித்த எல்லையை உடைத்து, போராட்டங்களை தமிழகமெங்கும் விரிவுபடுத்தியதில் வழக்கறிஞர்களின் போராட்டம் முதன்மையாக இருந்தது.

வழக்கறிஞர்கள்மீது இந்தத் தாக்குதலை நடத்த வேண்டும் என்று பல நாள்களாகவே காவல்துறையினர் திட்டமிட்டுவந்துள்ளனர். குறிப்பிட்ட 19-ம் தேதி அன்று, இந்தத் தாக்குதலை நடத்த வேண்டுமென்று திட்டமிட்டதால், கறுப்புப் பேன்ட்டும், வெள்ளைச் சட்டையும் போட்ட வன்முறைக் கும்பலை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டுவந்துள்ளனர். சாக்கு மூட்டையில் கற்களைக் கொண்டுவந்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் இந்தக் கற்கள் கிடையாது. வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கும்போதே, வழக்கறிஞர்களைக் காவல்துறையினர் கைதுசெய்ய முற்பட்டபோதே, வழக்கறிஞர்களைப் போலீஸார் தாக்கத் தொடங்கிவிட்டனர்.
வைகோ

2009, ஜனவரி 29-ம் தேதி, முத்துக்குமார் தீக்குளித்து மரணமடைந்த பிறகு, போராட்டங்கள் உச்ச நிலையை அடைந்தன. மதுரையில் பத்தாயிரம் வழக்கறிஞர்களுடன் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் தொடர்ந்து ஊர்வலம், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்தன. தமிழகம் முழுவதுமுள்ள நீதிமன்றங்களுக்கும் அது பரவுகிறது.

சரியாக பிப்ரவரி 17-ம் தேதி, சிதம்பரம் கோயில் நிர்வாகம் சம்பந்தமாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வருகிறார். தொடர்ந்து, ஈழத்தில் நடைபெற்றுவந்த இனப்படுகொலையை நியாயப்படுத்திப் பேசி வந்ததால், சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கறிஞர்கள் ஏற்கெனவே கடும் கோபத்தில் இருந்தனர். அதன் காரணமாக, சுப்பிரமணியன் சுவாமியை நீதிமன்ற வளாகத்துக்குள் செல்லவிடாமல் தடுத்தனர்.

சுப்பிரமணியன்
சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

அப்போது, சுப்பிரமணியசுவாமியின் மீது தாக்குதல் நடந்தது. அவரைத் தாக்கிய வழக்கறிஞர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுவரை சரியாகப் போய்க்கொண்டிருந்த போராட்டத்தை திசை திருப்புவதற்காகவே சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்ற வளாகத்துக்கு வந்ததாக ஈழ ஆதரவுத் தலைவர்களால் குற்றம் சாட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 19-ம் தேதி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி இல்லாமலேயே ஆயிரக்கணக்கான காவல்துறையினர் நீதிமன்றத்தின் உள்ளே புகுந்தனர். உயர்நீதிமன்றத்தின் அத்தனை வாயில்களையும் பூட்டினர். அதற்குப்பிறகு என்ன நடந்தது என்பதை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் விளக்கினார்.

நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறை செல்வதற்கு தலைமை நீதிபதி அனுமதிக்கவில்லை என்று சொன்னால், அதிகார மையத்தில் உயர் நிலையில் உள்ள ஒருவர்தான் அந்த அனுமதியை வழங்கியிருக்க வேண்டும். மாநகரக் காவல் ஆணையாளர் ராதாகிருஷ்ணன், தொடக்கத்திலிருந்து இறுதிவரை இந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். எனவே, அவருக்கு இத்தகைய ஆணையை பிறப்பித்தது காவல்துறை தலைமை இயக்குநரா அல்லது முதலமைச்சரா என்பதுதான் நம்முன் உள்ள கேள்வியாகும்.
பழ.நெடுமாறன்

''அமைதியான வழியில்தான் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது தடியடி நடத்தி சட்டம் ஒழுங்கைக் காக்கவேண்டிய எந்தத் தேவையும் எழவில்லை. ஆனால், நான்கு வாயில்கள் வழியாக, ஆணையர், இணை ஆணையர் உள்பட 19 அதிகாரிகளின் தலைமையில் காவலர்கள் நீதிமன்றத்துக்குள் புகுந்தனர். வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மட்டுமல்லாது வழக்காடிகள், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடக- பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரின் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து, நீதிபதிகள், ‘காவல்துறையினரை வெளியேறுங்கள்’ என உத்தரவு போடுகின்றனர். அவர்கள் நீதிபதிகள் எனத் தெரிந்தும் வழக்கறிஞர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு நிலையில் இருப்பதாகக் கருதி அவர்களையும் தாக்கியது காக்கிப்படை. நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை மட்டும் தாக்கினால் நீதிபதிகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும், நீதிபதிகளையே தாக்கிவிட்டால்... நாங்கள் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய தேவை இல்லை எனும் அதிகாரத்தை வெளிப்படுத்தவே அது நடத்தப்பட்டது. அது கண்டிப்பாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலே.

தாக்குதல்
தாக்குதல்

ஈழ ஆதரவுப் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும், மத்திய அரசிடம் நல்ல பெயர் வாங்கவும் வழக்கறிஞர் சமூகத்தைத் திட்டமிட்டு ஒடுக்கியது தி.மு.க அரசு. மத்திய அரசும் அப்போதைய தமிழக அரசும் இணைந்து திட்டமிட்டுச் செய்த தாக்குதல்தான் அது. அந்தத் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதுமுள்ள வழக்கறிஞர்களின் சார்பில் சென்னையில் மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் காவல்துறையால் வழக்கறிஞர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என துணை ராணுவம் நீதிமன்றத்துக்குள் வந்தது. தற்போதுவரை துணை ராணுவம் இங்கேதான் இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் அரசியல்களமாக இருக்கக்கூடாது என்பதை எதிர்த்து நடத்தப்பட்ட மிகப்பெரிய வன்முறைத் தாக்குதல் அது. அதற்குப் பிறகுதான், நீதிமன்ற வளாகத்துக்குள் அரசியல் செயல்பாடுகள் இருக்கக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுதந்திரமான அரசியல் மையத்தை அரசியலற்ற இடமாக மாற்றியது பிப்ரவரி 19 தாக்குதல்தான் '' என்றார் அவர்.

தமிழக வரலாறு காணாத அடக்குமுறையை வழக்கறிஞர்கள்மீது ஏவி, மிருகத்தனமாகத் தாக்கிய காவல்துறையினர், உயர் அதிகாரிகள் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். நடைபெற்ற அராஜகத்தின் பின்னணியில் உள்ள சதித் திட்டத்தையும் உண்மையையும் அறிவதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மொத்தத்தில் ஜனநாயகத்தின் மென்னியை முறித்த காவல்துறையின் அடக்குமுறைக்குப் பொறுப்பேற்று, முதலமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
வைகோ
`கன்னத்தில் அடித்தார், பதிலுக்கு நானும் அறைந்தேன்' -பெண் எம்எல்ஏ, ஒ.செ மோதலால் வெளிவந்த பண விவகாரம்

''ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கை கால் முறிவுபட்டு 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்களின் 50-க்கும் மேற்பட்ட கேமராக்களை அடித்து உடைத்தனர் போலீஸார்!’’ என வழக்கறிஞர்கள் தரப்பில் அப்போது சொல்லப்பட்டது.

''தாக்குதல் நடத்தியவர்கள்மீது வழக்கறிஞர்கள் மற்றும் பார்- கவுன்சிலால் வழக்குத் தொடரப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்கு சரிவர ஆஜராகாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இன்றுவரை கொடூரத் தாக்குதல்களை நடத்திய காவலர்கள், அதற்கு உத்தரவிட்ட காவல் அதிகாரிகள்மீது துறைரீதியான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறைந்தபட்சமாகப் பணி இடைநீக்கம்கூட செய்யப்படவில்லை. பாதிக்கபட்ட வழக்கறிஞர்களுக்கு, நீதிமன்ற ஊழியர்களுக்கு, பொதுமக்களுக்கு உரிய இழப்பீடு நிவாரணமோ, அடித்து நொறுக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்களுக்கு நஷ்ட ஈடோ எதுவும் தரப்படவில்லை. எங்களது வழக்கறிஞர்களின் சமூகத்திற்கு எப்போதுமே பிப்ரவரி 19 #கறுப்புதினமே'' என ஆண்டுதோறும் இந்த தினத்தை வழக்கறிஞர்கள் கடைபிடித்துவருகின்றனர்.

கருணாநிதி
கருணாநிதி

தொடர்ந்து, 2010 ஏப்ரல் 25-ம் தேதி அம்பேத்கர் சிலை திறப்புக்காக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார் கருணாநிதி. ''நீதிமன்ற வளாகத்தில் புகுந்து வழக்கறிஞர்களை தாக்கிய பிறகு முதல்வர் கருணாநிதி இந்த விழாவில் பங்கேற்பது சரியல்ல'' என்று வழக்கறிஞர்கள் கறுப்புக்கொடி காட்டினர். வழக்கறிஞர்களின் நடவடிக்கையை எதிர்த்து மிகக் கடுமையான அறிக்கை வெளியிட்டார் கருணாநிதி.

அமைதியாகப் போராடிக்கொண்டிருந்த மக்கள்மீது தடியடி நடத்தியது யார் என இன்று கேள்வி எழுப்பும் ஸ்டாலின், 2009 இதே நாளில் அமைதியாகப் போராடிக்கொண்டிருந்த வழக்கறிஞர்களின்மீது வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்க்க உத்தரவிட்டது யார் எனச் சொல்வாரா?

காவல்துறையைப் பயன்படுத்தி, மக்கள்மீது வன்முறையைப் பிரயோகிப்பதில், ஆட்சிகளும் கட்சிகளும் தான் வேறுவேறாக இருக்கிறதே தவிர, காட்சிகள் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன என்பதையே இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு