Published:Updated:

ஆவியான ரூ.1000 கோடி!

ஆவின் இல்லம்
பிரீமியம் ஸ்டோரி
ஆவின் இல்லம்

பாலை, பாலாக விற்பனை செய்தால்தான் போணியாகும். ஆனால், பாலை பவுடராக மாற்றி விற்பனை செய்ததால் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆவியான ரூ.1000 கோடி!

பாலை, பாலாக விற்பனை செய்தால்தான் போணியாகும். ஆனால், பாலை பவுடராக மாற்றி விற்பனை செய்ததால் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஆவின் இல்லம்
பிரீமியம் ஸ்டோரி
ஆவின் இல்லம்

“முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தனது வருமானத்துக்கு அதிகமாக 73 சதவிகிதம் அளவுக்குச் சொத்துகளைச் சேர்த்திருக்கிறார். மேல் விசாரணை நடைபெறுகிறது” என்று லஞ்ச ஒழிப்புத்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே, ‘1.5 டன் ஆவின் இனிப்புகளை, தீபாவளிக்கு இலவசமாகத் தன் வீட்டுக்குக் கொண்டுசென்றுவிட்டார் ராஜேந்திர பாலாஜி’ என்று பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தினார் இந்நாள் பால்வளத்துறை அமைச்சர் நாசர். அந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாக, லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த பதில் பரபரப்பை எகிற வைத்திருக்கிறது; அ.தி.மு.க தரப்பைக் கிடுகிடுக்க வைத்திருக்கிறது. என்னதான் நடந்திருக்கிறது ஆவினில்? விசாரணையில் இறங்கினோம்...

சென்னையிலுள்ள `தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்’ என்பதுதான் ‘ஆவின்.’ இந்த இணையத்தின் கீழ் 25 மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் வருகின்றன. மாவட்ட ஒன்றியங்களின் கீழே, 12,139 முதன்மை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் இயங்கிவருகின்றன. இந்த முதன்மை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினந்தோறும் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஆவின் பால் பண்ணைகளிலிருந்து பால் பாக்கெட்டுகளாக வெளியாகின்றன. அவை 51 மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு, பால் முகவர்கள் மூலம் மக்களுக்குச் செல்கின்றன. ஆவின் டயட், கிரீன் மேஜிக், நைஸ், பிரீமியம் என நான்கு வகையான பால்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுமட்டுமின்றி, ஆவின் பால் பவுடர், பட்டர், வெண்ணெய், நெய், மில்க்‌ஷேக், தயிர் எனப் பாலால் செய்யப்பட்ட பலதரப்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களும் ஆவின் மூலம் விற்பனையாகின்றன. இதுதான் ‘ஆவின்’ செட்டப். இதில் எங்கே நடைபெற்றது ஊழல்?

ஆவியான ரூ.1000 கோடி!

தேவையற்ற விளம்பரம்... உதிர்ந்து விழுந்த பசு சிலை!

ஆவினில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நம்மிடம் பேசினார், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவர் பொன்னுசாமி. “2012-13, 2013-14, 2016-17 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும்தான் ஆவினில் லாபம் அதிகரித்திருக்கிறது. 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை, ஆவினில் மிகப்பெரிய முறைகேடுகள் அரங்கேறியதால், கடுமையான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில், ஆவின் பால் விற்பனை அதிகரித்திருந்த நிலையிலும்கூட லாபம் கிடைக்கவில்லை. பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கவேண்டிய கொள்முதல் விலையான 600 கோடி ரூபாயைக்கூடக் கொடுக்க முடியவில்லை. இதற்கு முதன்மையான காரணம் நிர்வாகச் சீர்கேடுதான்!

2019-20 நிதியாண்டில், விற்பனைப் பிரிவில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக, சமீபத்தில் ‘பால் கூட்டுறவுகளின் தணிக்கைத்துறை இயக்குநர் அலுவலகம்’ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதாவது, தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம் 1988 விதிகள் 73, 78, 86 ஆகியவற்றுக்கு எதிராக ஆவின் விற்பனைப் பிரிவு செயல்பட்டிருப்பதால் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறது.

உதாரணத்துக்கு, ஸ்டால் விளம்பரங்களுக்காக 3.4 கோடி ரூபாயும், ஸ்பான்ஸர்ஷிப் வகையில் 1.72 கோடி ரூபாயும், டி.வி விளம்பரங்கள் என்கிற வகையில் 2.45 கோடி ரூபாயும் ஆவினிலிருந்து அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இதற்கான எந்த முன் அனுமதியும், இந்த விளம்பரங்கள் சென்று சேர்ந்ததற்கான எந்த அத்தாட்சியும் இல்லை. இதைச் சுட்டிக்காட்டியிருக்கும் அந்த அறிக்கை, ‘தேவையற்ற இந்த விளம்பரச் செலவு மூலமாகப் பல கோடி ரூபாய் நஷ்டமாகியிருக்கிறது’ என்று கூறியிருக்கிறது. கடந்த ஆட்சியில், நந்தனத்திலுள்ள ஆவின் இல்லம் முன்பாக, பசுவும் கன்றும் ஒன்றாக இருக்கும் சிலையை வைத்தார்கள். 4.88 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட இந்தச் சிலை, ஆறே மாதங்களில் உதிர்ந்து விழுந்தது. இதைக் கட்டுமானம் செய்த சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியிருக்கிறது. சில லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட ஒரு சிலையிலேயே இவ்வளவு முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்றால், பல நூறு கோடி ரூபாய் புழங்கும் பாலில் எவ்வளவு நடைபெற்றிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்!

ஆவியான ரூ.1000 கோடி!

200 டன் பால் பவுடர் எங்கே? - அம்பலத்துக்கு வராத முறைகேடு!

பாலை, பாலாக விற்பனை செய்தால்தான் போணியாகும். ஆனால், பாலை பவுடராக மாற்றி விற்பனை செய்ததால் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பத்து லிட்டர் பாலைக்கொண்டு, ஒரு கிலோ பால் பவுடர் தயாரிப்பதற்கான உற்பத்திச் செலவே 310 ரூபாய் ஆகிறது. வெளிச்சந்தையில் இதை 320-க்கு விற்றால்கூட வாங்க ஆளில்லை. இதனால், சுமார் 14,000 டன் பால் பவுடர் விற்பனையாகாமலேயே தேங்கிக் கிடந்தது. இதை ஒரு தனியார் நிறுவனத்துக்கு, கிலோவுக்கு 201 ரூபாய் வீதம் கொடுத்திருக்கிறார்கள். இதில் ஆவினுக்கு, கிலோவுக்கு 109 ரூபாய் நஷ்டம். இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல், உளுந்தூர்பேட்டையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் 200 டன் பால் பவுடர் தயாரித்துக் கொடுக்கும்படி ஆயிரக்கணக்கான லிட்டர் ஆவின் பால் அளிக்கப்பட்டது. ஆனால், பாலை வாங்கிச் சென்ற அந்த நிறுவனம், பால் பவுடரைக் கொடுக்கவே இல்லை. இந்த முறைகேடுகள் அப்படியே அமுங்கிப்போயின.

தீபாவளியை முன்னிட்டு, ஆவினில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், உயரதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் பரிசுப்பொருளாக லெதர் பேக் கொள்முதல் செய்தார்கள். அவற்றை வெளிச்சந்தையைவிட அதிக விலை கொடுத்து வாங்கியதால் 49 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக பால் பண்ணைகள், அசையும் அசையா சொத்துகளை வாங்கவோ, பராமரிக்கவோ 10 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டுமென்றாலோ, சி.எம்.பி.டி.டி (Commissioner for Milk Production and Dairy Development) என்கிற பிரிவிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதைப் பெறாமல் எந்திரங்கள் வாங்கியதிலும், பொறியியல், சிவில் பணிகள் மேற்கொண்டதிலும் சுமார் 1.78 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஆவியான ரூ.1000 கோடி!

பணியிடங்கள் நிரப்பியதில் ரூ.200 கோடி முறைகேடு!

முதலில், ஆவினின் கீழ் 17 மாவட்ட ஒன்றியங்கள்தான் இருந்தன. தேவையே இல்லாமல், ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காகவே புதிதாக எட்டு ஒன்றியங்களை, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உருவாக்கினார்கள். பால் குளிரூட்டும் நிலையங்களைக்கூட ஒன்றியங்களாக உருவாக்கியதுதான் வேடிக்கை. புதிதாக ஒன்றியங்களை உருவாக்கும்போது, அதற்கேற்ப தனி அலுவலகம், பொது மேலாளர், துணைப் பொது மேலாளர் தொடங்கி, அலுவலக ஊழியர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களை உருவாக்க வேண்டும். இப்படி புதிய பணியிடங்களை உருவாக்கி, பணியிடங்களை நிரப்புவதிலும் 200 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது.

உதாரணமாக, மதுரை ஆவின் ஒன்றியத் தலைவராக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவை நியமிக்க முயற்சி நடந்தது. அது சர்ச்சையானதால், மதுரை ஒன்றியத்தைப் பிரித்து, தேனி ஒன்றியத்தை உருவாக்கினார்கள். அதற்கு ஓ.ராஜா தலைவரானார். அவருக்காகவே பணியிடங்களும் நிரப்பப்பட்டன. தேவையற்ற பணியிடங்களுக்கான மாதச் சம்பளம், படியளவு எல்லாவற்றையும் ஆவின் பொறுப்பேற்றாக வேண்டும். இந்த வீண் செலவுக்கு யார் பொறுப்பு?

460 முதுநிலைத் தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களுக்கும், காலியாக இருக்கும் மேலாளர், எக்ஸிகியூட்டிவ், டெக்னீஷியன் உள்ளிட்ட 176 பணிகளுக்கும் 2021 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகத் தேர்வுகளை நடத்தி பணிக்கு எடுத்திருக்கிறார்கள். மேற்கொண்டு 236 பணியிடங்களையும் ஆட்சி முடியும் நேரத்தில் நிரப்பியிருக்கிறார்கள். இதில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்ததால், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இந்த நியமனங்கள் ரத்துசெய்யப்பட்டன. இதில் நடைபெற்றிருக்கும் முறைகேட்டை, தற்போது துறையின் அமைச்சரான நாசர் விசாரித்துவருகிறார்” என்ற பொன்னுசாமியிடம், “தோராயமாக எவ்வளவு ரூபாய்க்கு ஆவினில் இழப்பு ஏற்பட்டிருக்குமென்று நினைக்கிறீர்கள்?” என்று கேட்டோம்.

நாசர்
நாசர்

ஆவியான 1,000 கோடி ரூபாய்!

அதற்கு அவர், “விற்பனைப் பிரிவில் ஏற்பட்ட 100 கோடி ரூபாய் இழப்போடு, பால் பவுடர் வீணடித்த முறைகேடு, புதிய பணியிடங்கள் உருவாக்கியதில் முறைகேடு என எல்லாவற்றையும் கணக்கிட்டால் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவருகிறது. அதேபோல, 2018-19 நிதியாண்டில் மட்டும் 400 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறது பா.கூ.த.இ அலுவலக அறிக்கை. இரண்டையும் கணக்கிட்டால், மொத்தம் 1,000 கோடி ரூபாய் ஆவினில் ஆவியாகியிருக்கிறது. இதற்கு, முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் முழுப் பொறுப்பு. இந்த இழப்பு மற்றும் முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளெல்லாம் வெவ்வேறு இடங்களுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டாலும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஆவின் நிறுவனம் இதுவரை சந்தித்த நஷ்டங்களையும் இழப்புகளையும் ஈடுகட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை ஜப்தி செய்ய வேண்டும். ஆவினில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தற்போதுள்ள 25 ஒன்றியங்களில், மூன்று ஒன்றியங்களுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. ஒரு ஒன்றியத் தலைவர் காலமானதால் அவர் வகித்த பதவி காலியாக இருக்கிறது. மீதமுள்ள 21 ஒன்றியங்களின் தலைவர்களாக இன்னமும் அ.தி.மு.க-வினரே தொடர்கிறார்கள். இவர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும். முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே அறிவாலயத்தில் சந்தித்து மனு கொடுத்தோம். ஆவின் முறைகேட்டைத் தோண்ட ஆரம்பித்தால் இன்னும் ஏராளமான பூதங்கள் கிளம்பும்!” என்று முடித்துக்கொண்டார் பொன்னுசாமி.

பொன்னுசாமி
பொன்னுசாமி

சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் முறையும், மூன்று குடும்பங்களின் ஆதிக்கமும்!

2000-ம் ஆண்டு வரை, ஆவின் பால் தமிழகம் முழுவதுமுள்ள பால் முகவர்கள் மூலமாகத்தான் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது. பிறகு, வளர்ச்சி என்கிற பெயரில் பால் விற்பனை செய்ய, மொத்த விற்பனையாளர்களை ஆவின் நிர்வாகம் நியமித்தது. அதிலும் முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். நம்மிடம் பேசிய ஆவின் மொத்த விற்பனையாளர்கள் சிலர், “சென்னையிலிருந்த 51 மொத்த விற்பனையாளர்களிடமிருந்து பால் விற்பனைத் தொகையைப் பெற முடியவில்லை என்ற காரணத்தைச் சொல்லி, அதிலிருந்து 11 பேரை மட்டும் 2019-ல் தேர்வுசெய்தனர். அவர்களுக்கு ‘சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்’ என்று பெயர். அவர்கள் மூலமாக மட்டுமே சென்னையில் பால் விநியோகம் செய்யப்பட்டுவந்தது.

ஆறு லட்சம் லிட்டர் பால் சென்னையில் மட்டுமே விற்கப்படுகிறது. ஆவின் நிறுவனம் தனது விற்பனை விலையில் லிட்டருக்கு 75 பைசா குறைத்துக் கொண்டுதான் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டுகளுக்குப் பால் விற்பனை செய்கிறது. அவர்கள் மேற்கொண்டு 70 பைசா கூடுதலாக வைத்து எங்களைப் போன்ற மொத்த விற்பனையாளர்களுக்கு விற்கிறார்கள். ஆவின் நிர்வாகம் தனது லாபத்தைக் குறைத்துக்கொண்டு எதற்கு விற்க வேண்டும்? இந்த டீலிங்குக்குப் பின்னால் பல கோடி ரூபாய் புரண்டுள்ளது. ஆவினுக்குச் செல்லவேண்டிய பணத்தை இடையில் சாப்பிட்டவர்கள் யாரென்பதை விசாரிக்க வேண்டும்.

அந்த 11 ‘சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்’களில் சென்னையைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினரின் ஆதிக்கமே அதிகம். சென்னையில் விற்பனையாகும் பாலில், சுமார் மூன்று லட்சம் லிட்டர் பால் இவர்களிடம் மட்டுமே விற்பனைக்குக் கொடுக்கப்படுகிறது. இந்தச் சலுகையை யார் அளித்தார்கள்? சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் முறைக்கு எதிராக, லட்சுமி நாராயணன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. தி.மு.க அரசு அமைந்ததும், ஆவின் எம்.டி-யாக வந்த கந்தசாமி ஐ.ஏ.எஸ் ‘சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்’ முறையை ஒழித்தார். என்றாலும் மீண்டும் இந்த முறையைக் கொண்டுவர பழைய சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டுகள் முயன்றுவருகிறார்கள்” என்றார்கள்.

கந்தசாமி
கந்தசாமி

ஏப்பம்விட்டவர்கள் சிக்குவார்களா?

இது தொடர்பாக விளக்கமறிய பால்வளத்துறை அமைச்சர் நாசரிடம் பேசினோம். “கடந்த ஆட்சியில் ஆவினில் பல்வேறு ரூபங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வருகிறது. அவைமீது விசாரணை நடைபெறுகிறது. தவறு செய்தவர்கள் எவராக இருந்தாலும், சட்டத்தின் முன் அவர்கள் தப்ப முடியாது” என்றார்.

கட்டுரையை இறுதிசெய்யும் நிமிடம்வரை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பலமுறை போனில் தொடர்புகொண்டோம். குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் செய்திகள் அனுப்பினோம். எதற்கும் அவர் பதிலளிக்கவில்லை.

சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் முறை, புதிய பணியிட நியமனங்கள், தேவையற்ற பால் பவுடர் தயாரிப்பு எனப் பல ரூபங்களிலும் ஆவினில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. வளர்ச்சி என்கிற பாட்டைப் பாடி, பல நூறு கோடி ரூபாயை ஆவியாக்கியிருக்கிறது ஒரு கும்பல். முறையாக விசாரணை நடத்தப்படுமா... ஆவின் பாலை உறிஞ்சி ஏப்பம்விட்டவர்கள் சிக்குவார்களா?

பரிதவிப்பில் கால்நடை விவசாயிகள்!

கிராம அளவிலுள்ள பால் கூட்டுறவு சங்க விவசாயிகளிடம் பேசினோம். “ஆவினில் 98 சதவிகிதம் பசும்பால்தான் கொள்முதல் செய்யப்படுகிறது. 8 சதவிகித திடச் சத்தும், 4 சதவிகித கொழுப்புச் சத்துமாக 12 சதவிகித சத்துகள் இருந்தால்தான், ஒரு லிட்டர் பாலுக்கு 32 ரூபாய் விலை என நிர்ணயம் செய்திருக்கிறது ஆவின். திடச் சத்தில் குறைபாடுகள் இருந்தால், லிட்டருக்கான விலையும் குறையும். விவசாயிகள் நேரடியாக ஆவினுக்குப் பாலை எடுத்துச் செல்ல முடியாது. பால்வளத்துறை சார்பில் பால் பத அலுவலர் இருப்பார்கள். அவர்கள்தான் எடைபோட்டு திடச் சத்தைச் சோதிப்பார்கள். அவர்களில் சிலர், மாவட்ட ஒன்றிய சேர்மன்களிலிருந்து அதிகாரிகள் வரை மாதா மாதம் கப்பம் கட்ட வேண்டும். அதற்காக, எங்களிடம் கொள்முதல் செய்யும் பாலில் திடச் சத்துகள் குறைவாக இருக்கின்றன என ஏமாற்றி, விலையைக் குறைத்துவிட்டு, அதே பாலுக்கு ஆவின் நிர்வாகத்திடம் முழுத் தொகையையும் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால்தான் எங்களது வாழ்வாதாரம் மோசமானது” என்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism