Published:Updated:

பல கட்சித் தாவல்... நான்கு முறை எம்.எல்.ஏ... யார் இந்த `உன்னாவ்' குல்தீப் செங்கார்?

மக்களுக்கு உதவி செய்பவர், மனிதாபிமானமிக்கவர் என்ற அடையாளத்துடன் வலம் வந்த உன்னாவ் எம்.எல்.ஏ-வின் உண்மை முகம் பாலியல் குற்றச்சாட்டு வழியாக வெளியே தெரியவந்தது.

உன்னாவ் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார்
உன்னாவ் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார்

உத்தரப்பிரதேசத்தின் 403 எம்.எல்.ஏ-க்களில், குல்தீப் சிங் செங்காரும் ஒருவர். நான்கு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மக்களுக்கு உதவி செய்பவர், மனிதாபிமானி என்பதே செங்காரின் அடையாளமாக இருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 8- ந் தேதி, உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில், முதல்வர் ஆதித்யநாத்தின் வீட்டுக்கு முன் இளம் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அப்போதுதான், குல்தீப்பின் உண்மை முகம் வெளியே தெரியவந்தது. குல்தீப் சிங், தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும் செல்வாக்கு மிகுந்த குல்தீப் மீது போலீஸார் வழக்குப் பதிய மறுக்கிறார்கள் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கதறினார்.

குல்தீப் செங்கார்
குல்தீப் செங்கார்

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்தார். குற்றம் சாட்டிய பெண்ணை குல்தீப்பின் சகோதரர் அதுல் செங்கார், நடுரோட்டில் வைத்து தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிக் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர், ஏப்ரல் 13-ம் தேதி யோகி அரசு, செங்கார் மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. குல்தீப் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

குடியுரிமை சட்டத்திருத்தம்; வலுக்கும் போராட்டங்கள்.. வெவ்வேறு காரணங்கள்! என்ன நடக்கிறது? #CAAProtest

டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில், செங்கார் குற்றவாளி என்று நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதால், போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும். செங்காருக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது. தண்டனை விவரங்களை 20–ம் தேதி நீதிபதி அறிவிக்க உள்ளார். இதனால், கதிகலங்கிப்போன செங்கார், நீதிமன்றத்தில் மனம் உடைந்து அழுதுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் நான்கு முறை எம். எல்.ஏ-வாக இருந்துள்ள செங்கார், 1990-களில் தன் அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் தொடங்கினார். காங்கிரஸ் கட்சியில் பல முறை எம்.எல்.ஏ சீட் கேட்டும் கிடைக்காததால், பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தாவினார். இந்தக் கட்சியில் செங்காருக்கு எம்.எல்.ஏ சீட் கிடைத்தது. 2002- ம் ஆண்டு, முதன் முறையாக உன்னாவ் மாவட்டத்தில் உள்ள சதார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

குல்தீப் செங்கார்
குல்தீப் செங்கார்

கடந்த 2007- ம் ஆண்டு, மீண்டும் கட்சி மாறினார். இந்த முறை முலாயமின் சமாஜ்வாடி கட்சியில் ஐக்கியமானார். இதே, மாவட்டத்தில் உள்ள பங்கார்மா தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிபெற்றார். 2012- ம் ஆண்டு, பகவந்த் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைந்தார். இந்த காலகட்டத்தில், சமாஜ்வாடி கட்சி தலைமையில் இருந்து முலாயம் விலக, அகிலேஷ் தலைவரானார். அகிலேஷ் யாதவுக்கும் செங்காருக்கும் ஒத்துவராத நிலையில், 2017-ம் ஆண்டு மீண்டும் கட்சி தாவினார். இப்போது, பாரதிய ஜனதா கட்சியில் அடைக்கலமானார். கட்சியில் சேர்ந்தவுடனே, தேர்தலில் போட்டியிட செங்காருக்கு வாய்ப்பும் வழங்கியது பாரதிய ஜனதா. அதுவரை, செங்கார் மீது பெரிய அளவில் எந்த குற்றச்சாட்டும் இல்லை. மீண்டும் பங்கார்மா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். பாலியல் குற்றச்சாட்டுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து செங்கார் நீக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும் செங்கார் குடும்பத்தினரும் நெருக்கமானவர்கள். இந்தப் பெண்ணின் தந்தை, குல்தீப்பின் நெருங்கிய நண்பர். இரு குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, பஞ்சாயத்துத் தேர்தல் காரணமாக இருந்துள்ளது. ஷிலா என்ற பகுதியில், நந்தா பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய்க்கு சீட் கேட்டார் குல்தீப்பின் நண்பர். ஆனால் குல்தீப்போ, தன் மனைவி சங்கீதாவை தேர்தலில் போட்டியிடவைத்தார். குல்தீப்பின் செல்வாக்கால் சங்கீதா எளிதாக வெற்றிபெற்றார்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இரு குடும்பத்துக்கும் விரிசல் ஏற்பட இதுவே காரணமாக இருந்துள்ளது. அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதிலும் இரு குடும்பத்துக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில், பழிவாங்கும் விதமாக அந்தப் பெண்ணை செங்கார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். செங்கார் மீது வழக்குப் பதிவு செய்யவே அந்தப் பெண் மூன்று மாதங்கள் போராடினார். செல்வாக்கு மிகுந்த செங்காருக்கு போலீஸின் ஆதரவும் இருந்தது. பிறகு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதினார். தொடர்ந்து, செங்கார் மீதான வழக்கு விரைவில் நடத்தி முடிக்கப்பட்டு, தற்போது குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். செங்காரின் அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது.