Published:Updated:

`என்னையும் சேர்த்துதான் `திராவிட இயக்கம் போட்ட பிச்சை' என்றேன்!'- ஆர்.எஸ்.பாரதி விளக்கம் #Video

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒருவர்கூட நீதிபதியாக முடியவில்லை. ஆனால், இங்கு நிறைய பேர் வந்துள்ளனர். இதெல்லாம் திராவிட இயக்கம்போட்ட பிச்சை என்று என்னையும் சேர்த்துதான் குறிப்பிட்டேன்.

சென்னை அன்பகத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ``தி.மு.க ஒழிந்தால்தான் தமிழகத்துக்கு விமோசனம் என ஹெச்.ராஜா பேசியிருக்கிறார். இந்தியாவிலே தமிழகம் தலைசிறந்த மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்குத் திராவிட இயக்கம்தான் காரணம்" என்றவர், தொடர்ந்து, ``மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதிகூட இல்லை. ஆனால், தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு, வரதராஜனை உட்கார வைத்தார். அதன் பின்னர் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த ஏழெட்டுப் பேர் நீதிபதிகளாக இருந்தார்கள் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என்றார். இவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் அவரை நேரடியாக சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஆலந்தூர் ஒன்றிய சேர்மனாக இருந்த காலத்திலிருந்தே அமைதியானவராகப் பார்க்கப்படும் நீங்கள் திடீரென்று மீடியாக்களை விமர்சித்தது ஏன்?

பல்வேறு பொறுப்புகளின் கீழ் ஏறத்தாழ 50 ஆண்டுக்காலமாகப் பணியாற்றி வருகிறேன். எவ்வளவு சாதுவாக இருந்தாலும், `சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பதுபோலதான் இந்த நிகழ்வும். ஹெச்.ராஜா, தொலைக்காட்சியில் பெரியாரைப் பற்றியும் கலைஞர் பற்றியும் ஒருமையிலும் கீழ்தரமாகவும் பேசியதைக் கேட்டேன். அவர் பேசியதை எளிதில் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த இரண்டு தலைவர்களால்தான் எங்களைப் போன்றவர்கள் படித்துப் பட்டம் பெற்றுள்ளனர் என்றுதான் பேசினேன். மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒருவர்கூட நீதிபதியாக முடியவில்லை. ஆனால், இங்கு நிறையபேர் வந்துள்ளனர். இதெல்லாம் திராவிட இயக்கம்போட்ட பிச்சை என்று என்னையும் சேர்த்துதான் குறிப்பிட்டேன்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

பா.ஜ.க-வுக்கு எதிரான மீடியாக்களும் இருக்கின்றன. அதேபோல தி.மு.க-வுக்கு ஆதரவான டி.வி-க்களும் உள்ளனவே?

நடுநிலை என்ற பெயரில் இருக்கின்ற சில ஊடகங்கள் திட்டமிட்டே தி.மு.க-வின் மதிப்பைக் குறைக்க முற்படுகின்றன. டி.என்.பி.எஸ்.சி-யில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது பரபரப்பாகப் பேசப்படும்போது, தளபதியின் துணைவி கோயிலுக்குச் சென்றது குறித்து விவாதமேடை வைக்கிறார்கள். தி.மு.க-வினரை இந்துக்களுக்கு எதிரானவர்கள் என சித்திரிக்க முயற்சி செய்கின்றனர். இதை மலிவான செயல் அல்லது பணத்துக்காகச் செய்கிறார்கள் என்று குறிப்பிடவே அப்படிக் கூறினேன். வேறு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. எல்லா ஊடகங்களையும் நான் குறிப்பிடவில்லை.

தி.மு.க-வுக்குப் பின்னால் பிரசாந்த் கிஷோர் இருப்பதாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டதால்தான் உங்களுக்கு இவ்வளவு கோபமா?

நிச்சயமாக கிடையாது. டாக்டர் ராமதாஸ், `தி.மு.க-வில் உள்ளவர்களுக்கு மூளையே இல்லை. அதனால்தான் வடநாட்டில் உள்ளவர்களின் மூளையைப் பயன்படுத்துகிறார்கள்' எனக் கூறியிருக்கிறார். இந்தக் கருத்து மக்கள் மத்தியில் குறிப்பாக எங்களுடைய கட்சிக்காரர்கள் மத்தியிலேயே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பிரசாந்த் கிஷோர் இதற்கு முன்னர் கெஜ்ரிவால், நரேந்திர மோடி, நிதிஷ் குமார், ஜெகன் மோகன் எனப் பலருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். அப்போதெல்லாம் டி.வி-யில் போடாமல் தி.மு.க-வுக்கு ஆலோசனை வழங்கும்போது மட்டும் பூதாகரமாகப் பேசுகிறார்கள். அவர்களைப் போல தி.மு.க-வும் பெரிய வெற்றியடைந்துவிடும் என்கிற வயிற்றெரிச்சலில் தவறான நோக்கத்தில் பேசுகிறார்கள்.

`என்னையும் சேர்த்துதான் `திராவிட இயக்கம் போட்ட பிச்சை' என்றேன்!'- ஆர்.எஸ்.பாரதி விளக்கம் #Video

`உங்கள் நாக்கில் சனி உள்ளது' என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறாரே?

என்னுடைய வாய் எப்படிப்பட்ட வாய் என ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சொல்லியிருப்பார். முதன்முதலில் ஜெயலலிதாவை ஜெயிலுக்குப் போ என்று சொன்னவன் நான்தான். அதன்பிறகு பல அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்தோம். ஒவ்வொருத்தராக இன்று நீதிமன்றங்களுக்குச் சென்று வருகிறார்கள். அவருடைய அப்பா, எங்களுடைய கட்சியின் கவுன்சிலராக இருந்தார். அதனால், அவர் முகத்தைப் பார்த்து அவர் பேசுவதைப் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை.

ஆர்.எஸ்.பாரதியின் முழுமையான பேட்டியை வீடியோ வடிவில் காண கீழ்க்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு